மட்டக்களப்பு வரலாற்றில் 8000 மில்லியன் செலவில் 5 பாலம், 1344 கி.மீ. வீதிகளும் அபிவிருத்தி.

0
5060
தேசிய ஒருங்கிணைப்பு நல்லிணக்க அமைச்சினால் நடைமுறைப்படுத்தப்படவுள்ள தேசியநல்லிணக்கக் குறிக்கோளாகக் கொண்ட முதன்மைப்படுத்திய வீதி அபிவிருத்தி திட்டம் தொடர்பிலான ஆலோசனைக் கூட்டம் இன்றைய தினம் சனிக்கிழமை மட்டக்களப்பு மாவட்ட அரசாங்க அதிபர் திருமதி பி.எஸ்.எம்.சார்ள்ஸ் தலைமையில் மாவட்ட செயலகத்தில் நடைபெற்றது..

இக் கூட்டத்தில், மாவட்ட திட்டமிடல் பணிப்பாளர் ஆர்.நெடுஞ்செழியன், பிரதம கணக்காளர் எஸ்.நேசராஜா, வீதி அபிவிருத்தித்திணைக்களம், வீதி அபிவிருத்தி அதிகார சபை ஆகியவற்றின் பொறியியலாளர்கள், பிரதேச சபைகளின் செயலாளர்கள், மாவட்ட செயலக உதவித்திட்டமிடல் பணிப்பாளர்களும் கலந்து கொண்டனர்.
இதன்போது தேசியநல்லிணக்கக் குறிக்கோளாகக் கொண்ட முதன்மைப்படுத்திய வீதி அபிவிருத்தி திட்டத்தினை விரைவாக நடைமுறைப்படுத்துவது தொடர்பில் கலந்துரையாடப்பட்டது.
மட்டக்களப்பு மாவட்டத்தின் கிரான் பாலம், குறுமன்வெளி – மண்டூருக்கான பாலம், நரிப்புல்தோட்டம் – பன்குடாவெளி, கிண்ணையடி ,  ராணமடு ஆகிய பாலங்கள் அமைத்தல், 1344 கிலாமீற்றர் கிராமிய வீதி அமைப்பு, மட்டக்களப்பிலிருந்து கல்குடா வரையான கடற்கரையோரப் பாதை ஆகியன அமைப்பதற்கான அனுமதிகள் அமைச்சரவையினால் வழங்கப்பட்டுள்ளதாக தேசிய ஒருங்கிணைப்பு நல்லிணக்க அமைச்சினால் 10.08.2017 திகதிய கடிதம் மூலம் மட்டக்களப்பு மாவட்ட அரசாங்க அதிபருக்கு அறிவிக்கப்பட்டுள்ளது.
மட்டக்களப்பு மாவட்டத்தில் மேற்கொள்ளப்படவேண்டிய முக்கிய அபிவிருத்தித்திட்டங்கள் தொடர்பில் பிரதமரின் சிரேஸ்ட ஆலோசகரும் வடக்கு கிழக்கு மாகாண அபிவிருத்திக் குழுவின் தலைவருமான ஆர்.பாஸ்கரலிங்கத்திடம் மட்டக்களப்பு மாவட்ட அரசாங்க அதிபரும் மாவட்டச் செயலாளருமான திருமதி பி.எஸ்.எம்.சார்ள்ஸ் முன்வைத்த திட்ட அறிக்கைக்கமைய பிரதமரின் அறிவுறுத்தலுக்கமைவாக இத்திட்டங்கள் முன்னெடுக்கப்படவுள்ளன.
பிரதமரின் அறிவுறுத்தலுக்கமைவாக அரசாங்க அதிபரிடம் தேசிய ஒருங்கிணைப்பு நல்லிணக்க அமைச்சின் செயலாளர் வி.சிவஞானசோதி கேட்டுக் கொண்டதற்கிணங்க அரசாங்க அதிபருக்கு இத்திட்டங்களை விரைவாக செயற்படுத்துவதற்கான அனுமதி கிடைக்கப்பெற்றுள்ளது.
இத்திட்ட முன்மொழிவுகள் அமைச்சுக்கு நேரடியாக அரசாங்க அதிபரின் அறிவுறுத்தலுக்கமைய மாவட்ட திட்டமிடல் செயலக உத்தியோகத்தர்களால் சமர்ப்பிக்கப்பட்டிருந்தது.
