யுத்­தத்தால் பாதிக்­கப்­பட்ட ஒவ்­வொருவரி­ட­மும் ஒரு கதை உள்­ளது, ஆனால் கேட்­ப­தற்குத்தான் எவ­ருமே இல்­லை…! அருட் தந்தை மைக்கல் லப்ஸ்­லே

0
801

உலக நாடு­க­ளில் யுத்­தத்தால் பாதிக்­கப்­பட்ட மக்­க­ளை மனம் விட்டு கதைக்­கச்­சொல்லி கேளுங்கள் எவ்­­வ­ளவு கதைகள் இருக்­கின்­றன என்­பது தெரி­ய­வரும். அவர்களை கதைக்க விட வேண்­டும் அதன் மூலம் அவர்­களின் காயங்­க­ளை மெது­வாக குண­மாக்­கலாம். வடுக்­களை மறை­யச்­செய்­யலாம் ஆனால் இங்கு எழுந்­தி­ருக்கும் கேள்வி என்­ன­வெனில் அவர்­களிடம் கதைப்­ப­தற்கு எவரும் இருக்­கின்­றார்­களா என்­பது தான். யுத்தம் முடிந்­த­வுடன் வெற்றிகளைப்­பற்­றியும் தோல்­வி­க­ளைப்­பற்­றியும் அர­சாங்­கங்கள் பேசு­கின்­றன ஆனால் பாதிக்­கப்­பட்ட மக்­களை கைவிட்டு விடு­கின்­றனர். அவ்­வாறு பாதிக்­கப்­பட்ட மக்­களைத்­தேடி நான் உலகம் முழுக்க சென்று வரு­கிறேன். யுத்­தங்கள் ,விடு­தலை போராட்­டங்­கள் இடம்­பெற்ற பல நாடு­க­ளைப்­பா­ருங்கள் எவ்­வாறு அவர்கள் மீண்டு வந்­தி­ருக்­கின்­றனர்? கடந்த காலத்தை மீட்­டுப்­பார்த்தே இன்று பல நாடுகள் அமைதி கொண்­டி­ருக்­கின்­றன கடந்த காலத்தில் பாடம் கற்­காத எந்த நாடும் நிரந்­தர அமை­தியை பேண முடி­யாது அதற்கு இலங்­கையும் விதி­வி­லக்­கல்ல என்­கிறார் தென்­னா­பி­ரிக்­காவின் நிற­வெறி மற்றும் இன­ஒ­துக்கல் செயற்­பா­டு­க­ளுக்கு எதி­ராக போரா­டியவரும் ஆபி­ரிக்க தேசிய காங்­கிரஸ் உறுப்­பி­ன­ரு­மான அருட்­தந்தை மைக்கல் லப்ஸ்லே.

கேள்வி: தென்­னா­பி­ரிக்காவின் தற்­போ­தைய நிலைமை என்ன? அங்கு கறுப்­பின மக்கள் ஜன­நா­ய­கத்தை அனு­ப­விக்­கின்­றார்­களா?

