பலரை அழித்து சிலரை வாழ வைப்போம் என்ற கொள்கையைதான் அரசியல் தலைமைகள் கைக்கொண்டு வருகின்றனர்.

0
418

“பலரை அழித்து சிலரை வாழ வைப்போம் என்ற கொள்கைதான் நாட்டினை ஆண்ட அரசியல் தலைவர்களாலும், அரசியல் தலைமைகளாலும் கைக்கொள்ளப்பட்டு வருகின்றன.” என மட்டக்களப்பு மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் ச.வியாழேந்திரன் குறிப்பிட்டார்.
அம்பாறை மாவட்டத்தின் கல்முனை நகரில், அனைத்து தொழிற்சங்களின் ஏற்பாட்டில்  நடைபெற்ற மே தினக்கூட்டத்தில் கலந்து கொண்டு உரையாற்றுகையிலேயே இதனை தெரிவித்தார்.

இயந்திரங்களின் வருகை, எல்லைப்படுத்தல், தொழிற்சாலை என்ற போர்வையில் ஒருசிலரை வாழ வைப்பதற்கு பலரை அழிகின்ற நிலையே காணப்படுகின்றது. குறிப்பாக நவீன இயந்திரங்களின் வருகையினால், மட்டக்களப்பு, அம்பாறை மாவட்டங்களிலே விவசாயத்தினை செய்த விவசாயிகள் 36ஆயிரம் பேர் அத்தொழிலை இழந்திருக்கின்றனர். இவர்களைப் பற்றியும், அவர்களது குடும்பங்களின் நிலைபற்றியும் யாரும் சிந்திப்பதில்லை. இவர்களுக்கான மாற்றுத்தொழில்களையோ, செயற்றிட்டங்களையோ முன்னெடுக்கவுமில்லை.

மட்டக்களப்பு மாவட்டத்தில் வனவளத்தை பாதுகாத்துக்கொண்டும், வன ஜீவராசிகளை வளர்த்துக் கொண்டும் இருந்த 6500க்கு மேற்பட்ட பண்ணையாளர்கள், வனவள அதிகாரிகளாலும், வனவிலங்கு அதிகாரிகளாலும் காணிகளை எல்லைப்படுத்தப்படுகின்றோம், என்ற போர்வையில் காடுகளிலே வசித்த பண்ணையாளர்கள் வெளியேற்றப்படுகின்றனர். இதனால் வாழ்வா? சாவா? என்ற நிலையில் அம்மக்கள் நடுத்தெருவில் நிற்கின்றனர்.

மட்டக்களப்பிலே சீமெந்து கல்வெட்டு தொழிற்சாலை கொண்டுவரப்பட்டுள்ளது. தொழிற்சாலை கொண்டுவந்துள்ளமை சரியானது. ஆனால் இதன் மூலம் 15பேருக்கும் குறைவானர்களுக்கே தொழில்வாய்ப்பு கிடைக்கும். காரணம் அங்கு இயந்திரங்கள் மூலமே வேலைகள் நடைபெறவுள்ளன. இதனால் மட்டக்களப்பு மாவட்டத்திலே உள்ள 4800 செங்கல் உற்பத்தி தொழிலை பாரம்பரியமாக செய்துவருகின்ற செங்கல் உற்பத்தியாளர்கள் நடுத்தெருவிலே நிற்கும் நிலை ஏற்பட்டுள்ளது. இவர்களின் அடுத்த கட்டநிலை என்ன என்பதுபற்றி நாம் சிந்திப்பதில்லை.
கிழக்கு மாகாணத்திலே இயங்கிய 20க்கு மேற்பட்ட தொழிற்சாலைகள் மூடப்பட்டுள்ளன.

இவற்றினை திறப்பதற்கு நல்லாட்சி என்று சொல்லப்படுகின்ற ஆட்சியாளர்களும் செயற்பாடுகளை முன்னெடுக்கவில்லை. அதற்கு மாறாக வசதிபடைத்த தென்னிலங்கை பிரதிநிகளை இன்னும் வசதிபடைத்தவர்களாக மாற்றுவதற்கு யோசித்துக்கொண்டிருக்கின்றனர். அவற்றில் ஒன்றுதான் மட்டக்களப்பில் அமைக்கப்பட்டுள்ள எதனோல் உற்பத்தி நிலையம். அதேபோன்று அபிவிருத்தி என்ற போர்வையில் மட்டக்களப்பு, அம்பாறை மாவட்டங்களில் குடியேற்றங்கள் நடைபெறுகின்றன. இம்மாவட்டங்களிலே உள்ள மண்ணை அள்ளி ஏனைய மாவட்டங்களுக்கு கொண்டு செல்கின்றனர். இவ்வாறு ஒவ்வொரு தொழில்களிலும் தொழிலாளர்களும் நசுக்கப்பட்டுக் கொண்டிருக்கின்றனர். தொழிலாளர்களின் பிரச்சினைகளை முதன்மைப்படுத்தி தொழிலாளர்களின் உரிமைகளை வென்றெடுப்பதற்கான போராட்டங்கள் அல்லாமல், இந்த நாட்டில் இருக்கின்ற அரசியல் கட்சிகள், தமது கட்சிகளின் ஸ்திரத்தன்மையை அதிகரிப்பதற்காக போட்டி போட்டுக்கு கொண்டு மே தினக்கூட்டங்களை நடாத்திக் கொண்டிருக்கின்றனர்.

மே தினக்கூட்டங்களை நடத்துவதற்காக, இன்று காலைவேளையில் மட்டும், பேரூந்துகளுக்காக அரசியல் கட்சிகள் இலங்கை போக்குவரத்து சபைக்கு 40இலட்சத்திற்கு மேலான பணத்தினை கட்டணமாக செலுத்தியுள்ளனர். இவ்வாறான செலவினை, தமது அரசியல் கட்சியை ஸ்திரத்தன்மைப்படுத்துவதற்கும், தாம் பெரியவர்கள் என்பதை காட்டிக்கொள்வதற்காகவே செலவு செய்திருக்கின்றனர். என்றார்.