பசுக்களை அழிப்பதா? வறுமையில் வாடுபவர்களுக்கு கொடுப்பதா?

0
435

(படுவான் பாலகன்) சமய தலங்கள் சமூக நிறுவனங்களாகவே பண்டைய காலத்தில் விளங்கின. இதன்மூலமாக கல்வி, கலை, கலாசாரம், பொருளாதாரம் போன்ற பல துறைகள் வளர்க்கப்பட்டன. ஆலயங்கள் அவ்வாறான செயற்பாடுகளுக்கு முன்னுரிமையும் அளித்தன. அக்கால ஆட்சியாளர்களும் இவற்றிற்காக நிதிகளை வழங்கியதுடன், போட்டிகள் பலவற்றையும் நடாத்தினர். பிரமாண்டமான, இன்றும் வியக்கதக்க ஆலயங்களையும் கட்டினர். தற்போதைய சூழலில் இந்து ஆலயங்களின் பரிபாலன சபைகள் சமூக நிறுவனம் என்ற அந்தஸ்தினை இழந்து, திருவிழா அல்லது சடங்கினை நடாத்துவதனையும், ஆலயங்களை கட்டுவதனையும், ஆடம்பர செலவுகளை மேற்கொள்வதனையுமே நோக்காக கொண்டு செயற்படுகின்றமையினையும் காணமுடிகின்றது. ஒரு சில ஆலயங்கள் கல்விக்காக, ஆலய வருமானத்தில் குறிப்பிட்ட வீதத்தினை அண்மைக்காலங்களாக செலவு செய்து வருகின்றமையினை காணமுடிகின்றது. இவ்வாறான செயற்பாடுகள் வரவேற்கத்தக்கவை. ஆனாலும் இன்னும் பல சேவைகளை செய்ய முடியும்.
இலங்கை நாட்டினைப்பொறுத்தவரை, பல பிரசித்திவாய்ந்த ஆலயங்கள் இலங்கையிலே இருந்துகொண்டிருக்கின்றன. அதேபோன்று “கோயில் இல்லா ஊரில் குடியிருக்க வேண்டாம்” என்பதற்கிணங்க இந்து மக்கள் வாழ்கின்ற இடங்களில், அவர்களின் வழிபாட்டினை கருத்தில் கொண்டும் பல ஆலயங்கள் அமையப்பெற்றிருக்கின்றன. இவ்வாலயங்களில் பல ஆலயங்கள் அச்சூழலில் உள்ள மக்கள் ஒன்றிணைந்து அமைத்த ஆலயங்களாவே இருக்கின்றன. சில ஆலயங்கள் ஒருசில பணம்படைத்தவர்களினால் அமைக்கப்பட்ட ஆலயங்களாகவும் இருக்கின்றன. இவ்வாலயங்கள் மூலமாக சமூகத்திற்கும் சேவைகள் வழங்கப்பட்டு வருகின்றன.
இலங்கையிலே பிரசித்திபெற்று விளங்கும் ஆலயங்களுக்கான வருமானங்கள் திருவிழா காலங்களிலேயே அதிகம் கிடைக்கப்பெறுகின்றன. ஏனைய சிறு ஆலயங்களுக்கு அதனை சூழவுள்ள மக்கள் ஒன்றிணைந்து நிதியினைசேகரித்து திருவிழாக்களையோ, சடங்கினையோ நடாத்தி வருகின்றனர். ஒவ்வொரு பிரதேசங்களிலும் பிரசித்திபெற்ற ஆலயங்களின் நடைமுறைகளையே ஏனைய ஆலயங்கள் பின்பற்றுகின்ற நிலையும் இருந்துகொண்டிருக்கின்றன. அவ்வாறான