பதில்: 1948 ஆம் ஆண்டு உரு­வான நிற­வேறி மற்றும் இன­ஒ­துக்கலுக்கு எதி­ரான போராட்டம் 1994 ஆம் ஆண்டு முடி­வுக்கு வந்­தது. தென்­னா­பி­ரிக்­காவின் வௌ்ளை­யின ஆட்­சி­யா­ளர்கள் தமது அர­சி­ய­ல­மைப்­பி­லேயே கறுப்­பின மக்­களை ஒதுக்கி வைக்க வேண்டும் என்ற அர்த்­தத்தில் சரத்­துக்­களை சேர்த்­தி­ருந்­தனர். இதை உல­கமே அறியும். எனி­னும் 1994 ஆம் ஆண்டு இந்த சரத்­துக்கள் அகற்­றப்­பட்டு மக்கள் ஜன­நா­யகம் நிலை நிறுத்­தப்­பட்­டது. பெரும்­பான்­மை­யி­ன­ராக அங்கு வாழ்ந்து வரும் கறுப்­பின மக்கள் நிற­வேறி தாக்­கு­தல்கள் மற்றும் சித்­தி­ர­வ­தைகள் ஏன் கொலை செய்­யப்ப­டு­வ­தி­லி­ருந்து விடு­தலை அடைந்­துள்­ளனர். மாணவர் கல்­வியில் சம­மான பகிர்­வுகள் ஏற்­பட்­டுள்­ளன. ஆனால் இந்த போராட்டம் முடி­வுக்கு வந்­தது விட்­டது என நாம் இருந்து விட முடி­யாது. இப்­போ­தைய சூழ்நி­லையில் அங்கு பிர­தா­ன­மாக நான்கு பிரச்­சி­னைகள் தலை தூக்­கி­யுள்­ளன. அவை I) ஊழல் II) வறுமை III) தொழி­லின்மை IV) எயிட்ஸ் நோயாளர்கள் அதி­க­ரிப்­பு
ஆகவே அது குறித்து நாம் கவனம் செலுத்த வேண்­டி­யுள்­ளது.

கேள்வி: ஆன்­மீக சேவை­யாற்ற அங்கு சென்ற நீங்கள் எவ்வாறு இன­­ஒ­துக்கல் (apartheid) செயற்­பா­டு­க­ளுக்கு எதி­ராக போராட துணிந்­தீர்­கள்?
பதில்: நியூ­சி­லாந்தில் பிறந்த நான் அவுஸ்­தி­ரே­லி­யாவில் குருத்­துவ கல்­வியை தொடர்ந்தேன் பின்பு எமது அங்­­கி­லிக்கன் அமைப்பின் மூலம் தென்­னா­பி­ரிக்­கா­வுக்கு 1973 ஆம் ஆண்டு சென்றேன். டேர்பன் நகரில் தங்­கி­யி­ருந்த நான் எனது இறை சேவையை முன்­னெ­டுத்த போது மூன்று பிரி­வி­னரை அவ­­தா­னித்தேன். I) ஒடுக்கும் சமூ­கம்  II) ஒடுக்­கப்­ப­டும் சமூ­கம் III) எம்மை போன்ற சாதா­ரண மக்கள்  தென்­னா­பி­ரிக்­கா­­வுக்கு செல்ல முன்­ப­தாக அங்­குள்ள நிலை­மை­களை அறிந்­தி­ருந்தேன் ஆனால் நேர­டி­யாக சென்று பார்க்கும் போது நிலைமை மிக மோச­மா­கவும் பார­தூ­ர­மா­கவும் இருந்­தது. தோலின் நிறத்தை வைத்தே அங்கு ஒவ்­வொன்றும் தீர்­மா­னிக்­கப்­பட்­டன. சரி எது பிழை எது என எனக்­குப்­­பு­ரி­ய­வில்லை. ஒவ்­வொரு நாளும் மக்கள் தூக்­கி­லி­டப்­பட்­ட­னர், அடித்து துரத்­தப்­பட்­டனர், கல்வி உரிமை கேட்டு போரா­டிய கறுப்­பின மாண­வர்கள் சுட்­டுக்­கொல்­லப்­பட்­டனர். நான் எனது மனதில் இறை­வனிடம் சில கேள்விகளை முன்­வைத்தேன். ஒடுக்­கு­ப­வர்கள் சார்ந்து இருப்­பதா ஒடுக்­கப்­ப­டு­ப­வர்­க­ளுக்கு குரல் கொடுப்­பதா என்­பதே அது­வாகும். இறு­தியில் எம் கண் முன்னே ஒரு மக்கள் கூட்டம் விடு­த­லைக்­காக போரா­டிக்­கொண்­டி­ருக்கும் போது அவர்கள் சார்­பாக குரல் என்ற முடி­வுக்கு வந்­தேன். ஒரு பாதி­ரி­யா­ருக்கு இது சவா­லான பணிதான் ஆனால் நான் கற்ற ஆன்மீகம் உணர்த்­திய பாடம் எனலாம்.

