பட்டதாரிகளின் பிரச்சினைக்கு விரைவில் தீர்வு

0
517

கிழக்கு மாகாணத்தைச் சேர்ந்த வேலையற்ற பட்டதாரிகளுக்கு மாத்திரமன்றி, நாடளாவிய ரீதியிலுள்ள  அனைத்துப் பட்டதாரிகளுக்கும் நியமனம் வழங்க வேண்டியது அரசாங்கத்தின் கடமை எனக் கிழக்கு மாகாண சுகாதார அமைச்சர் ஏ.எல்.எம்.நஸீர் தெரிவித்தார்.

 

கிழக்கு மாகாண சபையின் 76ஆவது சபை அமர்வு பிரதித் தவிசாளர் இந்திரகுமார் பிரசன்னா தலைமையில்  இன்று (25) நடைபெற்றபோது,  வேலையற்ற பட்டதாரிகளின் பிரச்சினை தொடர்பில் கிழக்கு மாகாண சபை உறுப்பினர் இரா.துரைரெட்னம் அவரசரப் பிரேரணையை முன்வைத்தார். இப்பிரேரணை மீதான விவாதத்தில் கலந்துகொண்டு உரையாற்றியபோதே, அவர் மேற்கண்டவாறு கூறினார்.

 

அங்கு அவர் மேலும் உரையாற்றியபோது,’தங்களுக்கான வேலைவாய்ப்புக் கோரி கடந்த இரண்டரை மாதங்களாக  போராட்டத்தில் ஈடுபட்டுவரும் பட்டதாரிகளுக்கு வேலைவாய்ப்பு வழங்க வேண்டுமு; என்ற எண்ணத்துடனையே நாங்கள் உள்ளோம். இப்பட்டதாரிகளுக்கு வேலைவாய்ப்பு வழங்குவதற்கான பல முயற்சிகள் எம்மாலும் எடுக்கப்பட்டன.

குறிப்பாக,  பிரதமரின் ஆலோசகர் ஆர்.பாஸ்கரலிங்கம் உள்ளிட்ட குழுவினரைச் சந்தித்து பட்டதாரிகளின் பிரச்சினைக்கு  தீர்வு வழங்க வேண்டும் என்ற வகையில் கலந்துரையாடிய நிலையில், மிக விரைவில் இப்பிரச்சினைக்கு தீர்வு கிடைக்கும். அத்துடன், கிழக்கு மாகாணத்திலுள்ள வேலையற்ற பட்டதாரிகளின் பிரச்சினைகளைத் தீர்த்து வைப்பதற்கான நடவடிக்கையை கல்வி அமைச்சும்  மேற்கொள்ள வேண்டும் என்று கோருகின்றோம்’ என்றார்.