அசைபோடுதல்’ எழுத்தாளர் நவம் பற்றிய நினைவுப்பகிர்வு | மெளனகுரு

0
1400

navam masster-a“அசைபோடுதல்“ எழுத்தாளர் நவம் என அறியப்பட்ட ஆறுமுகம் மாஸ்டருடனான தொடர்புகளும் அனுபவங்களையும் பகிர்ந்துகொள்கின்றார் பேராசிரியர்  மௌனகுரு அவா்கள்.

1957,58 காலப் பகுதி ,அன்றைய இலங்கை அரசுக்கெதிராக சத்தியாக்கிரகம், சட்டமறுப்பு என பல அகிம்சைப்போராட்டங்களைத் தமிழரசுக் கட்சி நடத்திக் கொண்டிருந்த காலம்,

 

மட்டக்களப்புக் கச்சேரியை மக்கள் சுற்றி இருந்து அது இயங்க விடாமல் அறப்போராட்டம் நடத்திய காலம் அது /அப்போது எனக்கு 15.16 வயதிருக்கும் கல்வித் தராதர உயர் தர வகுப்பில் படித்துக்கொண்டிருந்தேன். என்னை கிழக்கு மாணவ மன்றத் தலைவராகத் தெரிவு செய்திருந்தார்கள்.

 

எனவே தினமும் போராட்டக்களம் செல்வதும், போராட்டத்தில் ஈடுபடுவதுமாக இருந்த காலம்.

 

படிப்புப் போனாலும் பரவாயில்லை உரிமைப்போரே முக்கியம் என லட்சிய வெறிகொண்டு நானும் என் போன்ற பல முதிரா இளைஞர்களும் அர்ப்பணிபோடு இயங்கிய காலம்

 

மட்டக்களப்புக் கச்சேரியை நோக்கி மட்டக்களப்பின் கிராமங்களும், பாடசாலைகளும், மன்றங்களும், சங்கங்களும் அலை அலையாக தினமும் கோசமிட்டுக்கொண்டு வந்த காலம்

 

கடைக்காரகளும் மக்களும் அவர்கட்கு உணவும் பானங்களும் கொடுத்து உபசரித்த காலம் அப்போராட்டக் களம் எனக்கு என்வயதொத்த நண்பர்களையும், என் வயதுக்கு மூத்தோரையும் அறிமுகம் செய்தது. நான் அப்போது அனல் தெறிக்க மேடையில் பேசுவேன். என் பேச்சு எனக்கு பலரை நெருக்கமாக்கியது.

 

அப்போது என்னோடு நெருக்கமான பலர் ஞாபகம் வருகிறார்கள். அன்றைய

மட்டக்களப்பு பாராளுமன்ற உறுப்பினர் செ இராசதுரை,
தமிழரசுக்கட்சி செயலாளர்அமிர்தலிங்கம்,
வித்துவான் கமலநாதன் மாஸ்டர்,
சட்டத்தரணி சாம் தம்பிமுத்து,
அவர் மனைவி கலா மாணிக்கம்,
வணசிங்க மாஸ்டர்,
காசி ஆனந்தன்,
அற்புதராஜா குரூஸ்,
சுபத்திரன் என அழைக்கப்பட்ட தங்கவடிவேல்,
சற்றடே கந்தசாமி,
ஓவியர்குமார்,
பாலுமகேந்திரா,
இவர்களுடன் ஆரையம்பதிவாசிகளான…..
ஆரையூர் அமரன்,