கேள்வி: மாண­வர்கள் சார்­பா­க பல போராட்­டங்­களை முன்­னெ­டுத்­த­மைக்கு வௌ்ளை­யின அர­சாங்கத்தின் நெருக்­க­டிகளுக்கு முகங்­கொ­டுத்­தமை தொடர்­பில்?
பதில்: நான் வௌ்ளை­யி­­னத்­த­வ­னாக இருந்­தது தான் பிரச்­சி­னையே. கறுப்­பின மக்­களின் உரி­மைக்­காக எப்­படி ஒரு (White) வௌ்ளை குரல் எழுப்ப முடியும் என்று அவர்கள் நினைத்­தனர். இதன் கார­ண­மாக நான் 1976 ஆம் ஆண்டு டேர்பன் நக­ரி­லி­ருந்து வௌியேற்­றப்­பட்­டேன். ஆபி­ரிக்­காவின் மிகச்­சி­றிய லெசுத்தோ என்ற நக­ருக்கு சென்று எனது இறை­கல்­வியை தொடர்ந்தேன். மட்­டும­ன்றி நெல்சன் மண்­டே­லாவின் ஆபி­ரிக்க தேசிய காங்­கி­ரஸில் உறுப்­பி­ன­ராக இணைந்து அங்­கி­ருந்து இன­­ஒ­துக்­க­லுக்கு எதி­ராக குரல் கொடுக்க தொடங்­கினேன். உலகின் பல நாடு­க­ளுக்கு சென்று ஆபி­ரிக்­காவில் இடம்­பெறும் அட்­டூ­ழி­யங்­களை மக்­க­ளுக்கு எடுத்­துக்­கூறி அதற்­கெ­தி­ராக கிளர்ந்­தெ­ழு­மாறு வலி­­யு­றுத்­தினேன். மக்கள் விடு­த­லைக்கு குரல் கொடுக்­கக்­கூ­டிய விசு­வா­ச­மான சமூ­கங்­களை கட்­டி­யெ­ழுப்­பு­வதே எனது பணி­யாக இருந்­தது.

கேள்வி: வௌ்ளை­ ஆட்­சி­யா­ளர்களின் கொலை முயற்சி குறித்து ?

பதில்: லெசத்தோ தலை­நகர் மசே­­றுவில் நான் தங்­கி­யி­ரு­ந்த போது 1982 இல் பொலிஸாரின் சுற்றி வளைப்பில் 42 பேர் சுட்­டுக்­கொலை செய்­யப்­பட்­டனர். நான் உட­ன­டி­யாக சிம்­பாப்­­வே­விற்கு சென்றேன். 8 ஆண்­டு­களின் பின்னர் 1990 ஆம் ஆண்டு வௌ்ளை­யின அர­சு விடு­தலை வீரர் மண்­டே­லாவை விடு­தலை செய்­தது. சரி­யாக 3 மாதங்கள் கழித்து எனக்கு தபால் பொதி ஒன்று வந்­தது. இரண்டு மத சஞ்­சி­கைகள் கொண்ட பிளாஸ்ரிக் பொதி அது. அதை ஆவ­லாக பிரித்த போது அச்­சம்­பவம் நடந்­தது. உள்ளே பொறுத்­தப்­பட்­டி­ருந்த குண்டு வெடித்­ததில் எனது இரண்டு கைகளும் இரண்டு கண்­களின் பார்­வையும் போனது. ஒரு மனி­த­னுக்கு ஏற்­ப­டக்­கூ­டாத வலி­யிலும் வேத­னை­யிலும் நான் தூக்கி வீசப்­பட்டு கிடந்தேன். சிகிச்­­சை­க­ளுக்­குப்­பி­றகு ஒரு கண்ணில் பார்வை திரும்­பி­யது. நான் இரண்டு வரு­டங்­க­ளுக்கு மேலாக அவு­ஸ்­தி­ரே­லி­யாவில் சிகிச்சை பெற்று மறு­படி மக்­க­ளுக்­காக பணி­யாற்ற புறப்­பட்டேன். போராட்டம் முடி­வுக்கு வந்தும் கறுப்­பின மக்­களின் கடந்த காலங்­களை மீட்­டெடுக்க வேண்­டி­யி­ருந்­தது. அவர்கள் எல்­­லொ­ருக்­குள்ளும் ஒரு கதை இருந்­தது ஆனால் கேட்­ப­தற்கு எவரும் இருக்­க­வில்லை. ஆகையால் நான் கேப் டவுணில் கடந்த கால வடுக்­களை குணப்­ப­டுத்­து­வ­தற்­கான நிறு­வனம் ஒன்றை ( institute for healing of memories) ஆரம்­பித்தேன். அதன் பிறகு பலரும் தமது கதை­களை கூற ஆரம்­பித்­தனர். அவர்­களை ஆற்­றுப்­ப­­டுத்தும் பணி­களில் இன்று வரை ஈடு­பட்டு வரு­கிறேன். இவ்­வாறு சித்­தி­ர­வ­தை­க­ளாலும் யுத்­தத்­தாலும் பாதிக்­கப்பட்ட மக்­களை சந்­திக்க நாடு­க­ளுக்கு சென்று முடி­யு­மா­ன­வரை அவர்­களின் கடந்த கால காயங்­களை குணப்­ப­டுத்தி வரு­கிறேன். ஆம் நான் காய­முற்ற ஒரு குணப்­ப­டுத்­துனன்.

