தீர்வின்றி தொடரும் காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவினர்களின் போராட்டம்

0
268

வலிந்து காணாமல் ஆக்கப்பட்ட உறவுகளை மீட்டுத்தருமாறு வலியுறுத்தி தமிழர் தாயகப் பகுதிகளில் முன்னெடுக்கப்பட்டுள்ள போராட்டங்கள் இன்றும் உறுதியுடன் தொடந்து முன்னெடுக்கப்பட்டுள்ளது.

50 நாட்களுக்கும் மேலாக முன்னெடுக்கப்பட்டுவரும் போராட்டங்களுக்கு நியாயம் வழங்கப்பட வேண்டும் என்று வலியுறுத்தி, வடக்கு கிழக்கு மாகாணங்களில் நேற்றைய தினம் பூரண ஹர்த்தால் அனுட்டிக்கப்பட்ட நிலையில் இன்றைய தினம் தொடர்ந்தும் போராட்டங்கள் இடம்பெறுகின்றன.

காணாமல் போகச் செய்யப்பட்டுள்ள உறவுகளை மீட்டுத்தருமாறு வலியுறுத்தி கிளிநொச்சி – கந்தசுவாமி ஆலய முன்றலில் இடம்பெற்றுவரும் போராட்டம் இன்று 68 ஆவது நாளாகவும் மேற்கொள்ளப்படுகின்றது.

கொளுத்தும் வெயிலையும் பொருட்படுத்தாது தகரக் கொட்டகையில் உறுதியான முடிவுடன், குறித்த உறவுகள் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.

அத்துடன் காணாமல் ஆக்கப்பட்டுள்ள உறவுகள் தொடர்பாக நியாயம் வழங்கப்பட வேண்டும் என்று வலியுறுத்தி வவுனியாவிலும் தொடர் போராட்டம் இடம்பெற்றுவருகின்றது.

வவுனியா வீதி அபிவிருத்தி திணைக்களத்திற்கு முன்னால் ஏ9 வீதி அருகில் குறித்த போராட்டம் நடைபெறுகின்றது.

இவற்றோடு முல்லைத்தீவு மாவட்டத்தில் முன்னெடுக்கப்பட்டுவரும் போராட்டம் 50 நாட்கள் கடந்துள்ள நிலையிலும் இன்றும் மேற்கொள்ளப்பட்டுவருகின்றது.

போராடுவதற்கு உடலில் வலுவற்ற நிலையிலும், மனதில் தெம்பு இருப்பதாக தெரிவித்துள்ள காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவினர்கள், தீர்வு கிடைக்கும் வரை போராட்டம் தொடரும் என்று உறுதியாக தெரிவித்துள்ளனர்.

காணாமல் ஆக்கப்பட்டவர்கள் குறித்து நியாயம் வழங்கப்பட வேண்டும் என்று வலியுறுத்தி, நேற்றைய தினம் வடக்கு கிழக்கு மாகாணங்களில் பூரண ஹர்த்தால் மேற்கொள்ளப்பட்டுள்ள நிலையில், காணாமல் ஆக்கப்பட்டுள்ளவர்களின் உறவினர்கள் தளராத உறுதியுடன் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.