கிழக்கு மாகாண அரசியல் யதார்த்தம் தெரியாமல் இன்று பலர் பேசிக் கொண்டிருக்கின்றார்கள் மாகாண விவசாய அமைச்சர் கி. துரை)

0
502

தமிழ்த் தேசியக் கூட்டமைப்பினை எப்படி எப்படியெல்லாம் உடைக்கலாம் என்று பலர் எதிர்பார்த்து விமர்சித்துக் கொண்டிருக்கின்றர்கள். விமர்சனங்களைத் தாங்கிக் கொண்டு தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு இன்னும் இறுக்கமாகவும் ஒன்றிணைந்த ரீதியிலும் செயற்படும். எம்மை விமர்சிப்பவர்களுக்கு காலத்தாலும் மக்களாலும் பதில் கிடைக்கும் என கிழக்கு மாகாண விவசாய அமைச்சரும் இலங்கைத் தமிழரசுக் கட்சியின் பொதுச் செயலாளருமாகிய கிருஸ்ணபிள்ளை துரைராசசிங்கம் தெரிவித்தார்.

கட்சி அலுவலகத்தில் இடம்பெற்ற மக்கள் சந்திப்பு நிகழ்வில் உரையாற்றும் போதே அவர் இதனைத் தெரிவித்தார்.

இதன் போது அவர் மேலும் தெரிவிக்கையில்,

தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு என்ன செய்தது என்று பலர் கேட்கின்றார்கள். நாங்கள் எவ்வளவோ விடயங்களைச் சொல்ல முடியும். காணாமல் ஆக்கப்பட்டவர்கள் தொடர்பிலான நடவடிக்கை என்பது மிகவும் கடினமான விடயம் அத்தகு விடயத்தையே இந்தளவு நிலைக்கு கொண்டு வந்திருக்கின்றோம். காணாமல் ஆக்கப்பட்டோர் அலுவலக நடவடிக்கைகள் அமுலுக்கு வரவுள்ளன இதைச் செய்வித்தவர்கள் யார் என்பது அனைவருக்கும் தெரியும்.

அதுபோல் அரசியற் கைதிகளாக சிறையில் வாடும் இளைஞர்கள் விடுதலை செய்யப்பட்டார்களா? நிலங்கள் விடுவிக்கப்பட்டனவா? என்ற கேள்விகளுக்கு முழுமையாக ஆம் என்றும் விடை சொல்ல முடியாது விட்டாலும் இல்லை என்றும் சொல்லிவிட முடியாது. குறிப்பிட்ட அளிவிற்கு காணிகள் விடுவிக்கப்பட்டிருக்கின்றன, குறிப்பட்ட அளவிற்கு இளைஞர்கள் விடுதலை செய்யப்பட்டிருக்கின்றார்கள், இவற்றை முழுமையாக விடுவிப்பதற்காக முயற்சித்துக் கொண்டு தான் இருக்கின்றோம். இவ்வாறான விடயங்கள் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பினாலேயே மேற்கொள்ளப்பட்டது. இதனை வெறுமனே விமர்சனம் பேசுபவர்களால் செய்ய முடிந்ததா அல்லது செய்யத்தான் முடியுமா? இதனை மக்களும் உணர்ந்து கொள்ள வேண்டும் இன்று ஒருவாறான சுமுகமான நிலை எமது மக்களுக்கு வந்திருக்கின்றது என்றால் அது தமிழ்த் தேசியக் கூட்டமைப்பினால் தான் என்பதை எவரும் மறுக்க முடியாது.

எமது கிழக்கு மாகாண அரசியல் யதார்த்தம் தெரியாமல் இன்று பலர் பேசிக் கொண்டிருக்கின்றார்கள். கிழக்கு மாகாணத்தில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு 11 ஆசனங்களைப் பெற்று 07 ஆசனங்களைப் பெற்ற முஸ்லீம் காங்கிரஸிற்கு முதலமைச்சுப் பதவியைக் கொடுத்து விட்டது என்றவாறெல்லாம் இப்போது பலர் கணக்குச் சொல்லுகின்றார்கள்.

இவர்களுக்கு எண்ணம் இந்த மாகாணசபையிலே 18 பேர்தான் இருக்கின்றார்கள் என்று. அவ்வாறு 18 பேர் மட்டுமே மாகாணசபையில் இருந்தால் அவர்கள் சொல்வது போல் நாங்கள் ஆட்சி அமைக்க முடியும் முதலமைச்சர் பதவியையும் பெற முடியும் அதில் எந்த மாற்றம் இல்லை. ஆனால் மாகாணசபையில் 37 பேர் இருக்கின்றார்கள் இதில் 19 பேரை யார் சேர்த்தெடுக்கின்றாரோ அவர்கள் தான் ஆட்சி அமைக்க முடியும். நாங்கள் 11 பேர் இன்னும் 08 பேரைச் சேர்க்க வேண்டும் எங்களுடன் யாரும் சேர மாட்டார்கள் ஏனெனில் மத்தியில் அரசாங்கத்துடன் சேர்ந்த கட்சிகளுடன் தான் சேருவார்கள். இது தான் யதார்த்தம். இவ்விடயத்தில் யதார்தத்தை உணராது மக்களுக்கு மீண்டும் மீண்டும் எதிர்மாறான கருத்தக்களையே சொல்லி வருகின்றார்கள்.