தருணங்களில் பிரசித்திபெற்ற ஆலயங்கள் ஏனைய ஆலயங்களுக்கு முன்மாதிரியாக செயற்பட வேண்டிய அவசியமும் இருக்கின்றன. ஆலயங்களுக்கு நிதிகள் நன்கொடைகளாவும், ஒருசில நேர்த்திக்கடன்கள் ஊடாகவும் வருமானங்கள் பெற்றுக்கொள்ளப்படுகின்றன. இவற்றுள் நன்கொடைகளை விடுத்து, நேர்த்தி கடன் என்றால் என்ன? என்பது பற்றி நோக்குகின்ற போது, இந்து மக்களின் வழிபாடுகளில் நம்பிக்கை முதலிடமாக இருக்கின்றது. தமக்கு துயரங்கள் ஏற்படுகின்றபோது, துயரங்களை நீக்குமாறு இறைவனுடன் வேண்டுகின்றனர். அவ்வாறான துயரங்களை நிறைவேற்றுகின்றபோது, அதற்கு பிரதிஉபகாரமாக காவடி எடுத்தல், அங்கப்பிரதட்சணம் செய்தல், கற்பூரச்சட்டி எடுத்தல், அலகுபோடுதல், தீமிதித்தல் போன்ற  தம்மை வருத்திய பல நேர்த்திகளையும், ஆலயத்திற்கு பொருட்கள் கொடுத்தல் பண்பையும் நிறைவேற்றி வருகின்றனர். குறிப்பாக பொருட்கள் கொடுத்தலில் உயிருள்ள பொருட்களையும் நேர்த்தியாக வழங்கி வருகின்றனர். அவ்வாறானவையாக கோழி, ஆடு, மாடு போன்ற உயிரினங்களை குறிப்பிடமுடியும். அவ் உயிரினங்களை ஆலய நிருவாகசபையினர் விற்பனை செய்து, அந்நிதியினை ஆலயதேவைகளுக்காக பயன்படுத்துகின்றமையினையும் காணமுடிகின்றது. அவ்வாறு ஆலய நிருவாகசபையினருடன் இருந்து பெறப்படும் உயிரினங்களை உணவுக்காக பயன்படுத்துகின்றமையினையே பெரும்பான்மையாக காணமுடிகின்றது. இச்செயற்பாடு ஆலயங்கள் உயிர்கொலைக்கு ஆதரவு அழிக்கின்றனரா? என்ற வினாவும் பலர்மத்தியில் எழுந்திருக்கின்றன. இந்துமதத்தில் ஆலயத்தில் துப்புவது, மற்றவர்களை தொந்தரவு செய்தல், கால்நீட்டி இருத்தல், வீண்பேச்சுகளை பேசுதல் போன்ற பல செயற்பாடுகளை செய்யக்கூடாது எனக் கூறப்படுகின்றன. அதேபோன்று கள் உண்ணல், புலால் உண்ணல் போன்றவற்றினை தவிர்க்க வேண்டுமெனவும் சொல்லப்படுகின்றன. உயிர்கொலையும் மிகுந்த பாவச்செயல்களாக குறிப்பிடப்படுகின்றது. அவ்வாறான நிலையில் ஆலயங்கள் உணவுக்காக உயிரினங்களை விற்பதனை ஏற்றுக்கொள்ளமுடியுமா? என்ற கேள்வியும் பலர் மத்தியில் இருக்கின்றது. ஆனாலும் சடங்கின் போது உயிர்பலிகொடுத்தல் என்ற விடயம் இருந்தாலும், தற்போது அவ்வாறான செயற்பாட்டினை காண்பதென்பது அரிதே.
