மகிழடித்தீவு வைத்தியசாலையில் புதிய நோயாளர் விடுதி அமைப்பதற்கான அடிக்கல் நாட்டி வைப்பு

0
490

(படுவான் பாலகன்) மகிழடித்தீவு மாவட்ட வைத்தியசாலையில், புதிய நோயாளர் விடுதி அமைப்பதற்கான அடிக்கல் நாட்டு விழா இன்று(01) வெள்ளிக்கிழமை இடம்பெற்றது.
அடிக்கல்லினை, கிழக்கு மாகாண முதலமைச்சர் ஹாபிஸ் நசீர் அஹமட், பிரதி சுகாதார அமைச்சர் பைஸர் காசிம், கிழக்கு மாகாண சுகாதார அமைச்சர் மொகமட் நசீர், விவசாய அமைச்சர் கி.துரைராசசிங்கம், பாராளுமன்ற உறுப்பினர் ஞா.சிறிநேசன், கிழக்கு மாகாணசபை பிரதி தவிசாளர் பிரசன்னா இந்திரகுமார், மாகாணசபை உறுப்பினர்களான ஞா.கிருஸ்ணபிள்ளை, இரா.துரைரெட்ணம் ஆகியோர் நட்டு வைத்தனர்.
மத்திய சுகாதார அமைச்சின் நிதியொதுக்கீட்டின் கீழ், 18.46மில்லியன் ரூபாய் செலவில் குறித்த கட்டடம் அமைக்கப்படவுள்ளமை குறிப்பிடத்தக்கது.
கடந்த யுத்த காலத்தில், இவ்வைத்தியசாலை மிகவும் பாதிக்கப்பட்டிருந்ததுடன், மூடப்பட்டும் இருந்தது. யுத்தம் நிறைவுக்கு பின்னர், 2013ம் ஆண்டிலிருந்து இவ்வைத்தியசாலையில் சிறிய சிறியதான அபிவிருத்திகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றமையும் குறிப்பிடத்தக்கது.
வைத்தியசாலையின் வைத்திய அதிகாரி டொக்டர் ரி.தவனேசன் தலைமையில் நடைபெற்ற இந்நிகழ்வில், அரசியல்வாதிகள், அதிகாரிகள், பொதுமக்கள் ஆகியோரும் கலந்துகொண்டிருந்தனர்.