நவம் மாஸ்டர்,
முனா கானா,
அன்புமணி நாகலிங்கம்,
ஆரையூர் இளவல் என அழைக்கப்படும் விதானையார் செல்லதம்பி,
ஆகியோரும் அறிமுகமானார்கள்
சுபத்திரனுக்கும், காசி ஆனந்தனுக்கும் அற்புதராஜா குரூஸுக்கும்,  நவம் மாஸ்டர் மிக நெருக்கமாவர். எனக்கு முதல் மூவரும் நெருக்கமானவர்கள், இதனால் நவம் மாஸ்டரும் எனக்கு நெருக்கமானவரானார்.
நவம் மாஸ்டர் என்னைவிட 15 வயது மூத்தவர். எனினும் நண்பரானார்.
அப்போது அவரது நந்தாவதி எனும் சிறுகதை கல்கியில் வந்த காலம் கல்கியில் மட்டக்களப்பு எழுத்தாளரின் கதைவருவது மிகப்பெரிய விடயமாகக் கருதப்பட்ட காலம் அது எம் மத்தியில் அவர் மிக மதிப்பிற்குரிய எழுத்தாளரானார்.
நீண்ட வெள்ளை வாலாமணி, வெள்ளை வேட்டி, கம்பீரமான நடை வாலாமணிப் பக்கட்டுக்குள் கையை வைத்துக்கொண்டு கதைக்கும் தோற்றம், இழுத்து இழுத்து அதே வேளை மெல்லிய  கிண்டலோடு நகைச்சுவையாக அசல் மட்டக்களப்புத் தமிழில் உரையாடும் மனிதராக மாஸ்டர் எனக்கு அறிமுகமானார்.
அவரும்,காசி ஆனந்தனும், சுபத்திரனும் அற்புதராஜா குரூஸும் உரையாடுவது சிறு பராயத்தினரான எமக்கு மிகச் சுவராஸ்யமாக இருக்கும்.

 

நவம் மாஸ்டர் மட்டக்களப்பில் திருமணம் புரிந்திருந்தார்.

 

அது ஓர் புரட்சித் திருமணம் எதிர்ப்புகளுக்கு மத்தியில் நிகழ்ந்த திருமணம். அக்கா சிங்களவாடியச் சேர்ந்தவர். இத்திருமணத்தில் நவம் மாஸ்டருக்கு மிக ஒத்தாசையாக இருந்தவன் சிங்களவாடியைசச் சேர்ந்தரான கவிஞர் சுபத்திரன். செ.இராசதுரையும் இதற்கு உதவினார் எனக் கேள்விப்பட்டுள்ளேன். அக்காலத்தில் இது பரவலாகப் பேசப்பட்டது.
அக்குடும்பம் எனக்கு பின்னால் மிக நெருக்க உறவானது, அப்பிள்ளைகள் என்னை மாமா என அழைக்க ஆரம்பித்திருந்தனர்.
ஒரு பிள்ளையின் பெயர் கீதாஞ்சலி. அப்பெயரை இட்டவன் நானே. அத்தனை குடும்ப இறுக்கம்.
1965 இல் பேரா.வித்தியானந்தன் தயாரித்த அன்றைய ராவணேசன் மட்டக்களப்பு நகர மண்டபத்தில் மேடையேறியது. பல்கலைக்கழக மாணவனாக இருந்த நான் அதில் இராவணனாக நடித்திருந்தேன்.
அந்நாடகத்தை இன்றைய மாநரசபை மண்டபத்தில் முன் வரிசையில் அமர்ந்திருந்து பார்த்தார் நவம் மாஸ்டர் அந்நாடகம் பார்த்த பின்னர் என்மீது அலாதிப் பிரியமானார்.
அதனை அடிக்கடி ஞாபகப்படுத்தி ரசித்து ரசித்துக்கூறி என்னையும் மகிழ்ச்சியிலாழ்த்தித் தானும் மகிழ்வார்.  பலருடனும் கூறி மகிழ்வார் அவர் ரசித்துச் சொல்வதை கேட்க இன்பமாயிருக்கும். அதனைப் பதியத் தவறி விட்டேன்.
1968 ஆண்டு குன்றக்குடி அடிகளார் மட்டக்களப்பு வந்திருந்தார். அச்சமயம் நான் மார்க்ஸிஸக் கருதுக்களால் கவரப்பட்டிருந்தேன். இங்குள்ள மேட்டிமைக் குடியினர் அடங்கிய இந்து மா மன்றம் நல்லெண்ணத்தோடு ஒரு சமபந்தி போசனத்திற்கு ஏர்பாடு செய்ததுடன் காந்தி பூங்காவில் ஒரு பெரும் கூட்டத்துக்கும் ஒழுங்கு செய்திருந்தது.
அப்போது எனக்கு 25 வயதிருக்கும் மிகத் துடுக்காகப் பேசுவேன். சாதி என்பது தமிழர் மத்தியில் உள்ள ஒரு நச்சு மரம் சமபந்தி போசனம் என்பது அந்த மரத்தின் கிளை தறிக்கும் வேலை கிளைகளை வெட்டுவதல்ல அதன் ஆணிவேரை அழிக்கும் முயற்சி மேர்கொள்ளப்படவேண்டும். எனக் கூறி தமிழர் மத்தியில் சாதி தோன்றி வளர்ந்தவாற்றை வரலாற்றுமுறையில் விளக்கிப் பேசினேன்.
குன்றக்குடி அடிகளாருக்கும் எனக்கும் பெரும் வாக்குவாதம் நடந்தது. அடிகளார் பெரிய மனிதர். அறிவாளி அனுபவஸ்தர். நானோ அப்போதுதான் அரும்பி வரும் இளைஞன்.
அடிகளார் சாதி வேற்றுமைக்கு எதிராக சம்பந்தர், அப்பர்போன்ற நாயன்மார்கள் போராடியமையை எனக்கு விளக்கினார். நான் அப்போது கைலாசபதியின் நாடும் நாயன்மாரும் கட்டுரையின் தாக்கத்துள்ளாகியிருந்தேன்.
தமது நலத்துக்காக வேளாள இனத்தினரான அப்பரும், பிராமண இனத்தினரான சம்பந்தரும் தாழ்த்தப்பட்ட மக்களை அணிதிரட்டிய கதைதான் அது போராட்டம் முடிந்ததும் அடுத்து வந்த சோழ காலத்தில் சாதிமுறை இறுக்கமாகிவிட்டதுதானே. ஆனானப் பட்ட அவர்களாலேயே அதனை உடைக்க முடியவில்லையே என நான் எதிர்வாதம் புரிந்தேன்.

