கவிஞர் ‘சண்முகம் சிவலிங்கம்’ தமிழ் இலக்கிய உலகில் தன் தனித்துவ அடையாளத்தை பதிவு செய்த ஒரு படைப்பாளி !

0
755
sivalingam-aஉலகறிந்த கவிஞர் ‘சண்முகம் சிவலிங்கம்’ அவர் இம் மண்ணை விட்டுச் சென்று இன்றுடன் (20.04.2017) ஐந்து ஆண்டுகள் ஆகின்றன .

காலம் நகர்ந்தாலும் அவரின் படைப்புகள் நிலைத்து நிற்கின்றன .அவற்றின் மூலம் அவரோடு நாம் வாழ்ந்து கொண்டிருக்கின்றோம்.நவீன கவிதைகள் , சிறுகதைகள் ஆழமான விமர்சனக் கட்டுரைகள் மூலம் தமிழ் இலக்கிய உலகில் தனித்துவமான அடையாளங்களை பதிவு செய்த கவிஞர் சண்முகம் சிவலிங்கம் எமது மண்ணுக்கு பெருமை தேடித்தந்த முக்கியமான ஒரு சொத்து..
ஈழத்தின் கிழக்கே கல்முனை மாநகர் பாண்டிருப்பில் 1936 மார்கழி பத்தொன்பதில் பிறந்த இவர் 2012 சித்திரை 20 இல் தனது எழுபத்தியாறாவது வயதில் மரணித்தார் .
தமிழ் இலக்கியத் துறைக்கு ஆற்றிய பங்களிப்பை போன்றே இப் பிரதேசத்தின் கல்வித்துறைக்கும் அவர் பெரும் பங்காற்றியவர் . அறிவியல் பட்டதாரி ஆசிரியரான இவர் இந்தப் பிரதேசத்தின் பல்வேறு பாடசாலைகளில் பணியாற்றிய போதும் இறுதியில் தனது சொந்த ஊரான பாண்டிருப்பு மகா வித்தியாலயத்தில் அதிபராக பணியாற்றி ஓய்வு பெற்றார் . ஆங்கில மொழியில் மாத்திரமின்றி பல்துறைகளிலும் தேர்ச்சி பெற்ற ஒரு மனிதராக அவர் விளங்கினார் . இவரை மாணவர்கள் ஸ்டீபன் மாஸ்டர் எனவும் இலக்கிய துறைசார்ந்தோர் சசி எனவும் அவரை அழைத்தனர் .
பாடசாலை நேரம் தவிர்ந்த ஏனைய ஓய்வு நேரங்களில் பாண்டிருப்பு மகாவித்தியாலயத்தில் விஞ்ஞானம் ,ஆங்கிலம், இலக்கியப் படைப்பாக்கம் தொடர்பாக மாணவர்களை அவர் பயிற்றுவித்தார் .
தமிழ்த் தேசிய விடுதலைப் போராட்டத்தின் நியாயத்தை உணர்ந்து அதனை நேசித்தவராக காணப்பட்ட இவர் போராட்ட களத்தில் தனது ஒரு மகனை இழந்தவர் . அந்த வலியையும் , மன உணர்வுகளையும் இவரின் பெரும்பாலான படைப்புகளில் காணலாம் .
கவிஞர் சண்முகம் சிவலிங்கம் அவர்களின் படைப்புக்கள் இந்திய,இலங்கைப் பல்கலைக்கழகங்களின் தமிழ்த் துறைகளின் கவனத்துக்கு எடுக்கப் பட்டிருக்கின்றன .
நீர்வளையங்கள் (கவிதை தொகுப்பு) ,சிதைந்து போன தேசமும் ,தூர்ந்து போன மனக்குகையும் (கவிதை தொகுப்பு) காண்டாவனம்(சிறுகதைத் தொகுப்பு )ஆகியவை இவருடைய வெளிவந்த நூல்களாகும் . இவரின் பல படைப்புகள் ஆங்கிலம் உட்பட பிற மொழிகளில் மொழி பெயர்க்கப் பட்டுள்ளன .பல கவிதைகளை அவர் தமிழுக்கு மொழி பெயர்த்துமிருந்தார் ஆங்கில மொழியிலும் அவர் கவிதைளை எழுதியிருந்தார். எழுத்தாளர் உமாவரதராஜனின் ‘எலியம்’ சிறுகதை மற்றும் அவருடைய ‘காட்டுத்தோடை’ சிறுகதை என்பன அஷ்லி ஹல்பே, ரஞ்சினி ஒபேசேகர்,எம்.ஏ. நுஃமான் ஆகியோர் தொகுத்த A Lankan Mosaic என்னும் ஆங்கிலத் தொகுப்பில் இடம் பெற்றிருக்கின்றன .
‘நீக்கம்’ என்ற கதையும் ,’ஆக்காண்டி’, ‘சமாதானச் சாக்கடை’ போன்ற இவரது படைப்புகள் பிறரால் மொழிபெயர்க்கப்பட்டுள்ளன. கனடாவிலிருந்து செல்வா கனகநாயகம் தொகுத்த Lutesong And Lament என்னும் ஆங்கிலத் தொகுதியில் இவை இடம்பெற்றுள்ளன. பேராசிரியர் சிவசேகரம் ‘துருவத் தரையின் வசந்தப் பூவுக்கு’ என்னும் கவிதையையும் இன்னும் சில கவிதைகளையும் ஆங்கிலத்தில் மொழிபெயர்த்திருக்கிறார். இவை Saturday Reviewஇல் வெளிவந்தன. இவரது ஆக்காண்டி கவிதை சிங்களத்திலும் மொழி பெயர்க்கப்பட்டிருந்தது.
இவர் சுயவிளம்பரத்தை விரும்பாத ஒரு மனிதர் .எனினும் இன்று அவரைப் பற்றி பேசுவதற்கும் ,நினைவு கூர்வதற்கும் நாம் விழைகிறோம் எனில் அதற்குக் காரணம் அவருடைய கலை -இலக்கிய ஆற்றலையும் ,நேர்மையையும் ,சமூகப் பற்றையும் தவிர வேறெவை காரணங்களாக இருக்கும் ?
புவிநேசராசா கேதீஸ்