சுவிசில் அறிவு ஆய்வாளர் வளாக ஆண்டு விழா

0
762

சுவிஸ் அறிவு ஆய்வாளர் வளாகத்தின் முதலாவது ஆண்டு கலைவிழாவும் பரிசளிப்பும் அண்மையில் சொலத்தூர்ண் மாநகரில் வெகு சிறப்பாக நடைபெற்றது. அமைப்பின் நிறுவனர் யோகேந்திரன் தலைமையில் நடைபெற்ற விழாவில் உலக சமுதாய சேவா சங்கத்தின் சர்வதேச இணைப்பாளர்களான பாலச்சந்திரன் ஜெயந்தி தம்பதிகள் முதன்மை விருந்தினர்களாகக் கலந்து கொண்டனர்.
மயூரன் சண்முகராஜா வரவேற்புரை நிகழ்த்தினார். திருமதி ஜெயந்தி பாலச்சந்திரன், பேர்ண் வள்ளுவன் பாடசாலை முதல்வர் பொ. முருகவேள், ஆசிரியர் சண்முகராஜா ஆகியோர் சிறப்புரை நிகழ்த்தினர். நிகழ்வில் சுவிஸ் நாட்டு மொழிகளிலும், ஆங்கிலம் மற்றும் சிங்களத்திலும் அமைப்பின் கொள்கைகளை மாணவியர் விளக்கியமை சிறப்பு அம்சமாக விளங்கியது.
கலை நிகழ்ச்சிகளில் பேச்சு, கவிதை, நாடகம் என்பவற்றுடன் விங்ஞானத்தின் வளர்ச்சி ஆக்கப் பாதைக்குச் செல்கிறதா? அழிவுப் பாதைக்குச் செல்கிறதா? என்ற தலைப்பிலான பட்டி மன்றமும் இடம்பெற்றது.
சிறப்பு நிகழ்வாக துரை சுவேந்தி அவர்களின் கண்ணம்மா (முகநூலில் முகம் புதைத்த சிறுகதைகள்) என்ற நூல் வெளியீடும் இடம்பெற்றது.
அறிவு ஆய்வாளர் வளாகம் எனும் தொண்டு நிறுவனம் புலம்பெயர் தமிழ் சிறார்களுக்கான கல்விப் பணியை மேற்கொண்டு வருகின்றது. இதன் மூலம் திரட்டப்படும் நிதி தாயகத்தில் பல்வேறு உதவித் திட்டங்களுக்காகச் செலவிடப்பட்டு வருகின்றது. சம காலத்தில் தாயகத்தின் பல்வேறு மாவட்டங்களிலும் சிறார்களின் கல்வி அபிவிருத்திச் செயற்பாடுகளையும் இந்த நிறுவனம் மேற்கொண்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது..