எதிர்மறைச் சிந்தனைகள் இருக்குமானால், மட்டக்களப்பில் அபிவிருத்திகளைச் செய்வது கடினமாகிவிடும்.

0
860

srinesan-aaசகல விடயங்களிலும் சாதகங்களைப் பாராமல், பாதகங்களை மட்டும் பார்க்கின்ற எதிர்மறைச் சிந்தனைகள் இருக்குமானால், மட்டக்களப்பில் அபிவிருத்திகளைச் செய்வது கடினமாகிவிடும். வேலைவாய்ப்புகளை வழங்குவதும் கடினமாகிவிடும் என மட்டக்களப்புத் துறைசார் வல்லுனர்கள் மன்றம் (BPF) மூலமான அழைப்பும், மதுசாரத் தொழிற்சாலை (எதனோல்) தொடர்பான கலந்துரையாடலும் சம்பந்தமாக வெளியிட்டுள்ள அறிக்கையில் மட்டக்களப்பு மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் ஞா.ஸ்ரீநேசன் தெரிவித்துள்ளார்..
ஆவ்அறிக்கையில் மேலும் தெரிவித்துள்ளதாவது
மேற்படி மன்றமானது தமிழ்த்தேசியக் கூட்டமைப்புப் பாராளுமன்ற உறுப்பினர்கள், மாகாணசபை உறுப்பினர்கள்;, முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர்கள் ஆகியோரை மதுசாரத் தொழிற்சாலை மற்றும் அபிவிருத்திகள் தொடர்பான கருத்துப்பகிர்வுக்கும், கலந்துரையாடலுக்குமான அழைப்பொன்றினை விடுத்திருந்தது.
இந்த மன்றத்தில் வைத்தியர்கள், எந்திரிகள், விரிவுரையாளர்கள், கணக்காளர்கள், சிவில் சமூகத்தினர், ஓய்வுநிலைக் கல்விப்பணிப்பாளர் போன்ற துறைசார் நிபுணர்கள், சிரே~;டர்கள் இடம் பெற்றிருந்தனர். மேற்படி துறைசார் வல்லுனர்கள் நால்வர் மதுசாரத் தொழிற்சாலையின் சாதகங்கள், பாதகங்கள், சவால்கள், வாய்ப்புகள் பற்றியெல்லாம் அறிவியல் பூர்வமாகவும், பொருண்மிய ரீதியாகவும், சமூக ரீதியாகவும், சூழலியல் ரீதியாகவும், எதிர்காலவியல் ரீதியாகவும் விளக்கமளித்திருந்தனர். சாதகங்கள் மட்டுமல்லாமல், பாதகங்களையும் எடுத்தியம்பினர்.
இவ்வொன்று கூடலில் அழைக்கப்பட்ட தமிழ்த்தேசியக் கூட்டமைப்புப் பிரமுகர்களின் ஏறத்தாழ 82% இனர் கலந்து கொண்டனர். நிபுணர்களின் விளக்கமளிப்பின் பின்னர், கருத்தாடல்கள் வாதப்பிரதிவாதங்கள் என்பன இடம்பெற்றன. இவற்றிடையே தெளிவூட்டல்களும் இடம்பெற்றன. அதேவேளை கேள்விகள், பதில்கள் போன்ற விடயங்களும் இடம்பெற்றன.  