27 ம் திகதி மாபெரும் கவனயீர்ப்பு போராட்டத்துக்கு அழைப்பு

0
693

mullaithivu-cமுல்லைத்தீவு மாவட்ட செயலகத்திற்கு முன்பாக கூடாரம் அமைத்துள்ள காணாமல் ஆக்கப்பட்டோரின்  உறவுகள்  முன்னெடுத்துவரும் போராட்டம் இன்றுடன் நாற்ப்பத்து ஒன்பதாவது  நாளாக முன்னெடுக்கப்பட்டுள்ளது.

இதேவேளை கேப்பாபுலவு மக்களின் நில மீட்பு போராட்டம் இன்று 56 ஆவது நாளாக இடம்பெற்று வருகின்றது.கடந்த மார்ச் மாதம் முதலாம் திகதி முதல் முன்னெடுக்கப்பட்ட கவனயீர்ப்பு போராட்டம், இன்றும் தொடர்ந்து இடம்பெற்று வருகின்றது.

இந்நிலையில் எதிர்வரும் 27 அன்று  வடக்கு கிழக்கின் பல்வேறு பகுதிகளிலும் நடைபெறும் போராட்டத்துக்கு இணைவாக முல்லைத்தீவிலும் மாபெரும் போராட்டமொன்றை நிகழ்த்தவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

முல்லைத்தீவில் காணாமல் ஆக்கப்பட்டவர்களின் போராட்டம் நடைபெறும் இடத்தில் இன்று காலை பத்துமணிக்கு கூடிய அரசியல் தலைவர்கள் பொது அமைப்புக்களின் பிரதிநிதிகள் உள்ளிட்டோருடன் கலந்துரையாடிய போராட்டத்திலீடுபடும் மக்கள் 27 ம் திகதி எமக்கான தீர்வுக்கான போராட்டத்துக்கு ஆதரவு வழங்குமாறு கோரினர் இதற்கமைவாக அனைவரது ஆதரவுடனும் போராட்டத்தை நாடத்துவதாக தீர்மானிக்கப்பட்டு உத்தியோக பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது

இதனடிப்படையில் முல்லைத்தீவு மாவட்டத்தில் இராணுவத்தினரால் கையகப்படுத்தப்பட்டுள்ள காணிகளை விரைவில்  விடுவிக்குமாறும் வலிந்து காணாமல் ஆக்கப்பட்டோர் மற்றும் இராணுவத்திடம் ஒப்படைக்கப்பட்டு காணாமல் ஆக்கப்பட்டோருக்கான தீர்வினை உடனடியாக தெரிவிக்க வேண்டுமென கோரியே இப்போராட்டம் முன்னெடுக்கப்படுவதாகவும்

தமது இந்த போராட்டத்துக்கு முல்லைத்தீவு மாவட்டத்திலுள்ள அனைத்து வர்த்தகர்களையும் கடைகளை அடைத்து பூரண ஆதரவை வழங்குமாறும் அனைத்து மக்களையும் 27 ம் திகதி காலை பத்து மணிக்கு முல்லைத்தீவு மாவட்ட செயலகம் முன்பாக ஒன்றுகூடி கவனயீர்ப்பு போராட்டத்துக்கு ஆதரவு வழங்குமாறும் கோரியுள்ளனர்

இதேவேளை போராட்டத்தின் இறுதியில் ஜனாதிபதிக்கான மகயர் ஒன்றை  முல்லைத்தீவு மாவட்ட செயலாளரிடம் கையளிக்கவுள்ளதாகவும் அறிவித்துள்ளனர்