எனது ஆசிர்வாதமின்றி எவரும் புதிய அரசாங்கத்தை அமைக்க முடியாது – ஜனாதிபதி

0
143
பாராளுமன்ற உறுப்பினர்களின் எண்ணிக்கையில் மாற்றங்களை ஏற்படுத்தி அதிகாரத்தை கைப்பற்ற எவர் கனவு கண்டாலும் அதற்காக தமது ஆசிர்வாதமும் அங்கீகாரமும் அவசியம் என்று ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்துள்ளார்.
பாராளுமன்றத்தின் 113 உறுப்பினர்களின் ஆதரவை பெற்றுக்கொள்வதன் மூலம் ஜனாதிபதி தலைமையிலான அரசாங்கம்; கவிழ்க்கப்படும் என்று எதிர்க்கட்சி பாராளுமன்ற உறுப்பினர் தேசிய பத்திரிகை ஒன்றுக்கு தெரிவித்திருந்தார். பாராளுமன்றத்தில் 113 உறுப்பினர்களின் ஆதரவை வென்றாலும் அரசியல் யாப்புக்கு அமைய புதிய அரசாங்கத்தை தமது ஆசிர்வாதம் இன்றி ஸ்தாபிக்க முடியாது என்றும் ஜனாதிபதி வலியுறுத்தினார்.
தடைகள் அனைத்தையும் நீக்கி அரசாங்கம் முன்னோக்கி செல்லும் வேளையில், ஒருசிலர் பதற்ற நிலையை ஏற்படுத்த முயன்று வருகிறார்கள்.
சில ஊடகங்களின் உண்மைகளுக்கு அன்றி போலி விடயங்களை பரப்புவோருக்கு கூடுதலான சந்தர்ப்பம் வழங்கப்படுகிறது. லஞ்சம், ஊழல், குடும்ப ஆட்சி, அதிகார துஷ்பிரயோகம் என்பனவற்றை மாற்றியமைத்து நாட்டின் சுதந்திரத்தையும் ஜனநாயகத்தையும் கட்டியெழுப்பும் தமது தலைமைத்துவத்தை பொறுத்துக் கொள்ள முடியாதவர்கள் சீர்குலைப்பு நடவடிக்கைகளில் ஈடுபட்டு வருகிறார்கள் என்றும் ஜனாதிபதி சுட்டிக்காட்டினார்.
இன்று (31) முற்பகல் ஹிங்குராக்கொட வலய கல்வி அலுவலக புதிய கட்டிட திறப்பு விழாவில் உரையாற்றும் போதே ஜனாதிபதி மைத்ரிபால சிறிசேன மேற்கண்டவாறு தெரிவித்தார்.
ஊழல், மோசடி, வீண்விரயம் மற்றும் குடும்ப ஆதிக்கத்தை விதைத்து, அதிகாரத்தை தவறாக பயன்படுத்திய நாட்டின் பயணத்தை மாற்றி, நாட்டில் சுதந்திரம் மற்றும் ஜனநாயகத்தை பாதுகாத்து சிறந்த நாட்டை உருவாக்குவதற்கு கிராமத்திலிருந்து வந்த தலைவர் என்ற வகையில் தனது தலைமையில் தற்போதைய அரசாங்கம் முன்னெடுக்கும் செயற்பாடுகளை பொறுத்துக்கொள்ள முடியாத சிலர் கோசமிட்டுக் கொண்டிருப்பதாகவும் ஜனாதிபதி தெரிவித்தார்.
தவறு செய்வோருக்கு நாட்டில் இருப்பு இல்லை என குறிப்பிட்ட ஜனாதிபதி அவர்கள், பௌத்த புண்ணிய பூமியான இந்த நாட்டில் நியாயமான சமூகத்தை நோக்கி பயணிப்பவர்கள் மட்டுமே நிலைத்திருக்க முடியுமென்றும் தெரிவித்தார்.
அறிவை மையப்படுத்திய சமூகத்தை நோக்காகக்கொண்டு ஹிங்குராக்கொட கல்வி வலயத்தின் நிர்வாக மற்றும் முகாமைத்துவ செயற்பாடுகளை இலகுபடுத்துவதற்காக வடமத்திய மாகாண சபையினால் 45 இலட்ச ரூபா செலவில் இக்கட்டிடம் நிர்மாணிக்கப்பட்டுள்ளது.
நினைவுப் பலகையை திரைநீக்கம் செய்து, வலய கல்வி அலுவலகத்தை திறந்து வைத்த ஜனாதிபதி;, அலுவலர்களுடன் கலந்துரையாடியதுடன், இணைய தளத்தையும் ஆரம்பித்து வைத்தார்.
அத்துடன் மீகஸ்வெள, வடிகவெள, பதோக்வெள, செனரத்புர, குமுதுபுர, மயிலகஸ்கந்திய பகுதிகளில் வாழும் 3000 குடும்பங்களுக்கு சுகாதார வசதிகளை வழங்குவதற்காக 11 மில்லியன் ரூபா செலவில் நிர்மாணிக்கப்பட்ட மெதிரிகிரிய, மீகஸ்வெள, ஆரம்ப சுகாதார நிலையத்துக்கான நினைவுப் பலகையை திரைநீக்கம் செய்து, முதலாவது நோயாளரையும் ஜனாதிபதி; பதிவு செய்து வைத்தார்.
வடமத்திய மாகாண முதலமைச்சர் பேஷல ஜயரத்ன, மாகாண சுகாதார அமைச்சர் எம். ஹேரத் பண்டா, மாகாண அமைச்சர் சம்பத் ஸ்ரீ நிலந்த உள்ளிட்ட மக்கள் பிரதிநிதிகளும் நிகழ்வில் கலந்துகொண்டனர்.