 

பெரிய மனிதரும் அறிவாளியும் அனுபவஸ்தரும் களம் பல கண்டவருமான குன்றக்குடி அடிகளார் இந்தச் சிறுவன் பற்றி என்ன நினைத்திருப்பார் என இப்பொது யோசித்துப் பார்க்கிறேன்.
இளம் கன்று
பயமறியாத வயது
இவற்றயெல்லாம் அருகில் நின்று பார்த்தவர் நவம் மாஸ்டர்.அதன்பின் என் அருகில் வந்து சபாஸ் எனத் தட்டிக்கொடுத்தார். எல்லாரிடமும் அத் துணிச்சலைச் சொல்லிச் சொல்லி மகிழ்ந்திருக்கிறார் எனப் பின்னர் அறிந்தேன்.
நவம் மாஸ்டர் முற்போக்குவாதி. திராவிடக்கழக,திராவிட முனேற்றக் கழக தீவிர அனுதாபி தமிழினம் சாதி, மத, பிரதேச பேதமின்றி இருக்கவேண்டும் என்ற கனவு கண்ட இளைஞர்.

 

இக்கனவு அன்றைய மட்டக்களப்புத் த்மிழரசுக்கட்சி இளஞர்களிடம் நிறைய இருந்தது.அவர்கள் பெரியார், அண்ணதுரை நூல்கள் வாசிப்பவர்கள். சூனா மானா என அன்று அழைக்கப்பட்டனர் அதாவது சுயமரியாதைக் கட்சி அனுதாபிகள்.
அன்றைய மட்டக்களப்பு பாராளுமன்றப் பிரதி நிதியும் முடிசூடா மன்னன் எனப் பெயரெடுத்தவருமான செ.இராசதுரை இக்கருத்துகளை அன்று மட்டக்களப்பு மக்கள் மத்தியில் விதைத்தவர்களுள் முக்கியமானவர்.

