மாணவர்கள் 17 பேருக்கு வகுப்புத்தடை

0
330

தென்கிழக்குப் பல்கலைக்கழகத்தினுடைய ஒலுவில் வளாகத்தின்  வர்த்தக முகாமைத்துவ பீடத்தைச் சேர்ந்த இரண்டாம் வருட மாணவர்கள் 17 பேருக்கு ஒருமாத காலத்துக்கு வகுப்புத்தடை விதிக்கப்பட்டுள்ளது என அப்பல்கலைக்கழக உபவேந்தர், பேராசிரியர் எம்.எம்.எம்.நாஜீம், நேற்றுத் (23) தெரிவித்தார்.

 

தொழில்நுட்பவியல் பீடத்தைச் சேர்ந்த முதலாம் வருட மாணவர்களை, வர்த்தக முகாமைத்துவ பீடத்தைச் சேர்ந்த மேற்படி மாணவர்கள் தொடர்ச்சியாக பகிடிவதைக்கு உட்படுத்தி வந்ததாகத்; தமக்குத் தகவல் கிடைத்தது. இது தெடர்பில் விசாரணை மேற்கொண்ட நிலையில், பகிடிவதையில் ஈடுபட்ட  மேற்படி மாணவர்களுக்கு  கடந்த 19ஆம் திகதி முதல் எதிர்வரும் மே மாதம் 19ஆம் திகதிவரை வகுப்புத்தடை விதிக்கப்பட்டுள்ளது.

 

இப்பல்கலைக்கழகத்தின் ஒலுவில் வளாகத்துக்கு அருகிலுள்ள காட்டுக்கு தொழில்நுட்பவியல் பீடத்தின் முதலாம் வருட மாணவர்களை, வர்த்தக முகாமைத்துவ பீடத்தின்  இரண்டாம் வருட மாணவர்கள் அழைத்துச் சென்று  தாக்கியுள்ளதுடன்,  மிக மோசமான முறையில் பகிடிவதைக்கு உட்டுப்படுத்தியமை தொடர்பில் விசாரணையின்போது  தெரியவந்துள்ளது. இவர்களின் குற்றச்செயல்கள் நிரூபிக்கப்படும் பட்சத்தில் பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழுவின் சட்டத்துக்கு அமைய   கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என்பதுடன், அவர்களுக்குரிய விடுதி வசதி; மற்றும் மகாபொலக் கொடுப்பனவும் இரத்துச் செய்யப்படும் எனவும் அவர் கூறினார்.