மாணவர்களின் வரவினை அதிகரிக்க இணைப்பாடவிதான செயற்பாடுகள் ஊடாக முயற்சி

0
672

(படுவான் பாலகன்) மட்டக்களப்பு மேற்கு கல்வி வலயத்தில் மாணவர்களின் வரவு குறைவாக காணப்படுகின்றது. வரவினை அதிகரிக்க பல செயற்பாடுகளின் ஊடாக முயற்சித்துக் கொண்டிருக்கின்றோம். என மட்டக்களப்பு மேற்கு வலயக்கல்விப் பணிப்பாளர் செல்வி அகிலா கனகசூரியம் தெரிவித்தார்.
மட்டக்களப்பு மாவட்டத்தின் வரலாற்றில் முதன்முறையாக மட்டக்களப்பு மேற்கு கல்வி வலயத்தினால், பன்சேனை பாரி வித்தியாலய மைதானத்தில் வியாழக்கிழமை(14) நடாத்தப்பட்ட பெண்களுக்கான காற்பந்தாட்ட விக் போட்டியினை தலைமையேற்று தலைமையுரையாற்றுகையிலேயே இதனைக் குறிப்பிட்டார்.
வலயக்கல்விப் பணிப்பாளர் தொடர்ந்தும் கூறுகையில்,
67பாடசாலைகள் உள்ள மட்டக்களப்பு மேற்கு கல்வி வலயத்தில், பாடசாலைக்கு வருகின்ற மாணவர்களின் வரவு மிகக்குறைவாக காணப்படுகின்றது. இதனால் கல்வியில் மாணவர்கள் பின்நிலையில் நிற்கின்றனர். கிராமங்களிலே உள்ள கோயில்கள் தொடங்கினால் மாணவர்களின் வரவு அதிக வீழ்ச்சி காண்கின்றது. மாணவர்களின் வரவினை அதிகரிக்கும் நோக்கில், முதற்கட்டமாக சில முயற்சிகளை மேற்கொண்டு வருகின்றோம். குறிப்பாக விளையாட்டுக்கள், அழகியற் கலைகள் ஊடாக மாணவர்களை பாடசாலைக்கு உள்ளீர்க்கும் முயற்சிகளை மேற்கொண்டு வருகின்றோம். இவ்வாறான செயற்பாடுகளுக்கு பெற்றோர்களும் பூரண ஒத்துழைப்பு வழங்க வேண்டும்.
விளையாட்டுக்களில் மாணவர்கள் திறமையினைக் வெளிக்காட்டி, சான்றிதழ்களையும், பதக்கங்களையும் பெற்றாலும், கல்விப் பொதுத்தராதர சாதாரணதரம் அல்லது கல்விப் பொதுத்தராதர உயர்தரப்பிரிவுகளிலே சித்தியடைகின்றபோதுதான், அதற்கான உச்ச பலனை அடையக்கூடியதாகவிருக்கும். சான்றிதழ்களை மட்டும் பெற்று பரீட்சைகளிலே தவறினால் பெருமையை மட்டுமே பெறமுடியும் என்பதை மாணவ சமூதாயம் கருத்தில் கொள்ள வேண்டும். பின்நிலையில் உள்ள எமது வலயத்தினை முன்நிலைக்கு கொண்டு வருவதற்காக முயற்சித்துக்கொண்டிருக்கின்றோம். என்றார்.