இதற்காக அவர் அடி வாங்கிய சம்பவங்களும் உண்டு
நவம் இராசதுரையின் அணுக்கத் தொண்டன்
இத்தகைய கருத்துக்கள் தமிழரசுக்கட்சிக்குள் புகுவதற்கு  மட்டக்களப்பு ஆற்றிய பங்கு என இதனைப் பேராசிரியர் சிவத்தம்பி ஓரிடத்தில் குறிப்பிட்டுளார். 
சென்ற மாதம் ஆரையம்பதியில் நடை பெற்ற “ஆரையூர் கண்ணகை“ வெளியீட்டு விழாவில் ஒரு பொடிபயல் அந்தப் பெரிய மனிதரான குன்றக்குடி அடிகளை எதிர்த்து பேசித் த்ம் கருத்துகளை முன் வைத்து வாதடிய அந்த நிகழ்வினை பலர் முன் நினைவு கூர்ந்தார்.
1977/78 களில் நான் என் கலாநிதிப்பட்ட ஆய்வுக்காக கூத்து நூல்கள்,கூத்து அண்ணவிமார், கூத்துக்கலைஞர்கள்,அதன் ஆற்றுகை முறைமை என மட்டக்களப்புக் கிராமங்களெல்லாம் அலைந்தபோது ஆரையம்பதியைப் பொறுப்பெடுத்து அக்கலைஞர்களை அறிமுக செய்து உதவியவர் நவம் மாஸ்டர்.
அவர் வீட்டில் இரண்டு மூன்று நாட்கள் தங்கி ஆரையமபதியில் கூத்துத் த்கவல்களைத் திரட்டினேன்

 

அபோதுதான் ஆரையம்பதியில் ஒரு வீட்டில் பேணிவைக்கப்ப்பட்டிருந்த கூத்து முடி எனக்கு அறிமுகமானது.

அந்த வீட்டுக்கு என்னை அழைத்துச் சென்றவர் நவம் மாஸ்டர்.

 

அந்த முடியினைப்பார்க்க நவம் மாஸ்டருடன் மூனா கானாவும். ஆரையூர் இளவலும் அன்புமணியும் வந்திருந்தனர். இன்று அந்த முடி மட்டக்களப்பின் அடையாளமாக எல்ல இடங்களிலும் போடப்படுகிறது. அழைப்பிதழ்களில் அச்சடிக்கப்படுகிறது.
அவ் ஆய்வின் முதற்பதிப்பு நூலாக 1998 இல் வந்தது, இரண்டாம் பதிப்பு 2016 இல் வந்தது. அண்மையில் ஆரையம்பதியில் நிகழ்ந்த “ஆரையூர் கண்ணகை“  புத்தக வெளியீட்டு விழாவில் அவர் விருந்தினராக வந்திருந்தார். நானும் சென்றிருந்தேன்.
அச்சமயம் அவரைச் சந்தித்தபோது மட்டக்களப்பு மரபுவழி நாடகங்கள் என்ற அந்நூலின் இரண்டாம் பதிப்பை அவருக்கு அளித்து மகிழ்ந்தேன்.
ஒரு குழந்தைப் பிள்ளையைப்போல இரு கரம் நீட்டி ஆர்வத்தோடு வாங்கிய அவர் ஆச்சரியத்துடன் என்னைப் பார்த்து எனக்கா? எனக்கா? என இருமுறை கேட்டதன் அர்த்தம் என்ன என இப்போது யோசிக்கிறேன்.

 

அதில் நான், மூனாகானா, ஆரையூர் இளவல் முடியைப்பார்த்தபடி இருக்கும் படம் இருந்தது. அதைப்பார்த்து மகிழ்ந்தார்.

 

பின்னாளில் மட்டக்களப்பின் அரசியல் நிலைமைகள் அவரை தமிழ் நாட்டுக்குத் துரத்தி விட்டன.

அவருக்குத் தமிழ் நாடு ஒரு கற்பனை பூமி. சினிமா நடிகர்களோடு நல்ல நட்பு வைத்திருந்தார். எற்கனவே கண்ணதாசன்,  அவரது நண்பர் ஜெமினிகணேசன், சிவாஜி கணேசன், எம் ஜி ஆர், எஸ்.ராஜேந்திரன்.  மேஜர் சுந்தரராஜன் ஆகியோர் அவருக்கு நன்கு தெரிந்தவர்கள்.
ஜெமினி கணேசனும் மேஜர் சுந்தரராஜனும் அவர்து குடும்ப நண்பர்களும் கூட.

 

1998 இல் சென்னைப் பலகலைக் கழ்கத்தில் நான் உரையாற்றியபோது பாலு மகேந்திராவையும் அழைத்துக்கொண்டு வந்து விட்டார். கூட்டம் முடிய அப்படியே மூவரும் சென்னை ஊட்லன்ட்ஸ் ஹொட்டல் சென்று சாப்பிட்டோம்.

