> > 20வது திருத்தச் சட்டமூலத்தை ஆதரித்தவர்கள் ஜனநாயக விரோதிகள்…

0
115

இந்த ஆட்சியாளர்களுடனும், மாகாண சபையுடனும் ஒப்பிடுகையில் உரிய காலத்திற்கு முன்பதாகவே ஆட்சியைக் கலைத்து தேர்தலை நடாத்தியவர்களையே ஜனநாயகவாதிகள் என்று கூறக்கூடியதாகவுள்ளது. இந்தச் சட்டமூலத்தை ஆதரித்தவர்கள் ஜனநாயக விரோதிகள் என்றே கருதப்படுவார்கள் என தமிழர் ஐக்கிய சுதந்திர முன்னனியின் பொதுச் செயலாளர் வி.கமலதாஸ் தெரிவித்தார்.

20வது திருத்தச் சட்டமூலம் கிழக்கு மாகாணத்தில் அங்கீகரிக்கப்பட்டமை தொடர்பில் ஊடகங்களுக்கு கருத்துத் தெரிவிக்கையிலேயே அவர் இதனைத் தெரிவித்தார்.

அவர் தொடர்ந்து தெரிவிக்கையில்,

அரசியல் அமைப்புச் சட்டத்தின் 20வது திருத்தச் சட்டமூலம் என்னவென்றே மக்களுக்கு வெளிப்படுத்தப்படாமல் மூடிய அறைக்குள்ளே காலாவதியாகிப் போன மாகாணசபை உறுப்பினர்கள் அரங்கேற்றியுள்ளார்கள். கிழக்கு மாகாண சபை கிழக்கு மாகாண தமிழ் முஸ்லீம் மக்களுக்கு பூச்சுத்துகின்ற செயற்பாட்டையே மேற்கொள்கின்றது.

கிழக்கு மாகாணசபையில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு இந்தச் சட்டமூலத்தை ஏகமனதாக ஏற்று வாக்களித்துள்ளது. மாகாணசபைத் தேர்தலை உரிய நேரத்திற்கு நடத்த விடாது ஒரு வருடத்திற்கு ஒத்தி வைத்து வரப் போகின்ற காலத்திற்கும் தங்களின் சுகபோகங்களை அனுபவிக்க எண்ணியுள்ளார்கள். இன்னும் சொல்லப்போனால் கிழக்கு மாகாண சபை மக்களின் நிதியை இன்னும் ஒரு வருடத்திற்கு அனுபவிக்கப் போகின்றது என்றே சொல்ல வேண்டும். இந்த ஆட்சியாளர்களுடனும், மாகாண சபையுடனும் ஒப்பிடுகையில் உரிய காலத்திற்கு முன்பதாகவே ஆட்சியைக் கலைத்து தேர்தலை நடாத்தியவர்களையே ஜனநாயகவாதிகள் என்று கூறக்கூடியதாகவுள்ளது. இந்தச் சட்டமூலத்தை ஆதரித்தவர்கள் ஜனநாயக விரோதிகள் என்றே கருதப்படுவார்கள். இவர்கள் தமக்கு வாக்களித்த மக்களுக்கு துரோகம் இழைத்திருக்கின்றார்கள். மக்களின் உரிமைகளைக் குறுக்கு வழியில் பறித்தது மட்டுமல்லாமல் மத்திய அரசிற்கு அடகு வைத்திருக்கின்றார்கள். மக்களை முட்டாள்கள் என்று எண்ணிச் செயற்படுகின்றார்கள்.  எமது மாவட்டத்தை எடுத்துக் கொண்டால் முஸ்லீம் பிரதிநிதிகள் தங்களுக்கு வாக்களித்த தங்கள் பிரதேச மக்களுக்கு ஏராளமான பணத்தை செலவழித்து அந்த அந்த பிரதேசங்களை அபிவிருத்திகள் செய்கின்றார்கள். ஆனால் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் உறுப்பினர்களோ அமைச்சர்களோ இவ்வாறு தங்கள் மக்களுக்கு செய்வதை காண முடிவதில்லை. உரிமைப் போராட்டத்தில் பல இழப்புகளுக்கு ஆளாக்கப்பட்ட தமிழ் மக்களுக்கு செலவிடப்பட வேண்டிய அபிவிருத்தி நிதிகள் குறிப்பிட்ட இனத்திற்கு மாத்திரம் பயன்படக் கூடிய விதத்தில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பினர் வழிசமைத்துக் கொடுத்திருக்கின்றனர். இன்னுமொரு வருடத்திற்கு தமிழ் மக்களுக்குரிய அபிவிருத்திகளில் பற்றாக்குறைதான் தொடரப் போகின்றது.

தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் உறுப்பினர்களுக்கு முதுகெலும்பிருந்தால் இந்த சட்டமூலத்தை ஆதரித்தமைக்காக தங்கள் பதவிகளை இராஜினாமா செய்ய வேண்டும் என்று அவர் தெரிவித்தார்.