இனவாதத்தை பரப்புகின்ற சமூக தளங்களை முடக்க வேண்டும்,எம்.எல்.ஏ.எம்.ஹிஸ்புல்லாஹ்

0
385

“இனவாதத்தை பரப்புகின்ற சமூக தளங்களை முடக்க வேண்டும். அத்துடன், சமூக ஊடகங்களைப் பயன்படுத்துவதில் சில வரையரைகளை மேற்கொள்வதன் ஊடாக தலைதூக்கியுள்ள இனவாதத்தை ஓரளவுக்கு தணிக்க முடியும்” என, புனர்வாழ்வு மற்றும் மீள்குடியேற்ற இராஜாங்க அமைச்சர் எம்.எல்.ஏ.எம்.ஹிஸ்புல்லாஹ் தெரிவித்தார்.

நாட்டில் தலைதூக்கியுள்ள இனவாத செயற்பாடுகள் குறித்து இராஜாங்க அமைச்சர் ஹிஸ்புல்லாஹ் இன்று விடுத்துள்ள விசேட அறிக்கையிலேயே மேற்கண்டவாறு குறிப்பிடப்பட்டுள்ளது.

அவ்வறிக்கையில் மேலும் குறிப்பிடப்பட்டுள்ளதாவது,

“தலைசிறந்த புலனாய்வு வலையமைப்பைக் கொண்ட இலங்கை பொலிஸாரினால் பொதுபல சேனா அமைப்பின் பொதுச் செயலாளர் ஞானசார தேரரைக் கைது செய்ய முடியாதுள்ளமை எமக்கு பல சந்தேகங்களை ஏற்படுத்தியுள்ளது.

“சிங்கள தேசியவாத சக்திகள் கடந்த ஆட்சிக் காலப்பகுதியில் தோற்றம் பெற்றன. அதைக் கட்டுப்படுத்த தவறியதால் கடந்த ஆட்சியை மாற்றி புதிய ஆட்சியைக் கொண்டு வர முஸ்லிம்கள் பெரும் பங்களிப்பு செய்தனர். ஆனால், இந்த ஆட்சியிலும் இனவாத செயற்பாடுகள் தொடர்கதையாகவே மாறியுள்ளது.

“இவை திட்டமிட்டு மேற்கொள்ளப்படுகின்ற செயற்பாடுகளாகும். இதனால் எமது பொருளாதாரம் சீர்குலைந்து அதல பாதாளத்துக்குள் சென்றுக்கொண்டுள்ளது. நாட்டின் அமைதியற்ற சூழல் கருதி முதலீட்டாளர்கள் முதலீடுகளை செய்ய முன்வருவதில்லை. இனவாதம் என்பது நாட்டின் முன்னேற்றத்துக்கு பெரும் தடையாக மாறியுள்ளது. இதனை அனைத்து தரப்பும் உணர வேண்டும்.

“இனவாதத்தை பரப்பி இனங்களுக்கிடையில் முறுகளைத் தோற்றுவிப்பது யாராக இருந்தாலும் அவர்களுக்கு எதிராக சட்டம் தன் கடமையை உரிய முறையில் செய்ய வேண்டும். சட்டத்தை அமுல்படுத்தும் பொலிஸார் சுயாதீனமாக இயங்க வேண்டும்.

“நாட்டில் இனவாதத்தை பரப்புகின்றவர்கள் யார்? எந்த அமைப்பு அவற்றை செய்கின்றது என்பது தொடர்பில் பொலிஸாருக்கும் தெரியும் அரசாங்கத்தின் உயர் மட்ட அதிகாரிகளுக்கும் தெரியும். எனவே, அவ்வாறான அமைப்புகளையும் அதனுடன் சம்பந்தப்பட்ட நபர்களையும் கைது செய்ய அல்லது கட்டுப்படுத்த அரசாங்கம் உரிய நடவடிக்கைகளை எடுக்க வேண்டும்” எனவும் குறிப்பிடப்பட்டுள்ளது.