எந்த இடர்கள் வந்தாலும் சொந்த மண்ணில் கால் பதிக்கும்வரை போராடுவோம்

0
123

கடும் வெயில் மற்றும் மழைக்கு மத்தியில் தெருவோரத்தில் காத்திருக்க வேண்டிய நிலைக்கு தாம் தள்ளப்பட்டுள்ளதாக முல்லைத்தீவு கேப்பாபுலவு மக்கள் குறிப்பிட்டுள்ளனர்.

யுத்தம் காரணமாக இடம்பெயர்ந்து மீளக்குடியேறியும் தமக்கு நிரந்தரமான வாழ்விடம் இன்றி தெருவோரத்தில் அலைந்து திரிவதாகவும் கவனயீர்ப்பு போராட்டத்தில் ஈடுபட்டுள்ள கேப்பாபுலவு மக்கள் தெரிவித்துள்ளனர்.

முல்லைத்தீவு – கேப்பாபுலவு பூர்வீகக் கிராம மக்கள் தமது சொந்த நிலங்களை கையகப்படுத்தியுள்ள இராணுவத்தினர் அதனை விடுவித்து, தமது சொந்த நிலங்களில் வாழ அனுமதிக்க வேண்டுமெனக் கோரி இன்றுடன் 70 நாட்களாக தொடர் கவனயீர்ப்பு போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்..

கடந்த மார்ச் மாதம் முதலாம் திகதி முதல் கேப்பாபுலவில் அமைந்துள்ள முல்லைத்தீவு இராணுவத் தலைமையக பிரதான நுழைவாயிலுக்கு முன்பாக கூடாரம் அமைத்து, 41 மீனவக் குடும்பங்களும் 97 விவசாயக் குடும்பங்களும் தொடர்ச்சியான கவனயீர்ப்பு போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்..

யுத்தம் காரணமாக வாழ்வாதாரங்கள் அனைத்தையும் இழந்த போதிலும், கடந்த ஏழு வருடங்களாக பல்வேறு பொருளாதார நெருக்கடிகளை எதிர்நோக்கி வருவதாகவும் கவலை வெளியிட்டுள்ளனர்.

இந்த நிலையில் 70 நாட்களாக போராடிவரும் தாங்கள் பல நோய்த் தாக்கங்களுக்கு ஆளாகியிருப்பதாகவும் வீதியில் எத்தனை நாட்களுக்கு அவல வாழ்க்கை வாழ்வதென்றும் கேள்வியெழுப்பியுள்ளனர்.

தமது சொந்த நிலங்களின் வளங்களை இராணுவத்தினர் அனுபவித்து வரும் நிலையில், தாம் வீதியில் வாழும் நிர்ப்பந்த நிலைக்கு தள்ளப்பட்டுள்ளதாகவும் கவலை வெளியிட்டுள்ளனர்.

தமக்கு தீர்வு கிடைக்கும் வரை, எந்த இடர்கள் வந்தாலும் சொந்த மண்ணில் கால் பதிக்கும்வரை வீதியில் இருந்து போராடுவோம் என்றும் கேப்பாபுலவு மக்கள் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.