தேரர்களின் அநாகரிக செயல் பௌத்தர்களுக்கே அவமானம்

0
437

ரோஹிங்கியா அகதிகள் தொடர்பில் நடைமுறையிலுள்ள நிலைப்பாடு எதிர்காலத்திலும் தொடருமென அமைச்சரவை இணைப் பேச்சாளர் அமைச்சர் ராஜித சேனாரத்ன தெரிவித்தார்.

கல்கிசையில் தங்கியிருந்த மேற்படி அகதிகள் தொடர்பில் பௌத்த துறவிகள் செயற்பட்ட விதம் பெரும் வேதனைக்குரியது எனத் தெரிவித்த அமைச்சர், அந்தத் துறவிகள் மட்டுமன்றி வேடிக்கை பார்த்துக்கொண்டிருந்த பொலிஸாரையும் கைதுசெய்ய வேண்டும் என்றும் அவர் தெரிவித்தார்.

தகவல் திணைக்களத்தில் நேற்று (27) இடம்பெற்ற அமைச்சரவை முடிவுகளை அறிவிக்கும் செய்தியாளர் மாநாட்டின் போது அமைச்சரவை இணைப் பேச்சாளர் அமைச்சர் ராஜித சேனாரத்ன இவ்வாறு தெரிவித்தார்.

செய்தியாளர் மாநாட்டின் போது ரோஹிங்கியா அகதிகள் மீது சில பௌத்த மத துறவிகள் தாக்குதல் நடத்திய சம்பவம் தொடர்பில் அரசாங்கம் மேற்கொண்டுள்ள நடவடிக்கை என்ன? என ஊடவியலாளர் ஒருவர் கேள்வி எழுப்பினார். இந்த சம்பவத்தின் போது பொலிஸாரும் வேடிக்கை பார்த்துக்கொண்டிருந்ததையும் அவர் அமைச்சரின் கவனத்திற்கு கொண்டு வந்தார். இதற்கு பதிலளித்த அமைச்சர்: உண்மையில் இச் சம்பவத்தில் குற்றமிழைத்திருந்தால் பௌத்த துறவிகளை மட்டுமல்ல வெறுமனே பார்த்துக்கொண்டிருந்த பொலிஸாரையும் கைதுசெய்ய வேண்டும்.

ரோஹிங்கியா அகதிகள் என்பவர்கள் யார்? அவர்களின் நிலை என்ன? என்பது தொடர்பில் அந்த பௌத்த துறவிகளுக்கு என்ன தெரியும்? எனக் கேட்க விரும்புகின்றேன்.

உண்மையில் ரோஹிங்கியா அகதிகள் 2008 ஆண்டு முதல் இலங்கைக்கு வரத்தொடங்கிவிட்டனர். அப்போது இந்த பௌத்த துறவிகள் என்ன செய்து கொண்டிருந்தனர். அது மஹிந்த ராஜபக்ஷவின் ஆட்சிக் காலமென்பதாலா அவர்கள் மௌனித்திருந்தனர்?

இந்த வகையில் 2008 இல் 55ரோஹிங்கிய அகதிகள் இலங்கைக்கு வந்தனர்.

இவர்கள் 2012 வரை இலங்கையில் தங்கியிருந்தனர். அதன் பின்னர் 2013 இலும் 101 அகதிகள் இங்கு வந்தனர். அவர்கள் 2015 இலேயே மீளத் திருப்பியனுப்பப்பட்டனர். இவர்கள் ஐக்கிய நாடுகள் சபையின் ஆதரவுடனேயே இங்கு தங்கியிருந்தனர்.

இம்முறை ஆண்கள் ஏழு பேர், பெண்கள் ஏழு பேர், குழந்தைகள் 16 பேரென 30 பேர் வந்திருந்தனர். ஒரு கர்ப்பிணித் தாய்க்கு இங்கு வந்தபின்னரே குழந்தை பிறந்துள்ளது. இங்கு அடைக்கலம் தேடி வந்த அகதிகளுக்கு எதிராகவே இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது. புத்த பெருமானின் போதனையில் எங்கு இவ்வாறு கூறப்பட்டுள்ளது என நான் அந்த பௌத்த துறவிகளிடம் கேட்க விரும்புகின்றேன்.

நான் ஒரு பௌத்தன் என்ற வகையில் இது குறித்து பெரும் வருத்தமடைகின்றேன்.

உலகின் ஏனைய நாடுகள் அகதிகளுக்கு அடைக்கலமளித்து அவர்களைப் பாதுகாக்கின்றன. அந்த வகையில் இவர்களும் இலங்கையில் ஐக்கிய நாடுகள் சபையின் ஆதரவுடனேயே தங்கியுள்ளனர். கடந்த முறையும் இங்கிருந்து விட்டு நாம் மீள அனுப்பிய அகதிகளை கனடா போன்ற நாடுகள் விருப்பத்துடன் பொறுப்பேற்றுக்கொண்டன.

எமது நாட்டிலிருந்து வெளிநாடுகளுக்குச் சென்ற 20 இலட்சம் அகதிகளுக்கு ஐரோப்பிய நாடுகள் தஞ்சம் வழங்கி, பாதுகாத்து, உணவளித்து, இருப்பிட வசதிகளையும் வழங்கியுள்ளன.