விடுதலைப்புலிகள் இருந்த காலகட்டத்தில் தமிழ் மக்களுடைய கலை, கலாசாரம், பண்பாடு, பாராம்பரியம் பேணிப்பாதுகாக்கப்பட்டு வந்தது

0
726

pirasanna-aஇந்த நாட்டிலே தழிழீழ விடுதலைப்புலிகள் இருந்த காலகட்டத்தில் எமது தமிழ் மக்களுடைய கலை, கலாசாரம், பண்பாடு, பாராம்பரியம் என்பவற்றை கட்டிக்காத்து பேணி வந்த வரலாறுகள் அனைவருக்கும் தெரியும் என கிழக்கு மாகாணசபை உறுப்பினரும் பிரதி தவிசாளருமான பிரசன்னா இந்திரகுமார் சுட்டிக்காட்டினார்.

சித்திரை புத்தாண்டு கலை, கலாசார விழா சித்திரை குதூகல நிகழ்வானது நேற்று எருவில் கண்ணகி விளையாட்டுக்கழகம், இளைஞர் கழகம், உதயநிலா கலைக்கழகம் ஆகிய மூன்று கழகங்களும் இணைந்து எருவில் கண்ணகி வித்தியாலய விளையாட்டு மைதானத்தில விளையாட்டுக்கழகத்தலைவர் மு.இளையராஜா தலைமையில்; நடைபெற்றது.

இந்நிகழ்விற்கு ஆன்மீக அதிதியாக பத்மபூஷணம் சாதக திலகம் சிவஸ்ரீ க.வடிவேல் குருக்கள், மட்டக்களப்பு மாவட்ட கிழக்கு மாகாணசபை பிரதி தவிசாளர் இந்திரகுமார் பிரசன்ன, கோ.கருணாகரன், ஞா.கிருஸ்ணபிள்ளை, மா.நடராசா பிரதம அதிதிகளாகவும் மற்றும் விசேட அதிதிகள், சிறப்பு அதிதிகள், கௌரவ அதிதிகள், அழைப்பு அதிதிகள் கிராம மக்கள் என பலரும் கலந்து கொண்டனர்..

இங்கு தொடர்ந்து உரையாற்றுகையில் ….

இந்த நாட்டிலே தமிழர்களும் சிங்களவர்களும் தமிழ் சித்திரை புத்தாண்டினை கொண்டாடுகின்றார்கள் என ஒரு வரையறைஇருந்தாலும் அது வாய்ப்பேச்சில் மாத்திரந்தான் இருந்து வருகின்றது காரணம் எமது தமிழ் இனம் தற்போதைய நல்லாட்சி அரசாங்கத்தில் கூட பல இன்னல்களை அனுபவித்துக்கொண்டே வருகின்றது.

அதுவும் குறிப்பாக 60 நாட்களையும் தாண்டி எமது மக்கள் வீதிகளில் போராடி வருவதனை நாம் கண்கூடாகவே பார்க்க வேண்டியிருக்கின்றது இவ்வாறு இருக்கும்போது எவ்வாறு சித்திரைப்புத்தாண்டினை மனதளவிலே கொண்டாட முடியும் ஆகவே தமிழ் சித்திரை புத்தாண்டு தமிழ் மக்களை பொருத்தவரையில் வேதனை தரும் ஆண்டாகவே இருக்கின்றது.

இன்று வடகிழக்கு மாகாணங்களை பொறுத்தவரையில் காணமால் போன எமது உறவுகள், விடுபடாமல் இருக்கும் காணிகள், படுகொலை செய்யப்பட்ட எமது உறவுகள், தேசிய விடுதலைக்காக சென்ற எங்களது போராளிகளினது விடுதலைகள் அதனை நினைத்து ஏங்கித்தவிக்கும் அவர்களது பெற்றோர்கள், உறவினர்கள் பட்டம் பெற்று வீதியோரங்களில் அகிம்சை ரீதியான போராட்டங்களை மேற்கொண்டு வரும் பட்டதாரிகள் என பலரும் மிகவும் வேதனையான துன்ப துயரங்களை சந்தித்து போராடிக்கொண்டிருக்கின்றார்கள்.

இந்த நாட்டிலே நல்லாட்சி அரசாங்கம் என்று கூறிக்கொண்டிருக்கும் அரசாங்கம் இவ்வாரான சம்பவங்களை கண்டும் காணாமலும் இருக்கின்றது ஆனால் சித்திரை வருடப்பிறப்பு தமிழர்களுடையதும் சிங்களவர்களுடையதும் என்று உதட்டளவில் கூறிக்கொண்டு வெளி உலகை ஏமாற்றி வருகின்றார்கள்.

உண்மையிலே இந்த நாட்டில் உள்ள இனவாத அரசு தமிழர்களும், சிங்களவர்களும் ஒற்றுமை என்று சர்வதேசத்திற்கு காட்டுகின்றதே தவிர தமிழர்களது சமத்துவம்,     சுயநிர்ணய உரிமை, நிரந்தரத்தீர்வு என்பவற்றை கொடுப்பதற்கு தயங்குகின்றார்கள் இது காலாகாலமாக நடைபெற்று வரும் ஒரு விடயமாகும்.

அன்று தமிழீழ விடுதலைப்புலிகள் இருந்த காலகட்டத்தில் எமது கலை, கலாசார விழுமியங்கள், பண்பாட்டு அம்சங்கள், பாராம்பரியங்கள் பேணி பாதுகாத்து வளர்க்கப்பட்டு வந்தது அந்த விடயங்களில் தற்போதைய இளைஞர்கள் சற்றும் விலகாமல் இருந்து எமது தமிழ் மக்களுடைய பாராம்பரியங்களை கட்டிக்காத்து வளர்க்க வேண்டியது ஒவ்வொரு இளைஞர்களினதும் பாரிய பொறுப்பும் கடமையுமாகும் அவ்வாரான செயற்பாடுகளை இந்த எருவில் கிராமத்தில் உள்ள மூன்று கழகங்களும் மேற்கொண்டு வருவது மிகவும் பாராட்டிற்குரிய விடயமாகும் எனவும் கேட்டுக்கொண்டார்.