ஊடகவியலாளர்கள் தாக்கப்பட்டமை தொடர்பில் நேர்மையான நீதியான விசாரணை முன்னெடுக்கப்படும்

0
473

nithy-b
மட்டக்களப்பு கல்குடா பகுதியில் அமைக்கப்பட்டுவரும் மதுசாரம் உற்பத்தி நிலையம் தொடர்பில் செய்தி சேகரிக்கப்பட்ட இரு ஊடகவியலாளர்கள் தாக்கப்பட்ட சம்பவம் தொடர்பில் பொலிஸ்மா அதிபரின் பணிப்புரைக்கமைய விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டுள்ளன..

மார்ச் 21ஆம் திகதி கல்குடா,கும்புறுமூலை பகுதியில் அமைக்கப்பட்டுவரும் மதுசார உற்பத்தி நிலையம் அமைக்கப்பட்டுவருவது தொடர்பில் செய்தி சேகரிக்கச்சென்ற மட்டக்களப்பில் உள்ள இரண்டு பிராந்திய செய்தியாளர்கள் மதுசார உற்பத்தி நிலைய கட்டுமானப்பணியில் ஈடுபட்டிருந்தவர்களினால் தாக்கப்பட்டதுடன் சுமார் ஆறு கிலோமீற்றர் தூரத்திற்கு துரத்தப்பட்டிருந்தனர்.
இது தொடர்பில் கல்குடா பொலிஸார் விசாரணைகளை முன்னெடுத்திருந்தபோதிலும் குறித்த பொலிஸார் பக்கச்சார்பாக செயற்படுவதாகவும் முறையாக விசாரணைகள் முன்னெடுக்கப்படவில்லையென்ற குற்றச்சாட்டுகள் தெரிவிக்கப்பட்டுவந்தன.
இந்த நிலையில் ஊடகவியலாளர்கள் தாக்கப்பட்டமை தொடர்பில் முறையான விசாரணை நடாத்துமாறு கோரி மட்டக்களப்பு மாவட்ட தமிழ் ஊடகவியலாளர் ஒன்றியம் ஆர்ப்பாட்டம் நடாத்தியிருந்ததுடன் பொலிஸ்மா அதிபர் முறையான விசாரணை முன்னெடுக்கவேண்டும் என்ற கோரிக்கையினையும் முன்வைத்திருந்தது.அதேபோன் ஊடக நிறுவனம் ஒன்றும் பொலிஸ்மா அதிபரை சந்தித்து முறையான விசாரணைசெய்யப்படவேண்டும் என்று மகஜர் ஒன்றையும் கையளித்திருந்தது.sasi-a
இந்த நிலையில் இது தொடர்பில் விசாரணைசெய்து அறிக்கை சமர்ப்பிக்குமாறு பொலிஸ்மா அதிபரினால் மட்டக்களப்பு பிரதிப்பொலிஸ் மா அதிபருக்கு வழங்கிய அறிவுறுத்தலுக்கு அமைவாக களுவாஞ்சிகுடி பிராந்திய உதவி பொலிஸ் அத்தியட்சகர் பி.ரி.சிசிர பெத்த தந்திர விசாரணையை மேற்கொண்டுள்ளார்.
இதனடிப்படையில் களுவாஞ்சிகுடி பிராந்திய உதவி பொலிஸ் அத்தியட்சகர் காரியாலகத்திற்கு அழைக்கப்பட்ட பாதிக்கப்பட்ட சுதந்திர ஊடகவியலாளர்களான புண்ணியமூர்த்தி சசிகரன்,நல்லதம்பி நித்தியானந்தன் ஆகியோர் தமது வாக்குமூலங்களை பதிவுசெய்தனர்.
ஊடகவியலாளர்கள் தாக்கப்பட்டமை தொடர்பில் நேர்மையான நீதியான விசாரணை முன்னெடுக்கப்படும் என உதவி பொலிஸ் அத்தியட்சகரினால் உறுதியளிக்கப்பட்டதாக ஊடகவியலாளர்கள் தெரிவித்தனர்.
எதிர்வரும் மே மாதம் 29ஆம் திகதி இது தொடர்பான வழக்கு வாழைச்சேனை நீதிவான் நீதிமன்றில் இடம்பெறவுள்ளமை குறிப்பிடத்தக்கது.