பிரதேசத்திற்கு தேவையான மண்ணை வழங்கியபின்பு, எஞ்சியதை வேறு இடங்களுக்கு வழங்குங்கள்

0
404

(படுவான் பாலகன்)  மண்வளங்கள் உள்ள பிரதேசத்தில் வாழ்கின்ற மக்களுக்கு தேவையான மண்ணை வழங்கிய பின்பு, எஞ்சியிருந்தால் அவற்றினை வேறு இடங்களுக்கு கொடுப்பதற்கு அனுமதிகளை வழங்குமாறு அரசாங்க அதிபர் பி.எஸ்.எம்.சாள்ஸ் குறிப்பிட்டார்.
மண்முனை தென்மேற்கு பிரதேசத்திற்கான விவசாய ஆரம்ப கூட்டம் கடந்த வெள்ளிக்கிழமை நடைபெற்ற போதே மட்டக்களப்பு மாவட்ட சுரங்கம் மற்றும் கனியவள அகழ்வு உத்தியோகத்தரிடம் இதனை தெரிவித்தார்.
வெளியிடங்களுக்கு, வெளிமாவட்டங்களுக்கு மண்கொண்டு செல்லப்படுவதாகும், மண்வளத்தினை கொண்ட மக்கள் அதிகூடிய விலை கொடுத்து மண்ணைப் பெற்றுக்கொள்ளும் நிலையிருப்பதாகவும் மக்கள் குறிப்பிட்டு வருகின்றனர். இதனால் மண்வளம் உள்ள பிரதேசத்திற்கு தேவையான மண்ணை குறைந்த விலையில் அங்குள்ள மக்களுக்கு வழங்குவதுடன், அவ்வாறு அங்குள்ள மக்களுக்கு வழங்கிய பின்பு, மீதியாக இருந்தால் அவற்றினை வெளிபிரதேசங்களுக்கு வழங்குவதற்கான அனுமதியை வழங்குமாறும் தெரிவித்தார்.
இதன்போது கனியவள உத்தியோகத்தர் கருத்து தெரிவிக்கையில், மண்முனை தென்மேற்கு பிரதேசத்தில் இரு இடங்களில் மண் அகழ்வதற்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளது. அவற்றுள் குழுவினமடு கிராமத்தில் ஓரிடத்தில் ஆற்றுமண் அகழ்வுவதற்கும், பனிச்சையடிமுன்மாரி கிராமத்தின் ஓரிடத்தில் நிரப்புமண் அகழ்வதற்கும் அனுமதிகள் வழங்கப்பட்டுள்ளன. அதேவேளை ஆற்றுமண் மண்முனை தென்மேற்கு பிரதேசத்திற்குள்ளே உள்ள மக்களின் பயன்பாட்டிற்காக வழங்கப்பட்டுள்ளதாகவும் குறிப்பிட்டார்.