சுவாமி விபுலாநந்தரது பிறப்பின் 125 ஆண்டு நிறைவையொட்டிய சுவாமி விபுலாநந்தர் மாநாடு

0
374

சுவாமி விபுலாநந்தரது பிறப்பின் 125 ஆண்டு நிறைவை முன்னிட்டு இந்துமத அலுவல்கள் அமைச்சு, இந்து சமய கலாசார அலுவல்கள் திணைக்களம் என்பன கிழக்குப் பல்கலைக்கழகத்தின் சுவாமி விபுலாநந்தா அழகியல் கற்கைகள் நிறுவகத்துடன் இணைந்து ஏற்பாடு செய்துள்ள சுவாமி விபுலாநந்தர் மாநாடு எதிர்வரும் ஒக்டோபர் மாதம் 05, 06 , 07 ஆம் திகதிகளில் மட்டக்களப்பு சுவாமி விபுலாநந்தா அழகியல் கற்கைகள் நிறுவகத்தில் நடைபெறவுள்ளதாக இந்து சமய கலாசார அலுவல்கள் திணைக்கள பணிப்பாளர் அ.உமாமகேஸ்வரன்தெரிவித்தார்.

சுவாமி விபுலாநந்தா அழகியல் கற்கைகள் நிறுவகத்தில் நேற்றைய தினம் புதன்கிழமை பகல் நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திபபிலேயே அவர் இதனைத் தெரிவித்தார். இந்த ஊடகவியலாளர்சந்திப்பில் திணைக்களத்தின் உதவிப்பணிப்பாளர் இ.கர்ஜின், சுவாமி விபுலாநந்தா அழகியல் கற்கைகள் நிறுவகத்தின் விரிவுரையாளர்கள், திணைக்கள உத்தியோகத்தர்களும் கலந்து கொண்டிருந்தனர்.

இம்மாநாடு சுவாமி விபுலானந்தரின் அறிவு, ஆற்றல்களையும் அவரது பணிகளையும் அவற்றால் தமிழ்கூறு நல்லுலகம் எய்திய பயன்களையும் எடுத்துரைப்பனவாக அமையும். அருளாளர்களும் அறிஞர்களும் சமூகப்பிரமுகர்களும் கலந்து கொண்டு ஆற்றும் உரைகள் கலைஞர்களும் மாணவர்களும் வழங்கும் கலைநிகழ்ச்சிகள், நூல் வெளியீடு, நூற்கண் காட்சி, அறிஞர்கௌரவிப்பு, சுவாமி விபுலாநந்தர் வரலாற்று அறிவுப்போட்டிகளில் வெற்றியீட்டிய  மாணவர்களுக்கான பரிசளிப்பு, கலாசார ஊர்வலம் என்று பல்வேறு சிறப்பம்சங்களைக் கொண்டதாக அமையும்.

விழாவின் முதல்நாளான ஒக்டோபர் 05 ஆம் திகதி வியாழக்கிழமை காலை 9.00 மணிக்கு கல்லடியில் உள்ள சுவாமி விபுலாநந்தரது சமாதியிலிருந்து சுவாமி விபுலானந்தரின்  திரு உருவப்படம் சுவாமி விபுலாநந்தா அழகியல் கற்கைகள் நிறுவகம் வரை எடுத்து வரப்பட்டு நிகழ்வுகள் இராஜதுரை அரங்கில் ஆரம்பமாகவுள்ளன.

மூன்று நாட்கள் நடைபெறவுள்ள இவ்விழாவினை சிறப்பிக்குமுகமாக  கொழும்பு இராமகிருஷ்ண மிஷன் தலைவர் ஸ்ரீமத் சுவாமி சர்வரூபானந்தா மஹராஜ், மட்டக்களப்பு காயத்திரி பீடம் சிவயோகச் செல்வர் சாம்பசிவ சிவாச்சாரியார்,  தென் கைலை ஆதீனம் தவத்திரு அகத்தியர் அடிகளார் ஆகியோர் வருகை தந்து அருளுரை வழங்கவுள்ளனர்.