கேள்வி: இலங்­கையில் இடம்­பெற்ற யுத்தம் தற்­போது முன்­னெ­டுக்­கப்­பட்டு வரும் நல்­லி­ணக்க செயற்­பா­டுகள் பற்றி ஒரு விடு­தலை போராளி என்ற பார்­வையில் உங்­களின் கருத்து என்ன?

பதில்: நான் யுத்­தங்­களை வெறுக்­கிறேன் எதற்கு யாருக்­காக இந்த யுத்­தங்கள் என்ற கேள்வி பிறக்கும் போது விடை கிடைக்­காது. இரு தரப்­பினர் மோதிக்­கொள்ளும் போது வெற்றி அல்­லது தோல்வி என்­பது தானே பெறு­பே­றாக இருக்கும் ஆனால் இரு தரப்­பி­ன­ருக்­கு­மி­டையில் உடல்,உள ரீதி­யாக பாதிக்­கப்­பட்­ட மக்களை எல்­லோரும் மறந்து விடு­கின்றோம். அது தான் இலங்­கை­யிலும் இடம்­பெற்­றுள்­ளது. 30 வருட யுத்தம் முடி­வுக்கு வந்தும் பிரச்­சினை ஏன் ஆரம்­பித்­தது என்­ப­தற்­கான மூல கார­ணத்தை (root cause) எவ­ருமே ஆராய வில்லை .மாறாக நல்­லி­ணக்­கப்­பேச்சு வார்த்­தை­க­ளுக்கு நாம் சென்று விட்டோம் . இது நியா­மாக பட­வில்லை. யுத்தம் முடிந்­துள்­ளது துப்­பாக்­கிகள் மட்­டுமே மௌனித்­துள்­ளன ஆனால் போராட்ட உணர்வு இன்னும் மௌனிக்கவில்லை என்­பதை நாம் உண­ர­வேண்டும். ஆகவே நாம் எமது பிள்­ளைகள் அல்­லது பேரக்­கு­­­ழந்­தை­களை மறுபடி ஒரு யுத்­தத்­திற்கு பலி­கொ­டுக்க போகின்­றோமா என்­பதை சிந்­திக்க வேண்டும். பிரச்­சி­னைக்­காக மூல கார­ணத்தை பற்றி பேசாது வரு­டக்­க­ணக்கில் நல்­லி­ணக்க பேச்­சுக்­களை தொடர்­வதில் என்ன அர்த்தம் உள்­ளது? பாதிக்­கப்­பட்ட மக்­களின் கடந்த காலத்தை மீட்­டெ­டுக்க வேண்­டு­­மென்றால் முதலில் அவர்­களைத்தான் பேச விட வேண்டும்.

