முதல்வர் நஸீர் அஹ்மத் பகிரங்க மன்னிப்புக் கோரவேண்டும் – அ.அஸ்மின்

0
481

எம்.எல்.லாபிர்


தேசிய கலந்துரையாடல் மற்றும் அரசகரும மொழிகள் அமைச்சர் கௌரவ மனோ கணேசன் அவர்கள் ஒரு இனவாதி; என்ற கருத்தை கிழக்கு மாகாண முதலமைச்சர் கௌரவ நஸீர் அஹ்மத் அவர்கள் முன்வைத்ததாக ஒரு சில ஊடக்கங்கள் வாயிலாக அறியக் கிடைத்தது.

அவ்வாறு கிழக்கு முதலமைச்சர் கருத்து வெளியிட்டிருப்பாராக இருந்தால் அது கண்டிக்கப்படவேண்டியதாகும், அதற்காக முதல்வர் ஹாபிஸ் நஸீர் அஹ்மத் அவர்கள் பகிரங்கமாக மன்னிப்புக்கோரவேண்டும்; என்று வடக்கு மாகாணசபை உறுப்பினர் கௌரவ அய்யூப் அஸ்மின் அவர்கள் தெரிவித்தார். அமைச்சர் மனோ கணேசன் அவர்களை ஒரு இனவாதி என்று கிழக்கு முதலமைச்சர் குறிப்பிட்டுள்ளாரே இதுகுறித்து என்ன கருதுகின்றீர்கள், என்று வினவியபோதே அவர் இவ்வாறு குறிப்பிட்டார், அவர் மேலும் குறிப்பிடுகையில்…

பொதுவாக இலங்கையில் இனவாதம் மலிந்துவிட்டது; இதுவே இந்த நாட்டின் முன்னேற்றத்திற்கு ஒட்டுமொத்த சவாலாக இருக்கின்றது. அதேபோன்றுதான் வடக்குக் கிழக்கிலும் இனவாதம் முன்னைய காலங்களை விடவும் முனைப்படைந்திருக்கின்றது, இது ஆபத்தான சூழ்நிலையாகும். இவ்வாறான சூழ்நிலையில் முஸ்லிம் தலைவர்கள் ஏனைய சமூகத்தலைவர்களோடு நல்லிணக்கமாக செயற்படுவதற்கு முயற்சிக்கவேண்டும், அமைச்சர் மனோ கணேசன் அவர்கள் சமூக நல்லிணக்கத்திற்காக அர்ப்பணிப்போடு செயலாற்றும் ஒருவராவார், நான் அறிந்த காலம் முதல் அவர் இனவாதியாக செயற்பட்ட ஒருவர் அல்ல; இந்த நாட்டிலே இனவாதத்தை பச்சையாகக் கக்கும் பலர் இருக்கின்றார்கள் அவர்களை எல்லாம் விட்டுவிட்டு மனோ கணேசன் அவர்களை இனவாதியாக காட்டியிருப்பது வேடிக்கையானதாகும்.

குறிப்பாக வடக்குக் கிழக்கில் தமிழ் முஸ்லிம் மக்களுக்கிடையிலான உறவுகள் மோசமாகப் பழுதடைந்திருக்கின்றது, இந்நிலையில் கிழக்கு முதலமைச்சர் முற்போக்கானவராக செயற்படவேண்டும், கிழக்கில் முஸ்லிம் ஒருவரை நாம் முதலமைச்சராக ஏற்றுக்கொள்வோம் என்கின்ற தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் கருத்தை அவர்கள் நஸீர் அஹமதை முதலமைச்சராக்கியதன் மூலம் உண்மைப்படுத்தியிருக்கின்றார்கள்.

தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பெரும்பான்மை ஆதரவுடனேயே கிழக்கில் இன்று முஸ்லிம் முதலமைச்சர் ஒருவர் இருக்கின்றார், பலர் இதனை மறந்துவிட்டே அல்லது தெரிந்துகொள்ளாமலேயே கருத்துக்களை முன்வைக்கின்றார்கள், முதலமைச்சர் ஹாபிஸ் நஸீர் அஹ்மத் அவர்கள் தமிழ் முஸ்லிம் உறவை மேம்படுத்துவதில் அர்ப்பணிப்போடு செயற்படவேண்டும் என்பதே எமது எதிர்பார்ப்பு, மாற்றமாக தமிழ் முஸ்லிம் உறவில் விரிசல் ஏற்படும் விதமாக அவர் செயற்படக்கூடாது.

என்றும் மாகாணசபை உறுப்பினர் அஸ்மின்  கருத்துத் தெரிவித்தார்..