முன்னாள் ஜனாதிபதி சந்திரிகா மட்டக்களப்புக்கு விஜயம்

0
1227
முன்னாள் ஜனாதிபதியும் தேசிய ஒருமைப்பாட்டுக்கும் நல்லிணக்கத்திற்குமான அலுவலகத்தின் தலைவியுமான சந்திரிகா பண்டாரநாயக்க குமாரதுங்க இம்மாதம் 21ஆம் திகதி வியாழக்கிழமை மட்டக்களப்புக்கு விஜயம் செய்கிறார்.
மட்டக்களப்புக்கு விஜயம் செய்யும் முன்னாள் ஜனாதிபதி சந்திரிகா பண்டாரநாயக்க குமாரதுங்க மட்டக்களப்பு மாவட்டத்தில் தேசிய ஒருமைப்பாட்டுக்கும் நல்லிணக்கத்துக்குமான அலுவலகத்தினால் மாவட்டத்தில் நடைமுறைப்படுத்தப்பட்ட, சமூக, பொருளாதார மேம்பாட்டுத்திட்டத்தின் கீழ் கடந்த வருடம் முதல் மேற்கொள்ளப்பட்டு வரும் அபிவிருத்தி திட்டங்களைப் பார்வையிடுவதுடன், வாழ்வாதார உதவி வழங்கல் மற்றும் உதவி பெற்ற மக்களுடன் கலந்துரையாடல்களையும் நடத்தவுள்ளார்.
மண்முனை தென்மேற்கு பிரதேச செயலகப்பிரிவிலுள்ள குளுவினமடு கிராமத்தில் நடைபெறும் பிரதான நிகழ்வில் கலந்து கொள்ளும் முன்னாள் ஜனாதிபதி செங்கல் உற்பத்தித் தொழிலாளர்களுக்கான வாழ்வாதார தொழில் உபகரணங்கள் வழங்குவார். அத்துடன், ஆடு வளர்ப்புக்கென பயனபளிகளுக்கு ஆடுகளும் வழங்கிவைப்பார்.
மட்டக்களப்பு மாவட்ட அரசாங்க அதிபர் திருமதி பி.எஸ்.எம்.சார்ள்ஸ் தலைமையில் நடைபெறும் இந் நிகழ்வில், பிரதேச செயலாளர்கள், மாவட்டத்தின் சகல திணைக்களத் தலைவர்கள், அதிகாரிகளும் கலந்து கொள்ளவுள்ளனர்.
அடுத்ததாக தேசிய ஒருமைப்பாட்டுக்கும் நல்லிணக்கத்திற்குமான அலுவலகத்தின் நிதியொதுக்கீட்டில் புனரமைக்கப்பட்ட மண்முனை தென்மேற்கு பிரதேசத்துக்குட்பட்ட நீறுபோட்டசேனை குளத்தினை விவசாய அமைப்புகளிடம் விவசாய நடவடிக்கைகளுக்காக கையளிப்பார். அடுத்து, மாவடிமுன்மாரி பிரதேசத்தில் அமைக்கப்பட்டுள்ள மகப்பேற்று நிலையத்தினையும் திறந்து வைக்கவுள்ளார் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
தேசிய ஒருமைப்பாட்டுக்கும் நல்லிணக்கத்துக்குமான அலுவலகத்தினால் 2016ஆம் ஆண்டு மட்டக்களப்பு மாவட்டத்தின் மீள்குடியேற்றப்பிரதேசங்களான மண்முனை மேற்கு, கோரளைப்பற்று வடக்கு, கோரளைப்பற்று தெற்கு, மண்முனை தென்மேற்கு, கோரளைப்பற்று ஆகிய 6 பிரதேச செயலாளர் பிரிவுகளிலும் செங்கல் மற்றும் சீமெந்து கல் உற்பத்தித் துறையை மேம்படுத்தல்,  இயற்கை உர உற்பத்தி, மரக்கன்றுகள் வழங்கல் ஆகிய திட்டங்கள் முன்னெடுக்கப்பட்டன. இதற்கென, 15.3 மில்லியன் ரூபா நிதி ஒதுக்கப்பட்டிருந்தது.
அதே நேரத்தில், 2017ஆம் ஆண்டு, இயற்கை முறையிலான விவசாயப்பண்ணைத்திட்டம், பாடசாலைகளுக்கான வேலைத்திட்டங்கள், விவசாயத்துறை சார் திட்டங்களுக்காக 98.5 மில்லியன் ரூபா ஒதுக்கப்பட்டுள்ளது.
இலங்கையின் வடக்கு கிழக்கு மாகாணங்களின் சகல மாவட்டங்களிலும் மீள்குடியேற்றப்பிரதேசங்களில் தேசிய ஒருமைப்பாட்டுக்கும் நல்லிணக்கத்துக்குமான அலுவலகத்தினால் இப்பிரதேச மக்களின் வாழ்வாதார, போருளாதார, கல்வி மேம்பாடுகளை நோக்காகக் கொண்டு பல்வேறு திட்டங்கள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.