மட்டக்களப்பு மாவட்ட மக்கள் அனைவரும் முழு அடைப்பு போராட்டத்திற்கு ஆதரவு வழங்க வேண்டும்.

0
355

வடக்கு, கிழக்கு மாகாணங்களில் நாளை(27) வியாழக்கிழமை நடைபெறவுள்ள முழு அடைப்பு போராட்டத்திற்கு மட்டக்களப்பு மாவட்ட மக்களும் முழுமையான ஆதரவினை வழங்க வேண்டுமென கோரிக்கை விடுப்பதாக தமிழ் தேசிய கூட்டமைப்பின் மாகாணசபை உறுப்பினர் இரா.துரைரெட்ணம் இன்று(26) குறிப்பிட்டார்.

 
தமது நிலத்தை மீட்பதற்கான, காணாமல் ஆக்கப்பட்டோரை கண்டறிவதற்கான, அரசியல் கைதிகளின் விடுதலை கோரிய, வேலையற்ற பட்டதாரிகளின் போராட்டம் என பல போராட்டங்கள் வடக்கு கிழக்கு மாகாணங்களில் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன. இதற்கு அரசினால் இன்னும் தீர்வினை வழங்காத நிலையில், குறித்த போராட்டங்களுக்கான தீர்வை வழங்ககோரி நாளைய தினம் முன்னெடுக்கப்படவுள்ள முழு அடைப்பு போராட்டத்திற்கு தமது முழுமையான ஆதரவினை தெரித்துக் கொள்வதாக ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கையில் இதனைத் தெரிவித்தார்.

 
மட்டக்களப்பு மாவட்டத்தில் பாலமுனை, பட்டிப்பளை, மையிலாம்பாவெளி, மொறக்கட்டாஞ்சேனை போன்ற பலபகுதிகளிலும் உள்ள காணிகளை படையினர் தம்வசம் வைத்துள்ளனர். அதேபோன்று பட்டதாரிகளும் நீண்ட நாட்களாக பாதையோரத்தில் நின்று கொண்டிருக்கின்றனர். தமது உறவுகளை காணாமல் இன்றுவரையும் அழுது கொண்டிருக்கின்றனர். சிறைகைதிகளும் சிறைகளிலே வாடிக்கொண்டும், அவர்களது உறவினர்கள் வீடுகளில் ஏக்கத்துடனும் எதிர்பார்த்துக் காத்திருக்கின்றனர். இவர்கள் அனைவருக்குமான தீர்வினை வலுயுறுத்தி நடைபெறவுள்ள முழு அடைப்பு போராட்டத்திற்கு மட்டக்களப்பு மக்களும் ஆதரவு வழங்க வேண்டும் என கோரிக்கை விடுவதாகவும் இதன்போது கூறினார்.