“விரல்களில் விளைந்தது” கைவினைப் பொருட்களின் கண்காட்சி

0
631

விரல்களில் விளைந்தது என்ற சமதை நண்பியரின் கைவினைப் பொருட்களின் கண்காட்சி நாளை சனிக்கிழமை மற்றும் ஞாயிறு தினங்களில் மட்டக்களப்பில் நடைபெறவிருக்கின்றது. மட்டக்களப்பு பழையவாடி வீட்டுவீதியில் அமைந்துள்ள சமதை கைப்பொருட் காட்சிக் கூடத்தில் இக்கண்காட்சி காலை 9 மணிமுதல் மாலை 5 மணிவரைக்கும் நடைபெறவிருக்கின்றது.

மட்டக்களப்பு மாவட்டத்தில் கடந்த பல வருடங்களாக பெண்களின் உரிமைகளுக்காகத் தனியாகவும் கூட்டாகவும் குரல் கொடுத்து வந்த பெண்கள் சிலர் சேர்ந்து தங்களுக்குள் சுயசிந்தனை மாற்றத்தை ஏற்படுத்தவும், அந்தச் சிந்தனை மாற்றங்களைச் செயற்படுத்தவும் சமதை என்ற தளத்தினை கடந்த 2014 ஆம் ஆண்டு ஆரம்பித்தார்கள்.

சமதை எனும் இச் செயல்வாத செயற்பாட்டுத் தளம் “பால், சாதி, இன, மத, வர்க்க அடிப்படையில் மனிதரை வேற்றுமைப்படுத்தாத, பெண்நிலைவாதச் சிந்தனை அடிப்படையிலான, தத்தம் கலைபண்பாட்டு வடிவங்களை சமத்துவ நோக்கில் மீளுருவாக்கிப் பேணுகின்ற, சுய சிந்தனையும் சுய சார்பும் சுய மரியாதையும் உடைய, இயற்கையைப் பாதிக்காத, சமத்துவமான ஓரு சமூக வாழ்தலை உருவாக்குவதை கணவாகக் கொண்டு நகர்கின்றது..

இன்றைய உலகமயமாக்கற் சூழலில் பல்தேசியக் கம்பனிகளின் வருகையும், வர்த்தகமயமாதலும் இயற்கையுடன் இயைந்து, கூட்டுச் சமூகமாக வாழ்ந்து வந்த மக்களைத் தனியன்களாக மாற்றியுள்ளது. மேலும் இயற்கையைக் கட்டுப்படுத்தி அடக்கி ஆழுகின்றதும், இயற்கைக்கு விரோதமான வாழ்க்கையை வாழுகின்றதுமான மனித சமூகங்களை உருவாக்கித் தந்துள்ளது.

எமது பிரதேசங்களில் சில காலத்துக்கு முன்பிருந்த மக்கள் தாங்களே தங்களுக்குத் தேவையான விடயங்கள் பலவற்றையும் உற்பத்தி செய்து தன்னிறைவான வாழ்க்கையை வாழ்ந்தவர்களாகக் காணப்பட்டனர். இவ் உற்பத்திகள் பெரும்பாலும் உள்ள+ர் மூலப்பொருட்களைக் கொண்டு உள்ள+ரவரால் உற்பத்தி செய்யப்பட்டு உள்ள+ரவரால் பாவிக்கப்பட்டு வந்ததால் எமக்கான ஒரு சுயாதீன வாழ்வும் இருந்தது. இங்கு நாங்கள் உற்பத்தி செய்த பொருட்கள் சார்ந்த ரசனை, அழகியல், போன்றவையும் வளர்ந்தது.

சுயசார்பான தொழில்கள் மற்றும் கலைகள் பலவற்றை பாரம்பரியமாகக் கொண்டிருக்கும் மட்டக்களப்பு மாவட்டத்தில் வாழ்ந்து கொண்டிருக்கும் பெண்களை வலுப்படுத்துவதற்கும், இறக்குமதியாகும் பொருட்களிலிருக்கும் மாயையை மாற்றவும் சிந்தனைகளில் மாத்திரமன்று செயற்பாடுகளுக்கூடாகவும் வலுவடைவோம் எனும் நோக்கிலும் சமதை சகோதரிகள் சில செயற்பாடுகளை குறிப்பாக தமது சொந்த வாழ்வு சார்ந்து முன்னெடுத்து வருகின்றனர்.

இந்தக் கண்காட்சியானது பிளாஸ்ரிக் பொருட்களாலான அலங்காரப்பொருட்கள், பரிசுப் பொருட்கள் பைகள் போன்றவற்றுக்கு மாற்றாக நாம் எமது உள்ள+ர் வளங்களைக் கொண்டு தயாரிக்கக் கூடிய அலங்காரப்பொருட்கள் சிலவற்றைக்காட்சிப்படுத்துகின்றது. உள்ள+ர் வளங்களைப் பயன்படுத்தி எங்களுக்குத் தேவையானவற்றை எங்களின் சூழலிலிருந்தே பெற்றுக்கொள்ளமுடியும் என்பதனை வலியுறுத்தும் வகையில் “விரல்களில் விளைந்தது” எனும் கண்காட்சியை ஒரு சிறு முன்னுதாரணமாகவும், முன்னெடுப்பாகவும் வடிவமைத்துக் காட்சிப் படுத்துகின்றனர் சமதை நண்பியர்கள்;.

“எங்களுடைய எதிர்காலச் சந்ததியினருக்கு நஞ்சற்ற ஆரோக்கியமான தன்னிறைவான சூழலை உருவாக்கிக் கொடுப்போம்.”