மகிழடித்தீவு வைத்தியசாலையை சூழவுள்ள பிரதேசங்களில் சமூகப்பிரச்சினைகள் அதிகரித்திருக்கின்றது.

0
673

(படுவான் பாலகன்) மகிழடித்தீவு வைத்தியசாலையை சூழவுள்ள பிரதேசங்களில் சமூகப்பிரச்சினைகள் அதிகரித்திருக்கின்றது. குடும்பத் தகராறு, இரண்டு குடும்பங்களுக்கு இடையிலான கைகலப்பு போன்ற வன்முறையான செயற்பாடுகளினால் வைத்தியசாலையில் அனுமதிக்கப்படுகின்ற நபர்களின் எண்ணிக்கை அதிகரித்திருக்கின்றது. என மகிழடித்தீவு வைத்தியசாலை வைத்திய அதிகாரி டொக்டர் ரி.தவனேசன் தெரிவித்தார்..

மகிழடித்தீவு வைத்தியசாலையில், நட்பு மையம் திறந்து வைக்கும் நிகழ்வு நேற்று(25) செவ்வாய்க்கிழமை இடம்பெற்றபோது, அதில் கலந்து கொண்டு உரையாற்றுகையிலேயே இதனைக் குறிப்பிட்டார்.

மதுப்பாவனையின் விளைவாகவே இவ்வாறான செயற்பாடுகள் இடம்பெறுகின்றன. அண்மித்த காலங்களாக சட்டவிரோத மதுப்பாவனையும் அதிகரித்துள்ளது. இவ்வற்றினை அருந்துபவர்களும் வன்முறைகளில் ஈடுபடுகின்றனர்.

படுவான்கரைப்பிரதேசத்தில் பெண் தலைமை தாங்கும் குடும்பங்கள் பல உள்ளன. இவ்வாறான குடும்ப தலைவிகள் பாதுகாப்பற்ற சூழலிலே இருக்கின்றனர். அதேபோன்று நகர்புறங்களில் உள்ள சிறுவர்களுக்கு உண்டான பாதுகாப்பு போன்று, இப்பிரதேசங்களில் உள்ள சிறுவர்களுக்கு இல்லை. பாதுகாப்பு மற்றும் மதுபாவனையை நட்பு மையத்தின் ஊடாக கட்டுப்படுத்த முடியும் என எண்ணுவதாகவும் குறிப்பிட்டார்.