மொத்தத்தில் இவ்வொன்றுகூடல் அறிவியல் சார் பகிர்வாகவும்  அமைந்திருந்தது. வருகைப் பிரமுகர்கள் கேள்விகளினூடாகத் தமது ஐயப்பாடுகளைத் தீர்க்க முற்பட்டனர். மதுபானம், மதுசாரம், எதனோல் போன்றவை தொடர்பான விளக்கங்கள் அளிக்கப்பட்டன. மேலும் உற்பத்தி மூலப் பொருட்களாக சோளம், இறுங்கு, தினை, நெல் போன்றவற்றைப் பயன்படுத்த இருப்பதாகவும் குறிப்பிட்டனர். ஏற்கனவே வெளிநாடுகளில் இருந்து இறக்குமதி செய்யப்படும் எதனோலுக்கான (மதுசாரம்) செலவீனத்தைக் குறைக்க முடியும் எனவும் கூறப்பட்டது. மேலும் எதனோலில் இருந்து மதுபானம் மட்டுமல்லாமல் மருத்துவப் பொருட்கள், வாசனைத்திரவியம், எரிபொருள் போன்றவற்றையும் உற்பத்தி செய்ய முடியும் என்பதும் எடுத்துரைக்கப்பட்டன. இத்தொழிற்சாலையில் இருந்து உற்பத்தி செய்யப்படும்  எதனோல், மதுபானமோ சாராயமோ அல்ல என்பதும் இது மதுபானத்துக்கான முடிவுப் பொருளல்ல என்பதும் சொல்லப்பட்டது. (சாராயம் அல்ல)
அரசியல்வாதிகள் பலவகையான கேள்விகளை எழுப்பினர் சூழல்பாதிப்பு, தொழில்வாய்ப்பு, மதுபானக் கடையாளர்களுக்கான சாதகம், மக்களடையக்கூடிய பாதகம் பற்றியெல்லாம் கேள்விகளை எழுப்பி விடைகளைப் பெற்றனர்.
இவ்வொன்றுகூடல் கலந்துரையாடலாகவும், கருத்துப்பகிர்வாகவும், தெளிவூட்டலாகவும் அமைந்ததேயொளிய தொழிற்சாலைக்கு ஆதரவளிப்பதாக முடிவுகள் எடுக்கப்படவில்லை.
அறிவை இற்றைப்படுத்தல்   (updating)  அவசியமானதாகவுள்ளது. அறிவை இற்றைப்படுத்தாதவர்கள் காலாவதியாகி விடுவார்கள். ஐயம் ஏற்பட்டால், ஐயத்தைக் களைவதற்கு உரியவர்களை நாடுவதில் எந்தத்தப்பும் இல்லை. எமது உடலில் நோய் தொடர்பான ஐயம் ஏற்பட்டால், வைத்தியர்களை நாடுவது போல், ஐயவினாக்களைக் களைவதற்கும் பொருத்தமான வளவாளர்களை நாட வேண்டும்.

அதில் கலந்து கொள்ளாமல் நாம் எதனையும் கூறமுடியாது. ‘விளங்கு முன் விளம்பாதே’ என்பது யோகர் சுவாமியின் கருத்தாகும். எனவே, மெய்ப்பொருள் காணாமல், பொய்ப்பொருள் கூறுவதைத் தவிர்ப்போமாக. எவரும் எல்லாந்தெரிந்த பல்துறை வல்லுனர்களாக இருக்க முடியாது. ஒருவரிடம் ஒருதுறை சார்ந்தோ, சில துறைசார்ந்தோ அறிவிருக்கலாம். அதனை விடுத்து எல்லாந்த் தெரிந்தவர்களாக நாம் நினைக்கக் கூடாது. ஆத்திரம், அவசரம், பதட்டம், ஆய்வின்மை, தேடலின்மை போன்றவற்றால் எடுக்கப்படும் முடிவுகள் பொய்ப்பதற்கே வாய்ப்புள்ளது. எனவே தேடல், ஆய்தல், பகிர்தல், புரிதல், இற்றைப்படுத்தல், நிதானித்தல், அவதானித்தல், காய்தல் – உவத்தலின்மை மூலமாக உண்மைகளைக் கண்டறிவதற்கு நிபுணர்கள், வல்லுனர்கள், வளவாளர்கள் ஆகியோரை நாடுவதில்  தப்புக்கள் இருக்க முடியாது.
