நாளை வித்தியா படுகொலை வழக்கின் தீர்ப்பு

0
465

புங்குடுதீவு பாடசாலை மாணவி வித்தியா படுகொலை வழக்கின் தீர்ப்பு நாளை (27) வழங்கப்படவுள்ளது. இந்த வழக்கை விசாரணைக்கு உட்படுத்திய ‘ட்ரயல் அட் பார்’ நீதிபதிகள் குழு இத்தீர்ப்பை வழங்கவுள்ளது.

கடந்த சில நாட்களுக்கு முன்னர் வழக்குத் தொடுநர் தரப்பு சாட்சியங்களின் தொகுப்புரை மற்றும் எதிர்த்தரப்பின் தொகுப்புரை என்பன ட்ரயல் அட் பார் நீதிமன்றத்தில் முன்வைக்கப்பட்டிருந்தன. இரு தரப்பு தொகுப்புரைகளும் முன்வைக்கப்பட்ட பின்னர் தீர்ப்பு இம்மாதம்( 27) அறிவிக்கப்படுமென நீதிபதிகள் குழு குறிப்பிட்டிருந்தது.

நாளைய தினம் வழங்கப்படவுள்ள தீர்ப்பு பெரும் எதிர்பார்ப்பைத் தோற்றுவித்துள்ளது. வித்யா படுகொலை வழக்கில் சந்தேகத்தின் பேரில் கைதுசெய்யப்பட்டுள்ளவர்களில் முதலாம் மற்றும் 9ஆம் எதிரிகள் தவிர்ந்த ஏனையோருக்கு எதிரான குற்றச்சாட்டுக்கள் சந்தேகத்துக்கு இடமின்றி நிரூபணமாகியிருப்பதாக பிரதி சொலிசிட்டர் ஜெனரல் குமார் ரட்ணம் தனது தொகுப்புரையில் குறிப்பிட்டிருந்தார்.

யாழ்ப்பாணம் புங்குடுதீவு 9 ஆம் வட்டாரத்தைச் சேர்ந்த சிவலோகநாதன் வித்தியா எனும் 18 வயது பாடசாலை மாணவி 2015ஆம் ஆண்டு மே மாதம் 13ஆம் திகதி குழுவொன்றினால் கூட்டு வன்புணர்வு உட்படுத்தப்பட்டு படுகொலை செய்யப்பட்டிருந்தார். பாடசாலைக்கு சென்றுவிட்டு திரும்பும்போது இந்தச் சம்பவம் இடம்பெற்றது. இச்சம்பவம் தொடர்பில் பலர் கைதுசெய்யப்பட்டதுடன், 9 பேர் சந்தேகத்தின் பேரில் தொடர்ச்சியாக தடுத்துவைக்கப்பட்டிருந்தனர்.

இவர்களில் சுவிஸ் குமார் என்ற சந்தேகநபர் தன்னை விடுவித்துக் கொள்வதற்கு பலருக்கு இலஞ்சம் கொடுக்க முற்பட்டதாக குற்றச்சாட்டுக்கள் உள்ளதுடன், இக்குற்றச்சாட்டுத் தொடர்பில் யாழ் மாவட்டத்துக்கான சிரேஷ்ட பிரதிப் பொலிஸ்மா அதிபர் லலித் ஜயசிங்க கைதுசெய்யப்பட்டு பிணையில் விடுதலை செய்யப்பட்டுள்ளார்.

வித்யா படுகொலை சம்பவம் நாட்டை உலுக்கியிருந்ததுடன், இதற்கு எதிராக பல பகுதிகளிலும் எதிர்ப்பு ஆர்ப்பாட்டங்களும் இடம்பெற்றன. முதற்தடவையாக சந்தேக நபர்கள் யாழ் நீதிமன்றத்துக்கு அழைத்துவரப்பட்டபோது பாரிய கலகமொன்று இடம்பெற்றிருந்தது. இத்துடன் சம்பந்தப்பட்ட பலர் கைதுசெய்யப்பட்டிருந்தனர்.

இவ்வாறான நிலையில் குறித்த வழக்கை துரிதப்படுத்துவதற்காக ‘ட்ரயல் அட் பார்’ ஒன்றை அமைத்து விசாரணைகள் தொடர்ச்சியாக நடத்தப்பட்டன.

வவுனியா மேல் நீதிமன்ற நீதிபதி பாலசிங்கம் சசிமகேந்திரன் தலைமையில் யாழ்.மேல் நீதிமன்ற நீதிபதியான மாணிக்கவாசகம் இளஞ்செழியன் மற்றும் திருகோணமலை மேல் நீதிமன்ற நீதிபதி அன்னலிங்கம் பிரேம்சங்கர் ஆகியோர் நியமிக்கப்பட்டனர். இந்த வழக்கின் தீர்ப்பு நாளை (27) அறிவிக்கப்படவுள்ளது.