காணாமற்போனோரின் உறவினர்களுக்கு அரசு ஆறுதல் கூறவேயில்லை – வடக்கு முதலமைச்சர் மனவருத்தம்

0
249
காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவினர்களுக்கு அரசு இது வரை எந்தவித ஆறுதல் வார்த்தைகளும் கூறாதமை மன வருத்தம் தருகிறது என்று வடக்கு மாகாண முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன் தெரிவித்தார்.
வடக்கு மாகாண சபையின் 91 ஆவது அமர்வு நேற்று அவைத்தலைவர் சி.வி.கே.சிவஞானம் தலைமையில் ஆரம்பமானது. இதில் உரையாற்றும்போதே முதலமைச்சர் இதனைக் கூறினார்.அவர் மேலும் தெரிவித்ததாவது,
எமது மக்கள் மத்தியில் ஏற்பட்டுள்ள விரக்தியின் அடையாளமாக ஒரு நிகழ்வு இந்த நாட்டின் வடக்கு-கிழக்குமாகாணங்களில் நடைபெறுகின்றது. வலிந்து காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவுகளின் ஏற்பாட்டில் வடக்கு-கிழக்கு தழுவிய ரீதியில் கடையடைப்பு நடக்கிறது.
திருகோணமலையில் போராடிக்கொண்டிருக்கும் அப்பேர்ப்பட்ட மக்களைக் கூட்டாக அண்மையில் சந்தித்தேன். அதற்கு முன்னர் வடக்கு மாகாணத்திலும் பல குழுக்களைச் சந்தித்தேன். கடந்த பல நாள்களாகக் காணமற்போன தங்கள் உறவுகள் பற்றியும் இராணுவ ஆக்கிரமிப்பால் தமது காணிகளை இழந்தமை பற்றியும் இந்த மக்கள் தமது வருத்தங்களையும் கரிசனைகளையும் தொடர்ச்சியான போராட்டங்கள் மூலம் எடுத்துக் காட்டிவருகின்றார்கள். மக்கள் மிகுந்த சிரமங்களுக்கு மத்தியில் ஏதேனும் நற்செய்தி அரச தரப்பில் இருந்து வராதா என்ற எதிர்பார்ப்பில் இருந்து வருகின்றார்கள்.
பலரின் 50 நாள்களுக்கு மேலான போராட்டங்கள் உத்தியோகபூர்வமாக எந்தவித எதிர்வினையும் கொண்டுவராத நிலையில்த்தான் நீதிக்கான ஒரு காத்திரமான ஜனநாயகச் செயற்பாடு என்ற முறையில் இன்றைய மக்கள் அணி திரள்வு கடையடைப்புப் போராட்டமாக நடைபெறுகின்றது. இந்த நிலையில் முஸ்லிம் சகோதரர்கள், சிங்கள சகோதரர்கள் அடங்கலான வடக்கு-கிழக்கு சகல மக்களும் தமது மனோநிலையைப் பிரதிபலிக்கும் வண்ணம் ஒருங்குசேர்ந்து போராடுவது கட்டாயமாகியுள்ளது.
நாம் யாவரும் இம் மக்கள் போராட்டத்திற்கு எமது ஆதரவினை எடுத்துக் காட்டுவதிலிருந்து எமது தெற்கத்தைய சிங்களச் சகோதரர்களும் கொழும்பு அரசும்  பன்னாட்டு அரசுகளும் ஒன்றைப் புரிந்துகொள்ளவேண்டும். தொடர்ந்து எம் மக்களையும் அவர்களின் ஆதங்கங்களையும் அவர்களின் கோரிக்கைகளையும் புறக்கணித்து வருவது யாருக்குமே நல்லதல்ல. மக்களின் மனோ நிலையைத் தவறாகப் புரிந்துகொண்டு பிழையான நடவடிக்கைகளில் அரசு இறங்க எத்தனித்தால் அது பாரதூரமான விளைவை எம் மக்களுக்குத்தான் ஏற்படுத்தும்.
எமது கோரிக்கைகள் நியாயமானவை. அவை எமது அடிப்படை உரிமைகள் சார்ந்தவை. ஆகவே அவற்றிற்குத் தீர்வு காணுதல் அவசியம். தீர்வு காண்பதற்கு அரசு பின் நிற்பதே அல்லது தாமதிப்பதே நேற்றைய வடக்கு-கிழக்கு ரீதியான போராட்டத்தின் அடிப்படைக் காரணமாகும். எமது பொறுப்புக் கூறலை நாங்கள் தட்டிக் கழித்துவருவதால் மக்களின் மனவருத்தங்கள் மேலும் மேலும் உக்கிரமடையும் என்பதற்கு நேற்றைய கடையடைப்பு ஒரு உதாரணமாகும்.
கடையடைப்புக்கு எம் மக்கள் காட்டும் கட்சிப் பாகுபாடற்ற கரிசனைமிக்க ஒத்துழைப்பை வடக்கு-கிழக்கு மக்களின் ஒற்றுமைக்கான ஒரு அணிதிரள்வாகவே நான் காண்கின்றேன்.
எமது கஷ்டங்கள் , துன்பங்கள், அல்லல்கள், அவலங்கள் ஆகியவற்றை மற்றவர்களும் புரிந்துகொண்டிருக்கின்றார்கள் என்பது இரவு பகலாகப் போராடும் மக்களுக்கு ஒருவித மனநிறைவை ஏற்படுத்தும். அத்துடன் எமது ஏகோபித்த பங்களிப்பு எமது மக்களின் ஒற்றுமையைப் பிரதிபலிக்கும்.
இதன் காரணமாகவே எமது வடக்கு மாகாண சபை தனது நிகழ்ச்சிகளைச் சுருக்கி தமது ஏகோபித்த ஆதரவினை போராடும் எமது மக்களுக்கு வழங்க உத்தேசித்துள்ளது. அவைத் தலைவரும் அதற்குத் தமது பூரண ஒத்துழைப்பை வழங்கமுன்வந்திருப்பது எமது மக்கள் பிரதிநிதிகள் அனைவரும் கூட்டாக தமது கரிசனைகளை உலகிற்கு எடுத்துரைப்பதாக அமைந்துள்ளது. நாம் ஒன்றுபட்டால்த்தான் எமக்கு உண்டு வாழ்வு. இதனைஎம் மக்கள் உணர்ந்துகொள்ளும் காலம் உதயமாகியுள்ளது-என்றார்.