அதனைச் செய்யாமல், முடிவுகளை எடுப்பதென்பது பொருத்தமற்றதாகும். விலைப்பொருளாகாமல், விலைபோகாமல் இருப்பதற்கு ஒழுக்கம், நேர்மை, உண்மை, நடுநிலைமை, நிதானம் அவசியமாகும். கண்களாற் காண்பதும் பொய், காதுகளாற் கேட்பதும் பொய், தீர விசாரித்தறிவதே மெய்.
தீரவிசாரிப்பதற்குத்தான்,  அழைப்பின் பேரில் வல்லுனர்களை நாடவேண்டி இருந்தது. இந்நாடலைச் செய்யாமல் நாவந்த வழியில் பேசவும் முடியாது. கைவந்த வழியில் எழுதவும் முடியாது.
மட்டக்களப்பு மாவட்டத்தில் பலவகையான அபிவிருத்திகளைச் செய்ய வேண்டியுள்ளது. அதேவேளை, இம்மாவட்டத்திலுள்ள இரண்டு இலட்சம் வரையான தொழில் வாய்ப்பற்றவர்களுக்குத் தொழில்களையும் வழங்க வேண்டிய தேவையுள்ளது. எனவே இம்மாவட்டமானது அபிவிருத்தியோடு கூடிய, மக்களுக்கு நன்மையளிக்கக் கூடிய அபிவிருத்தித் திட்டங்களை வேண்டி நிற்கின்றது. மாவட்டத்திற்கும், மக்களுக்கும் நன்மையளிக்கக்கூடிய அபிவிருத்தித் திட்டங்களை அமுல்படுத்துவதில் மக்களினதும், மக்கள் பிரதிநிதிகளதும் ஒத்துழைப்பு இருக்க வேண்டியது அவசியமாகும். அபிவிருத்தித் திட்டங்கள் ஒவ்வொன்றுக்கும் இரண்டு பக்கங்கள் உள்ளன.  அவை சாதகங்கள், பாதகங்கள் என்பவையாகும்.
சாதகங்களின் அளவு அதிகமாகவும் மேலும் பாதகங்களை இயன்ற வரை குறைப்பதற்கான பொறிமுறைகளும் இருக்குமானால், அதனை ஒத்துக் கொள்வது சரியானதாகும். சகல விடயங்களிலும் சாதகங்களைப் பாராமல், பாதகங்களை மட்டும் பார்க்கின்ற எதிர்மறைச் சிந்தனைகள் இருக்குமானால், மட்டக்களப்பில் அபிவிருத்திகளைச் செய்வது கடினமாகிவிடும். வேலைவாய்ப்புகளை வழங்குவதும் கடினமாகிவிடும். தொடர்ந்தும் மட்டக்களப்பில் வேலையற்றவர்கள் அதிகமாகவுள்ளனர், மக்கள் வறுமையில் வாடுகின்றனர், அபிவிருத்தித்திட்டங்கள் வரவில்லை………….என்று நாம் கூறிக்கொண்டிருக்கும் நிலைமையே ஏற்படும். இப்படியான மேற்கூறிய கருத்துக்களும் அன்றைய கூட்டத்தில் கலந்துரையாடப்பட்டன.
அரசியல்வாதிகள், துறைசார் வல்லுனர்கள், சிவில் சமூகத்தினர் இணைந்து கலந்துரையாடிப் பயணித்தால் மாவட்டத்திற்கு நன்மைகள் அதிகரிக்க வாய்ப்புள்ளது. மேலும் மட்டக்களப்பு மாவட்டத்தில் முன்னெடுக்கப்படும் அபிவிருத்திகள், தொழிற்சாலைகள் தொடர்பாக எதிர்காலத்தில் இவ்வாறான கலந்துரையாடல்கள் செய்வது மாவட்டத்திற்கும் மக்களுக்கும் பயனுறுதி வாய்ந்ததாக அமையும் என்பதே கற்றோரின் நிலைப்பாடாகும்.  ஏன தெரிவித்துள்ளார்.