இந்து மக்களின் வழிபாட்டில் பசுவும் பல தெய்வமாக பார்க்கப்படுகின்றது. சிவபிரானது வாகனமாகவும் குறிப்பிடப்படுகின்றது. பசுவின் அனைத்து அங்கங்களிலும் ஒவ்வொரு தெய்வங்கள் இருக்கின்றதாக கூறப்படுகின்றது. ஆலய  பூசை வழிபாடுகளுக்கும் பசு முக்கியம் பெறுகின்றது. தை மாதத்திலே பட்டிகளுக்கென தனி வழிபாடுகளும் மேற்கொள்ளப்படுகின்றன. குறிப்பாக “கோபூசை” சிறப்பு பூசையாக கொள்ளப்படுகின்றது. அதேவேளை பசுவிலிருந்து கிடைக்கப்பெறுகின்ற சலம், சாணம், பால் போன்றனவும் இறைவனுக்கு அபிசேகம் செய்வதற்காக பயன்படுத்தப்படுகின்றன. இதனால்தான் இந்துமக்கள் பசுவினை கொல்வதையோ, அதனை உண்பதையோ ஏற்கவில்லை. பண்டைய காலங்களிலும் பசுக்களை வைத்திருந்தவர்கள் அதன்மூலமாக கிடைத்த சகல நன்மைகளையும் பயன்படுத்தியதன் பிற்பாடு, பசுக்களும் வயதுமுதிர்ந்து, தானாகவே இறக்கும் வரை பராமரித்தனர். தற்காலம் தலைகீழாக மாற்றமடைந்திருக்கின்றது. பசுக்களை அதிகம் உணவிற்காக விற்கின்ற நிலையே இருந்து கொண்டிருக்கின்றது. ஒருசிலர் இது தொடர்பில் குறிப்பிடுகின்ற போது, பசுக்களை பராமரிப்பதற்கு மேய்ச்சல் தரைகள் இல்லை. இதனால் விற்கவேண்டுமென்ற கருத்தினை கூறியமையினையும் கேட்கமுடிந்தது. மேய்ச்சல் தரைகள் இல்லையென்பதற்காக, புதிய மேய்ச்சல்தரைகளை உருவாக்காமால் உள்ளுர்பசுக்களை உணவிற்கு கொடுத்து அழிப்பதென்பதனை ஏற்றுக்கொள்ள முடியுமா? அவ்வாறாயின் மனிதர்களின் இனப்பெருக்கம் அதிகரிக்கின்றது. அவர்களுக்கான தேவைகளும் அதிகரித்து செல்கின்றன. உணவுகளையும் உற்பத்தி செய்யவேண்டிய தேவையிருக்கின்றது. அவ்வாறாயின் உணவு உற்பத்தியினை அதிகரிப்பதற்கு பதிலாக மக்களை அழிப்போம் என எண்ணலாமா? அவ்வாறான கருத்துக்கள் போன்றுதான் இவ்வாறான கருத்துக்களும் அமைந்திருக்கின்றன.
இந்த நாட்டிலே உள்ள மக்களில் தமிழர்கள் கல்வி, பொருளாதாரம் போன்ற பலதுறைகளிலும் வளர்க்கப்பட வேண்டியவர்களாக இருக்கின்றனர். வறுமையுடையவர்களாவும் இருக்கின்றனர். இலங்கையிலே வறுமையில் பின்தங்கிய பிரதேச செயலகமாக மண்முனை மேற்கு பிரதேச செயலகமும், மாவட்டமாக முல்லைத்தீவும் இருந்து கொண்டிருக்கின்றன. இவையிரண்டும் தமிழர்கள் வாழ்கின்ற பிரதேசமேயாகும். இவற்றினை கட்டியெழுப்பதுவதற்கு அனைத்து சாராரும் ஒன்றிணைந்து செயற்பட வேண்டும். இதற்காக வாழ்வாதர உதவிகளாக, ஆலயங்களுக்கு நேர்த்தியாக கிடைக்கின்ற உயிரினங்களை வழங்கலாம். அவற்றின் மூலமாக வறுமையில் வாடும் குடும்பங்களை கட்டியெழுப்ப முடியும். இன்னோர் பக்கம் பசுவதைக்கு ஆலய நிருவாகத்தினர் ஆதரவளிக்கின்றனரா? என்ற சந்தேக வினாக்களுக்கு இல்லையென்ற பதிலை அளிக்க முடியும். இன்னோர் பக்கமாக சமூக செயற்பாட்டினை முன்னெடுக்கும் நிறுவனமாகவும் ஆலய பரிபாலன சபைகள் மாற்றமடையும். இந்த நாட்டிலே, தான் வாழ்ந்த சூழலிலே பசுவதை நடைபெற்றபோது, அதற்கு அஞ்சி ஞானப்பிரகாசர் அந்த பகுதியினைவிட்டே ஓடினார். இவ்வாறான நிலையில் ஆலயங்கள், சமூகநிறுவனங்களாக மாற்றமடைவதற்கு சமூகத்திற்கு சேவைகளை செய்ய முன்வரவேண்டும். அத்தோடு ஆலயங்களில் நடாத்தப்படும் வீண் செலவினங்களையும் குறைப்பதற்கு ஆலயபரிபாலனசபைகள் தீர்மானங்களை நிறைவேற்ற வேண்டும். அதற்காக மாற்றங்கள் பலவற்றினை ஏற்படுத்த வேண்டும். அம்மாற்றங்கள் நல்லவகைகளாக அமைய வேண்டும் என்பதே பலரின் விருப்பாகும்.