கேள்வி: அப்ப­டி­யானால் அர­சாங்­கத்தின் தற்­போ­தைய நல்­லி­ணக்க முயற்­சிகள் வெற்­றி­ய­ளிக்­காது என்­கின்­றீர்­க­ளா?

பதில்: வெற்றி தோல்வி என்­பது ஒரு அறைக்குள் அமர்ந்து நான்கு பேர் பேசு­வதில் வரு­வ­தில்லை. அதை மக்கள் மத்­தியில் முன்­னெடுக்க வேண்டும். அதில் சுயா­தீ­னமும் வௌிப்­ப­டைத்­தன்­மையும் இருக்க வேண்டும். இலங்­கையில் 30 வரு­ட­ங்­க­ளாக இடம்­பெற்ற உள்­நாட்டு யுத்தம் முடி­வுக்கு வந்­­துள்­ளது என்பதால் எல்­லாமே முடி­வுக்கு வந்­தது என்­று அர்த்­த­மல்ல, ஏன் யுத்தம் இடம்­பெற்­றது என்ற கேள்­விக்­கான பதிலை அர­சாங்கம் ஆராயவேண்டும் அத­னூ­டா­கவே நல்­லி­ணக்­கத்­திற்கு செல்ல வேண்டும். தென்­னா­பி­ரிக்­காவில் 1994 ஆம் ஆண்டு நிற­வெறி மற்றும் இன ஒதுக்­கல் செயற்­பா­டுகள் முடி­வுக்கு வந்தவுடன் எல்­லாமே முடிந்து விட்­டது என நாம் மௌனிக்கவில்லை. அது தான் பாதிக்­கப்­பட்ட மக்­க­ளுக்­கான ஆரம்­ப­மாக இருந்­தது. கறுப்­பின மக்கள் படு­கொலை செய்­யப்­பட்ட சம்­பவம் குறித்து சுயா­தீன ஆணைக்­கு­ழுக்­களை மக்கள் மத்­தியில் பகி­ரங்­க­­மாக முன்­னெ­டுத்தோம். கடந்த காலத்தை மீட்­­டெ­டுத்தல் என்­பதே எமது தாரக மந்­தி­ர­மாக இருந்­தது. ஆர்­ஜண்­டீனா மற்றும் கொலம்­பியா போன்ற இலத்தீன் அமெ­ரிக்க நாடு­களின் மூலம் நாம் பாடங்­களை கற்­றுக்­கொண்டோம். இதன் கார­ண­மாக சுமார் 23 ஆயிரம் மக்கள் ஆணைக்­கு­ழுக்­களின் முன்­பாக சாட்­சி­ய­ம­ளித்­தனர். இதில் 9 ஆயிரம் பேருக்கு பொது மன்­னிப்பு வழங்­கப்­பட்­டது. . தூண்­டு­தலின் பேரில் தாம் செய்த குற்­ற­ங்­களை ஏற்­றுக்­கொண்­டதால் அவர்கள் மன்­னிக்­கப்­பட்­டனர்.இது­பா­திக்­கப்­பட்ட மக்­க­ளுக்கு நம்­பிக்­கையை ஏற்­ப­டுத்­தி­யது.அமை­தி­யான சூழ­லுக்கு அத்­தி­பா­ர­மி­டப்­பட்­டது. ஆனால் இங்கு பாதிக்­கப்­பட்ட மக்­க­ளின் வடுக்­களை நாம் மறந்து விட்டோம். நான் இரு சாரா­ரையும் சந்­தித்தேன். பாதிக்­கப்­பட்ட மக்கள் மற்றும் புனர்­வாழ்வு அளிக்­கப்­பட்­ட­ போரா­ளிகள். அவர்கள் நம்பிக்­கை­யி­ழந்த தன்­­­மை­யை காணக்­கூ­டி­ய­தாக இருந்­தது.

