ஜெனீவாவில் இலங்கைக்கு நவம்பரில் நெருக்கடி

0
387

இலங்கையின் மனித உரிமைகள் விவகாரம் எதிர்வரும் நவம்பர் மாதம் ஜெனீவாவில் விரிவான பரிசீலனைக்கு எடுத்துக் கொள்ளப்படவுள்ளதுடன், அடுத்த 5 வருடங்களுக்கான அமுல்படுத்தலின் நிமித்தம் இதன்போது இலங்கைக்கு பரிந்துரைகளும் முன்வைக்கப்படவுள்ளன.
எதிர்வரும் நவம்பர் மாதம் 6 ஆம் திகதி தொடக்கம் 17 ஆம் திகதி வரை ஜெனீவாவில் நடைபெறவுள்ள ஐ.நா. மனித உரிமைகள் பேரவையின் உலகளாவிய காலக்கிரம மீளாய்வு செயற்குழுவின் 28 ஆவது அமர்விலேயே இலங்கை பற்றிய விவகாரம் பரிசீலனைக்கு எடுத்துக் கொள்ளப்படவுள்ளது.
ஐ.நா.வின் 193 உறுப்பு நாடுகளினதும் மனித உரிமைகள் நிலைமையை மேம்படுத்துவதை நோக்காகக் கொண்ட ஐ.நா. மனித உரிமைகள் பேரவையின் தனித்தன்மை வாய்ந்த பொறிமுறையொன்றாக உலகளாவிய காலக்கிரம மீளாய்வு காணப்படுகிறது.

இந்த பொறிமுறையின் கீழ் ஐ.நா.வின் அனைத்து உறுப்பு நாடுகளினதும் மனித உரிமைகள் நிலைமையானது 5 வருடங்களுக்கு ஒருமுறை மீளாய்வு செய்யப்படுகிறது. அந்த வகையில், வருடாந்தம் நடைபெறும் 3 செயற்குழு அமர்வுகளின் போது வருடமொன்றில் மொத்தமாக 42 நாடுகள் தொடர்பில் மீளாய்வு செய்யப்படுகிறது.
இந்த மீளாய்வின் பெறுபேறாக இறுதி அறிக்கையொன்று நிறைவேற்றப்படுவதுடன், மீளாய்வுக்கு உட்படுத்தப்பட்ட நாடு அடுத்த மீளாய்வுக்கு முன்னதாக நடைமுறைப்படுத்துவதற்கான பரிந்துரைகளும் அந்த இறுதி அறிக்கையில் பட்டியலிடப்பட்டிருக்கும்.

அந்த வகையில், இலங்கை இறுதியாக கடந்த 2012 ஆம் ஆண்டு நவம்பர் மாதம் மீளாய்வுக்கு உட்படுத்தப்பட்டிருந்ததுடன், அச் சந்தர்ப்பத்தின்போது அமுலாக்கத்துக்கான பரிந்துரைகளுடன் இறுதி அறிக்கையும் செயற்குழுவில் நிறைவேற்றப்பட்டிருந்தது.
அந்த பரிந்துரைகளின் அமுலாக்கம் மற்றும் இலங்கையில் மனித உரிமைகள் நிலைவரங்களிலான தற்போதைய முன்னேற்றம் தொடர்பில் உலகளாவிய காலக்கிரம மீளாய்வு செயற்குழுவின் எதிர்வரும் நவம்பர் மாத அமர்வில் பரிசீலிக்கப்படவுள்ளது.
இலங்கை தொடர்பான மீளாய்வு நவம்பர் மாதம் 15 ஆம் திகதி நடைபெறவுள்ளதுடன், நவம்பர் 17 ஆம் திகதி இலங்கை தொடர்பான பரிந்துரைகளுடனான இறுதி அறிக்கை நிறைவேற்றப்படவுள்ளது.
இதேநேரம், எதிர்வரும் 2018 ஆம் ஆண்டு மார்ச் மாதம் நடைபெறவுள்ள ஐ.நா. மனித உரிமைகள் பேரவையின் 37 ஆவது அமர்வில் இலங்கை தொடர்பில் முக்கியமான பல்வேறு விடயங்கள் பரிசீலனைக்கு எடுத்துக் கொள்ளப்படவுள்ளதுடன், மனித உரிமைகளுக்கான ஐ.நா. உயர்ஸ்தானிகரின் இலங்கை தொடர்பான மதிப்பீட்டு அறிக்கையும் இவற்றில் அடங்கும் என்பதும் இங்கு குறிப்பிடத்தக்கது.