அருளினியனின் கேரள டயரீஸ் மட்டக்களப்பு வெளியீடு

0
351

 

யாழ்ப்பாணத்தின் குப்பிளானில் பிறந்து யாழ்.இந்துக் கல்லூரியில் கல்வி பயின்று பெங்களுர் பல்கலைக்கழகத்தில் உயர் கல்வியைக் கற்று தற்போது ஒரு பயண ஊடகக்காரராக செயற்பட்டுவரும் அருளினியனின் கேரள டயரீஸ் மட்டக்களப்பு வெளியீடு நேற்றைய தினம் ஞாயிற்றுக்கிழமை மாலை மட்டக்களப்பு பொது நூலக கேட்போர் கூடத்தில் மட்டக்களப்பு பெரியார் வாசகர் வட்டத்தின் ஏற்பாட்டில் நடைபெற்றது..
பெரியார் வாசகர் வட்டத்தின் ஏற்பாட்டாளர் எஸ்.திலிப்புமார் தலைமையில் நடைபெற்ற இந்த வெளியீட்டு நிகழ்வில் மட்டக்களப்பின் மூத்த, பிரபல, இளம் எழுத்தாளர்கள், மற்றும் வாசகர்களும் கலந்து கொண்டனர்.
நிகழ்வில், எழுத்தாளர் மணிசேகரன் கேரள டயரீஸ் வேர்தேடுவோம் நூலுக்கான அறிமுகத்தினை வழங்கினார்.
ஓய்வு பெற்ற பேராசிரியர் சி.மௌனகுரு, மூத்த எழுத்தாளர் எஸ்.எல்.எம்.ஹனிபா ஆகியோர் சிறப்புரைகளை வழங்கினர். இறுதியில் நூலாசிரியர் அருளினியன் ஏற்புரை வழங்கினார்.
பல்வேறு விமர்சனங்களுக்கும் பிரச்சினைகளுக்குமுள்ளான கேரள டயரீஸ் – வேர் தேடுவோம் நூல் ஈழத்துக்கும் கேரளத்துக்குமிடையிலான தொடர்புகளை பல்வேறு பரிமாணங்களில் முன்வைக்கிறது.
இந் நூலின் முதல் வெளியீடு யாழ்ப்பாணத்தில் நடைபெற்றிருந்தது. அங்கு நூல்  வெளியிட்டுக்கு பாடசாலை மண்டபம் மறுக்கப்பட்ட நிலையில் வெளியீடு நடைபெற்றிருந்தது. அதனையடுத்து, கொழும்பில் வெளியீடு நடைபெறவிருந்த நிலையில் தமிழச்சங்கத்தில் நிகழ்வுக்கு அரை மணிநேரம் முன்பாக மண்டபம் மறுக்கப்பட்டு பின்னர் இராமகிருஸ்ண மண்டபத்தில் நிகழ்வு நடத்தப்பட்டிருந்தது என்பதும் குறிப்பிடத்தக்கது.