மாகாணசபையில் நாங்கள் அதிகாரத்தைப் பெறுவதென்றால் 11 பேரையோ அல்லது 15 பேரையோ மட்டும் வைத்துக் கொண்டு பெற முடியாது. மற்றைய எல்லோரும் ஒரு பக்கம் சேருவார்கள் அதற்கேற்ற இன்னுமொரு இராஜதந்திரத்தை நாங்கள் கையாள வேண்டும்.

20வது திருத்தச் சட்டம் தொடர்பான சில சர்ச்சைகள் எழுந்த போது தமிழ்த் தேசியக் கூட்டமைப்பினர் நாங்கள் தான் திருத்தம் கோரினோம். முன்பு மாகாண சபை கலைக்கும் அதிகாரம் ஆளுனர் முதலமைச்சருடைய ஆலோசனையின் போரில் கலைக்க முடியும் ஆனால் 20வது திருதத்தில் பாராளுமன்றத்தின் அதிகாரத்தின் மூலம் கலைக்கலாம் என்றிருந்தது. இது ஜனநாயகத்திற்கு மீறிய செயற்பாடு என்று நாங்கள் சொன்னோம் அந்த அடிப்படையில் 20வது திருத்தத்தை நாங்கள் உடனடியாக அனுமதிப்பதற்கு தயாராக இல்லை.

மற்றைய கட்சிகளைப் பொறுத்தளவில் அவர்களுக்கு எந்தப் பிரச்சினைகளும் இல்லை. முன்பெல்லாம் அரசாங்கம் ஒரு சட்டத்தை தயாரித்தால் மாகாணசபையிலோ அல்லது உள்ளுராட்சி மன்றங்களிலே இருக்கின்ற அந்த அரசாங்கத்தின் கட்சிகள் அதனை அவ்வாறே ஏற்றுக் கொள்வார்கள். ஆனால் இம்முறை நாங்களும் ஆளுங்கட்சியோடு இணக்கப்பாட்டோடு இருந்த காரணத்தினால் எங்களுடைய சொல்லையும் அவ்hகள் கேட்டாக வேண்டிய நிலை இருந்தது. இந்நிலையில் நாங்கள் தான் திருத்தத்தை விலியுறுத்தினோம். அதனை அவர்கள் ஏற்றாகவேண்டி இருந்தது. அதன் படி திருத்தமும் உயர்நீதிமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட்டது அந்த அடிப்படையில் 20வது திருத்தச் சட்டத்தின் திருத்தத்திற்கே நாங்கள் ஆதரவு தெரிவித்தோம்.

20வது திருத்தச் சட்டத்தை எதிர்க்க வேண்டும் என்றால் என்ன காரணம் என்பதைச் சொல்ல வேண்டும். ஒரே நேரத்தில் ஒரே சீராக தேர்தல் நடைபெற வேண்டும் என்பதில் விருப்பம் இல்லையா, மாகாண சபைகளைக் கலைக்கின்ற விடயம் என்பது தானாகவே சட்டமுறையின் படி நடைபெறுவது விருப்பம் இல்லையா, போன்ற கேள்விகளில் ஏதாவது ஒன்றுக்கு நாங்கள் விருப்பம் இல்லை என்று சொன்னால் தான் எதிர்க்க வேண்டும். ஆனால் அப்படி சொல்வதற்கில்லை. இந்த கேள்விகளில் உள்ள நியாயத் தண்மையைப் பார்த்து நாங்கள் இதனை ஆதரித்திருக்கின்றோம். எமது தலைமையும் இதற்கு ஏற்ற விதத்தில் எங்களுக்கு நெறிவுறுத்தலை வழங்கியிருக்கின்றது. தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு இன்னும் இறுக்கமாகவும் ஒன்றிணைந்த ரீதியிலும் செயற்படும். எமது மக்களின் உரிமை தொடர்பாக எமது தலைமை செயற்படுகின்றது எமது மக்களின் அபிவிருத்திகள் தொடர்பாக எமது ஒவ்வொரு உறுப்பினர்களும் செயற்படுவார்கள்.

தமிழ்த் தேசியக் கூட்டமைப்பினை எப்படி எப்படியெல்லாம் உடைக்கலாம் என்று பலர் எதிர்பார்த்துக் கொண்டிருக்கின்றார்கள். சிலர் எம்மால் கொண்டு வரப்பட்டவர்கள் வீட்டுக்குள்ளே இருந்து கொண்டு எதிராகச் செயற்படுகின்றார்கள். இன்னும் சிலர் எங்களுக்குள்ளே இருந்து எம்மை விமர்சித்தார்கள் மக்களின் ஆணை கிடைக்காமையால் இன்று வெளியில் சென்று விமர்சிக்கின்றார். இவ்வாறெல்லாம் விமர்சிப்பவர்களுக்கு காலம் பதில் சொல்லும் எமது மக்களும் பதில் சொல்லுவார்கள் என்று தெரிவித்தார்.