ஆரம்ப நிகழ்வில், எதிர்க்கட்சித் தலைவர் இரா.சம்பந்தன், சிறைச்சாலைகள் மறுசீரமைப்பு மீள்குடியேற்றம் புனர்நிர்மாணம் மற்றும் இந்து மத அலுவல்கள் அமைச்சர் டி. எம். சுவாமிநாதன் , கல்வி இராஜாங்க அமைச்சர் வே. இராதாகிருஷ்ணன் , முன்னாள் பிரதேச அபிவிருத்தி இந்து கலாச்சார அமைச்சர் செல்லையா இராஜதுரை,  முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர்  பிரின்ஸ் குணராசா காசிநாதர்  ஆகிய அரசியல் பிரமுகர்கள் பிரதம அதிதிகளாக கலந்து சிறப்பிக்கவுள்ளனர்.

திருகோணமலை மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் க.துரைரட்ணசிங்கம், மட்டக்களப்பு மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர்களான சீனித்தம்பி யோகேஸ்வரன், ஞானமுத்து சிறிநேசன், அம்பாறை மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் கவீந்திரன் கோடீஸ்வரன ஆகிய அரசியல் பிரமுகர்களும் சிறப்பு அதிதிகளாக கலந்து சிறப்பிக்கவுள்ளனர்.

அத்துடன், சிறைச்சாலைகள் மறுசீரமைப்பு மீள்குடியேற்றம் புனர்நிர்மாணம் மற்றும்  இந்து மத அலுவல்கள் அமைச்சின் செயலாளர் எந்திரி.பொ.சுரேஷ், புனர்வாழ்வளிப்பு, மீள்குடியேற்ற இராஜாங்க அமைச்சின் செயலாளர் திருமதி. சாந்தி நாவுக்கரசன், யாழ். பல்கலைக்கழக வேந்தர் பேராசிரியர் சி. பத்மநாதன், கிழக்குப் பல்கலைக்கழக வேந்தர் வைத்திய கலாநிதி வேல்முருகு விவேகானந்தராஜா ஆகியோர் உட்பட பேராசிரியர்கள், அறிஞர்கள், கலைஞர்கள், நிர்வாகிகள், விசேட அதிகளாக கலந்து சிறப்பிக்கவுள்ளனர்.

மாநாட்டின் ஓர் அங்கமாக சுவாமி விபுலாநந்தரது யாழ் நூல், மதங்கசூளாமணி மற்றும் கட்டுரைகளும்  கவிதைகளும் தொடர்பாக ஆய்வரங்க அமர்வுகள் இடம்பெறவுள்ளன இதில் பேராசிரியர்கள், விரிவுரையாளர்கள் போன்றோரின் கருத்துரைகள் இடம்பெறவுள்ளன.

கிழக்குப் பல்கலைக்கழகத்தின் சுவாமி விபுலாநந்தா அழகியல் கற்கைகள் நிறுவகத்தின் இசைத்துறை, நடனத் துறை மற்றும் நாடகத் துறையினர் வழங்கும் சிறப்பு கலை பண்பாட்டு நிகழ்வுககளும் அறநெறிப் பாடசாலை மாணவர்களது கலை நிகழ்வுகளும் மாநாட்டை அலங்கரிக்கவுள்ளது.

விசேடமாக, சுவாமி விபுலாநந்தரின் எழுத்தாக்கப்பணிகளும் சேவைகளும் அளப்பரிய பணியினை தமிழ்கூறு நல்லுலகிற்கு வழங்கியுள்ளது. இம்மாநாட்டில் அவரது எழுத்தாக்கப்பணியினைப் போற்றும் வகையில் இந்துசமய கலாசார அலுவல்கள் திணைக்களத்தினால் சுவாமி விபுலாநந்தரது “யாழ் நூல்” , “மதங்க சூளாமணி” சுவாமி விபுலாநந்தரது (தமிழ்) ஆக்கங்களின் தொகுப்பு, சுவாமி விபுலாநந்தரது (ஆங்கில) ஆக்கங்களின் தொகுப்பு,   என்பவற்றுடன் உடுவை.எஸ்.தில்லைநடரசா அவர்கள் தொகுத்த  தமிழிசைக்கு புத்துயிர் அளித்த முத்தமிழ் வித்தகர் சுவாமி விபுலாநந்த அடிகளார் ஆகிய ஐந்து நூல்களின் வெளியீடும் இடம்பெறவுள்ளன.