கேள்வி: அப்­ப­டி­யானால் யுத்­தத்தில் பாதிக்­கப்­பட்ட மற்றும் புனர்­வாழ்­வ­ளிக்­கப்­பட்­ட­வர்­களின் பிரச்­சி­னை­க­ளுக்கு என்ன தான் தீர்வு ?

பதில்: தென்­னா­பி­ரிக்­காவில் நிற­வெறிக்கு எதி­ரான போராட்டம் முடி­வுக்கு வந்­தும் கூட பாதிக்­கப்­பட்­ட­வர்­களின் ரணங்­களை ஆற்­றுப்­ப­டுத்­து­வ­தற்கு இன்னும் நாம் போராட வேண்­டி­யுள்­ளது. ஏனெனில் நிகழ்­கா­லத்தை செழு­மை­யா­க்க எமக்கு கடந்த காலத்தை மீட்­டெ­­டுக்க வேண்­டி­யுள்­ளது. நிற­வெ­றியால் பாதிக்­கப்­பட்­ட­ ஒவ்­வொ­ரு­வ­ரி­டமும் பல கதைகள் உள்­ளன ஆனால் அதை கேட்­ப­தற்கு தான் யாரு­மிருக்­க­வில்லை இப்­போது நாம் அதை கேட்­ப­தற்­காக நான் பய­ணித்­துக்­கொண்­டே இருக்­கி­றேன். இலங்­கை­யிலும் அவ்­வா­றான செயற்­ப­ா­டுகள் தேவை. ஆற்­றுப்­ப­டுத்தல் என்­பது யுத்­தத்தால் பாதிக்­கப்­பட்ட ஒரு தலை­மு­றை­யி­னரை இலக்­காக வைத்து முன்­னெ­டுக்­கப்­­ப­டு­­வ­தல்ல அதை நாம் பல தலை­மு­றை­க­ளுக்கு செய்ய வேண்­டி­யுள்­ளது. ஏனெனில் சிறு­வர்­களும் யுத்­தத்தால் பாதிக்­கப்­பட்­டுள்­ளனர் அந்த பிஞ்சு மனதில் உள்ள வடுக்­களை நாம் ஆற்­றுப்­ப­டுத்­த­வேண்டும். இதை இலங்­கை­யிலும் முன்­­னெ­டுத்தல் அவ­சி­யம். இலத்தீன் அமெ­ரிக்க நாடு­களை பார்த்து நாம் தென்­னா­பி­ரிக்­காவில்செ­யற்­பட்­டதை போன்று உலகில் ஏனைய நாடுகளின் படிப்­பி­னை­களை நாம் கற்­றுக்­கொள்ளல் அவ­சி­யம் .

கேள்வி: தென்­னா­பி­ரிக்­காவிலும் தமி­ழர்­கள் குடி­யேறி 150 வரு­டங்­கா­ள­கின்­ற­னவே நிலைமை எவ்­வாறு உள்­ளது?

பதில்: இது முக்­கியமான விடயம். அங்கு நிறத்தை வைத்தே அனைத்தும் தீர்­மா­னிக்­கப்­பட்­ட­தாக கூறி­னேன் அல்­லவா அங்கு நிறத்­திலும் மூன்று பிரி­வினர் இருந்­தனர். அதா­வது வௌ்ளை­யி­னத்­த­வர்கள், கறுப்­பி­னத்­த­வர்கள் மற்­றும் இடைப்­பட்ட நிறத்­தினர். ஆங்­கி­லத்தில் White ,Black , Coloured . இந்­திய வம்­சா­வ­ளி­யினர் இடைப்­பட்ட நிறத்­தி­ன­ராக இருந்­தாலும் கறுப்­பி­னத்­த­வர்­க­ளோடு சேர்ந்து போரா­டி­னார்கள். ஆதலால் இன்று அவர்கள் அங்கு அர­சாங்­கத்தின் பல உயர்­ப­த­வி­க­ளிலும் வர்த்­தக செயற்­பா­டு­க­ளிலும் பிர­கா­சிக்­கின்­றனர். ஆனால் இலங்­கையில் நான் மத்­திய மலை நாட்­டிற்கு சென்ற போது நான் கேள்வி பட்ட கதை வேறு. அதை நேரிலும் அறிந்து வியப்­புற்றேன். இங்கு இந்திய வம்­சா­வ­ளி­யினர் வருகை தந்து 200 வரு­டங்­க­ளா­கின்­றன ஆனால் இன்னும் இவர்­களின் உழைக்கும் வர்க்­க­மாக இருப்­ப­வர்கள் வேத­னத்­திற்கும் குடி­யி­ருப்­புக்கும் போராடி வரு­கின்­றனர். இது இன்னும் அடிமை நிலை­மை­யையே காட்டி நிற்­கின்­ற­து.