மாவட்டத்தின் பின்தங்கிய பிரதேசங்களின் பெரும்பகுதியை உள்ளடக்கியதாக மேற்கொள்ளப்படவுள்ள இவ் 8 அபிவிருத்தித்திட்டங்களுக்கென 8000 மில்லியனுக்கு அதிகமான நிதி செலவிடப்படவுள்ளது.
இதில், வெள்ள காலத்தில் வீதிப்போக்குவரத்து துண்டிக்கப்பட்டு வள்ளங்கள் மூலமான போக்குவரத்தினை மேற்கொள்ளும் அதே நேரம், ஏனைய காலங்களிலும் போக்குவரத்துப்பிரச்சினைகளை எதிர் கொண்ட கிரான் பிரதேச செயலாளர் பிரிவின் முக்கிய போக்குவரத்துப்பாதையான கிரான் – தரவைப்பிரதேசத்துக்கான பாலம் 1531மில்லியனில் அமைக்கப்படவுள்ளது.
இயந்திரப்பாதைப் போக்குவரத்து நடைபெற்றுவரும்  களுவாஞ்சிக்குடி(மண்முனை தென் எருவில் பற்று) மற்றும் போரதீவுப்பற்று பிரதேச செயலாளர்பிரிலுகளை இணைக்கும் குறுமன்வெளி – மண்டூர் ஆகிய பிரதேசங்களுக்கிடையிலான ஆற்றுக்கு மேலாக 1400 மில்லியனில் பாலம் அமைக்கப்படவுள்ளது.
ஏறாவூர் பற்று பிரதேச செயலாளர் பிரிவின் நரிப்புல்தோட்டம் – பன்குடாவெளி ஆகிய பிரதேசங்களுக்கிடையிலான ஆற்றைக் குறுக்கறுத்து 650 மில்லியன் செலவில் பாலம் அமையவுள்ளது.
கோரளைப்பற்று மற்று கோரளைப்பற்று தெற்கு பிரதேச செலயகப்பிரிவுகளை இணைக்கும் கிண்ணையடி – முருக்கன் தீவு ஆகிய பிரதேசங்களுக்கிடையிலான பாலம் 850 மில்லியனிலும்,  அமைக்கப்படவுள்ளது.
போரதீவு பற்று பிரதேச செயலாளர் பிரிவின் மாலையன்கட்டு – ராணமடு ஆகியபிரதேசங்களை இணைக்கும்  பாலம் 120 மில்லியனிலும் அமைக்கப்படவுள்ளன.
அதே நேரத்தில், மட்டக்களப்பு மாவட்டத்தின் கிராமிய வீதிகள் மற்றும் மேம்படுத்தப்பட தேவையுள்ள பிரதேசங்களின் 1344 கிலாமீற்றர் வீதிகள்  722 மில்லியனிலும் அமைக்கப்படவுள்ளதுடன், மட்டக்களப்பிலிருந்து கல்குடா வரையான கடற்கரையோர பாதை 3000 மில்லியனிலும் அமைக்கப்படவுள்ளன.
மட்டக்களப்பு மாவட்டத்துக்கான 2017 – 2021 வரையான ஐந்தாண்டு அபிவிருத்தித்திட்டத்தின் மூலம் திட்டமிடப்பட்ட அபிவிருத்திகளின் முதல் தொகுதி அபிவிருத்திகளாக இத்திட்டங்கள் அமைகின்றன என்பது குறிப்பிடத்தக்கது.
மாவட்ட வரலாற்றில் மிக நீண்டகாலத் தேவையாக இருந்து வந்த தொடர்ந்தும் பின்தங்கிய பிரதேசங்களான இருந்து வந்த மாவட்டத்தின் படுவான்கரைப்பிரதேச மக்கள் இதில் பெரிதும் பயன்பெறவுள்ளனர். இதன் மூலம் மட்டக்களப்பு மாவட்டத்தின் வறுமையை இல்லாதொழிப்பதற்கு வழிகோலப்படும் என்பது முக்கியமாகும்.
இதுவரை 5 வருட அபிவிருத்தித்திட்டத்தின் மூலம் முன்மொழியப்பட்ட 28000 மில்லியன் பெறுமதியான திட்ட முன்மொழிவுகள் தேசிய திட்டமிடல் திணைக்களத்திடம் கையளிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.