மட்டக்களப்பு மாநகரை துரிதமாகத் துப்புரவு செய்யும் பணியில் சுமார் 100 நகர சுத்தித் தொழிலாளர்கள்

0
404
மட்டக்களப்பு  மாநகரை துரிதமாகத் துப்புரவு செய்யும் பணியில் சுமார் 100 நகர சுத்தித் தொழிலாளர்கள் 12 மணிநேரக் கடமையில் ஈடுபடுத்தப்பட்டுள்ளதாக மாநகர ஆணையாளர் வெள்ளத்தம்பி தவராஜா தெரிவித்தார்.
மட்டக்களப்பு மாநகரக் கழிவுகளை திருப்பெருந்துறையில் உள்ள திண்மக்கழிவு முகாமைத்துவ நிலையத்தில் கொட்டுவதற்கு நீதிவான் நீதிமன்றம் விதித்திருந்த இடைக்காலத் தடையை மட்டக்களப்பு மேல் நீதிமன்றம் புதன்கிழமை நீக்கியதையடுத்து இந்த துரித துப்புரவுப் பணிகள் நகரெங்கும் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக அவர் மேலும் தெரிவித்தார்.
இதற்கென தமது மாநகர ஊழியர்கள் அர்ப்பணிப்புடன் உள்ளார்கள். வழமையாக காலை 6 மணிதொடக்கம் பிற்பகல் 2 மணிவரை கடமை புரியும் ஊழியர்கள் தற்போதைய அவசர சூழ்நிலை காரணமாக காலை 6 மணி தொடக்கம் மாலை 6 வரை கடமை புரியவுள்ளார்கள். இதற்கென மேலதிக நேர ஊதியத்தையும் அவர்கள் பெறுவார்கள்.
தேங்கிக் கிடக்கும் மாநகரக் கழிவுகள் பூரணமாக சுத்தம்  செய்யப்படும் வரை இப்பணி தொடரும்.
அதுபோல மட்டக்களப்பு மாநகரப் பிரிவுக்குள் வாழும் மக்களும் வரியிறுப்பாளர்களும் கடந்த சுமார் ஒரு மாதகாலமாக பல்வேறு அசௌகரியங்களுடன் பொறுமையாக தமது இயல்பு நிலையைக் கடைப்பிடித்து வந்தனர்.
மட்டக்களப்பு மேல் நீதிமன்றம் இடைக்காலத் தடை உத்தரவை நீக்கியது மட்டக்களப்பு மாநகர மக்களுக்குக் கிடைத்த வெற்றியாகும்.
தொடர்ந்தும் எத்தகைய இடைஞ்சல்கள் தடைகள் வந்தாலும் மக்கள் நகரைத் துப்புரவாக வைத்திருப்பதில் பூரண ஒத்துழைப்பையும் அர்ப்பணிப்பையும் மாநகர சபைக்குத் தரவேண்டும் என அவர் கேட்டுக் கொண்டார்.
திருப்பெருந்துறையில் உள்ள திண்மக்கழிவு முகாமைத்துவ நிலையத்தில் கடந்த மாதம் 22ஆம் திகதி திடீரென தீ பரவத் தொடங்கியதை அடுத்து அப்பகுதியில் உள்ள மக்கள் அங்கு குப்பைகள் கொட்டுவதற்கு எதிர்ப்பு தெரிவித்தும் கழிவுகளைக் கொட்டுவதை தடுக்குமாறும் மட்டக்களப்பு நீதிவான் நீதிமன்றில் வழக்குத் தாக்கல் செய்திருந்தனர்.
அதனடிப்படையில் செப்ரெம்பெர்  28ஆம் திகதி வரையில் அப்பகுதியில் திண்மக்கழிவுகளை கொட்டுவதற்கு மட்டக்களப்பு நீதிவான் நீதிமன்றத்தினால்  இடைக்கால தடை உத்தரவும் விதிக்கப்பட்டிருந்தது.
இந்த தடை காரணமாக மட்டக்களப்பு நகரில் கழிவுகளை அகற்றுவதை மட்டக்களப்பு மாநகரசபை இடைநிறுத்தியது. அதன் விளைவாக மட்டக்களப்பு மாநகரம் பெரும் சுகாதார நெருக்கடியை எதிர்நோக்கி வந்தது.
குப்பை கொட்டுவதற்கு விதிக்கப்பட்டுள்ள தடையினை நீக்குமாறு மட்டக்களப்பு மாநகர மட்டக்களப்பு மாநகர ஆணையாளரால் மட்டக்களப்பு  மேல் நீதிமன்றில் தாக்கல் செய்யப்பட்ட மனுமீதான விசாரணையை புதன்கிழமை 20.09.2017 எடுத்துக் கொண்ட மட்டக்களப்பு மேல் நீதிமன்ற நீதிபதி எம்.வை.எம். இர்ஸதீன் குறித்த தடையுத்தரவினை நீக்கியுள்ளதுடன் இது தொடர்பான விசாரணை எதிர்வரும் 04ஆம் திகதிக்கு  எடுத்துக்கொள்ளப்படும் எனவும் உத்தரவிட்டுள்ளார்.