கேள்வி: எவ்­வாறு அப்படி கூறு­கின்­றீர்கள் ?

பதில்: நான் கேள்வி பட்ட நாளி­லி­ருந்து இலங்­கை­ பொரு­ளா­தா­ர­மா­னது தேயிலை தொழிற்­று­றையில் தங்கி வளர்ந்த நாடு.ஆனால் அதை பெற்­றுத்­த­ரு­ப­வர்கள் இன்னும் வேத­னத்­திற்­காக போரா­டு­கி­றார்கள். இதே நிலைமை தென்­னா­பி­ரிக்­காவின் சுரங்­கத்­தொ­ழி­லா­ளர்­க­ளுக்கு இருக்­கின்­றது. அந்­நாட்டின் பொரு­ளா­தாரமானது தங்கம் மற்றும் வைரச்­சு­ரங்­கங்­களில் தங்­கி­யுள்­ளது. அவர்கள் தொடர்ந்தும் ஏழை­க­ளா­கவே இருக்க அவர்­களை வைத்து இத்­து­றையில் ஈடு­பட்­டி­ருப்­ப­வர்கள் தன­வந்­தர்­க­ளாக இருக்­கின்­றனர். நான் என்ன நினைக்­கின்­றேன் என்றால் தொழி­லா­ளர்­க­ளுக்கு அவர்­களின் பிரச்­சி­னைகள் துன்­பங்கள் நன்­றா­கவே தெரி­­கின்­றன ஆனால் அதை அவர்கள் ஏற்­றுக்­கொள்ள வேண்டும். அப்­படி ஏற்­றுக்­கொண்டு சிந்­தித்தால் அவ்­வட்­டத்­தி­லி­ருந்து வௌியே வர­லாம். நிற­வெறி ,இன ஒதுக்கல் பார­பட்­சத்­தி­லி­ருந்து தென்­னா­பி­ரிக்க கறுப்­பின மக்­கள் மீட்­டெ­டுக்­கப்­பட்­டாலும் இன்னும் இவ்­வா­றான சில சம்­­ப­­வங்கள் நடந்து கொண்­டி­ருக்­கின்­றன. 2012 ஆம் ஆண்டு இவ்­வாறு வேதன உயர்வு கேட்டு போராட்­டத்தில் ஈடு­பட்ட தொழி­லா­ளர்கள் 30 பேர் வரை பொலி­ஸாரால் சுட்­டுக்­கொலை செய்­யப்­பட்­டனர்.

கேள்வி: இலங்­கையின் நல்­லி­ணக்க முயற்­சி­க­ளுக்கு தென்­னா­பி­ரிக்கா உதவ தயா­ரா?

பதில்: நிச்­சி­ய­மாக ஏனென்றால் இதை நான் இதற்கு முன்பு இங்­கு வருகை தந்த நேரம் கூட கூறி­யி­ருந்தேன். புதிய தென்­னா­பி­ரிக்­காவை எவ்­வாறு நாம் அருகில் உள்ள நாடு­க­ளைப்­பார்த்து உரு­வாக்­கி­­னோமோ அதே போன்று பல நாடு­களிலிருந்து விடயங்­களை கற்­றுக்­கொள்ள வேண்­டி­யுள்­ளது.

நன்றி – வீரகேசரி 21.09.2017