நிறைய உரையாடினோம்.
1999 இல் சென்னையில் ஒரு திருமண வீட்டில் நான் கலந்து கொண்டபோது மேஜர் சுந்தரராஜனை எனக்கு அறிமுகம் செய்து வைத்து இவர் எங்கள் நாட்டு நடிகர் என என்னை அவருக்கு அறிமுக படுத்தியமை ஞாபகம் வருகிறது.
1980 களில் நான் அவரைத் தமிழ் நாட்டில் மீண்டும் சந்திக்கிறேன் சந்திக்கிறேன். நடிகர் நாசரும் நானும் உரையாற்றிய கூட்டம் ஒன்றுக்கு வந்திருந்தார். இவற்றில் சில நிகழ்ச்சிகளை அண்மையில் ஆரையம்பதியில்  நடந்தேறிய “ஆரையூர் கண்ணகை“ நுால் வெளியீட்டு கூட்டத்தில் நினைவு கூர்ந்தார்.

நவம் மாஸ்டரின் சிறுகதைகள் தொகுதியாக வந்துள்ளன. இரண்டு நாவல்களும் எழுதியுள்ளார்.
நவம் மாஸ்டரும் அவர் மனைவியும் அண்மையில் இந்தியாவை விட்டு சொந்த ஊரான ஆரையம்பதியில் இறுதி நாட்களைக் கழிக்க வந்திருந்தனர். சொந்த பந்தங்கள், சுற்றம், நண்பர்களோடு நிறைவான வாழ்வு வாழ்ந்தனர்.
அக்காவும் அவரும் தம்வீடு வந்து ஒரு நாள் பொழுதைக் கழிக்குமாறு அன்பு வேண்டுகோள் விடுத்தனர். நானும் விரைவில் செல்லவிருந்தேன்.
என் மாணவன் ஒருவனிடம் அவரை பேட்டிகாணச் சொல்லியிருந்தேன்.

இன்னொரு மாணவியிடமும் சொல்லியிருந்தேன்.
அதற்கான வினாக்களையும் அவர்களுக்குத் தயாரித்துக் கொடுத்திருந்தேன்.
13.4.2017 வியாழன் மலை 4.00 மணிக்கு நாம் அவரைக் காணச் செல்வதென்பது எங்கள் திட்டம்.
காலை முகநூலைத் திறந்தபோது அவரது இறப்புச் செய்திதான் முதலில் கிடைத்தது. என்ன கொடுமை இது !
1950 களின் மட்டக்களப்பு அரசியல், இலக்கியம், பண்பாடு, வாழ்க்கைமுறை எல்லாவற்றையும் தனக்குள் தேக்கி வைத்திருந்த அனுபவப் பெட்டகம் அது வயது சென்ற ஒரு அனுபவஸ்தன் இறக்கையில் ஒரு நூல் நிலையம் அழிகிறது என்பது ஓர் ஆபிரிக்கப் பழமொழி. யாழ் நூல்நிலையம் மட்டுமா அழிந்தது. அறிவும் அனுபவமும் மிக்க ஒவ்வொரு முதியவரின் இறப்பிலும் ஒவ்வொரு நூல் நிலயமும் நம் மத்தியில் அழிந்து கொண்டிருக்கின்றன.
சாதாரண நூல் நிலையத்தையே பாவிக்காத தமிழினம். இந்த நூல் நிலையங்களையா கணக்கில் எடுக்கப்போகிறது. எனினும் நாம் எம் இளம் தலைமுறைக்கு இவர்களைப்பற்றிச் சொல்லிக்கொண்டேயிருப்போம்.
எறும்பூரக் கற்குழியும்
எறும்பு தொடர்ச்சியாக ஊர்வதால் கல்லிலும் கூடக் குழி ஏற்படும் என்பது இதன் அர்த்தம்

 

நவம் ஐயா !

சென்று வாருங்கள் எனக் கனத்த நெஞ்சோடு பிரியாவிடை தருகிறேன்………

navam master-b

Thanks

Arayampathy.lk