அன்னை பூபதிக்கு இலங்கையின் அதி உன்னத சிவில்சமூக செயற்பாட்டாளர் கௌரவம் வழங்கப்பட வேண்டும்!

0
778

poovathiamma-a அன்னை பூபதிக்கு இலங்கையின் அதி உன்னத சிவில்சமூக செயற்பாட்டாளர் என்ற கௌரவம் வழங்கப்பட வேண்டும் என்ற கோரிக்கையை மட்டக்களப்பு மாவட்ட சிவில்சமூக அமைப்புக்களின் ஒன்றியம் முன் வைத்துள்ளது..

இன்று மட்டக்களப்பு நாவலடி அமைந்துள்ள அன்னை பூபதி அவர்களின் நினைவிடத்தில் நடைபெற்ற பூபதி அம்மையாரி 29 வது ஆண்டு நினைவு தினத்தில் மேற்படி கோரிக்கையை விடுத்துள்ளனர்.

ஊடக அறிக்கையின் முழு விபரம் வருமாறு

அன்னை பூபதிக்கு இலங்கையின் அதி உன்னத சிவில்சமூக செயற்பாட்டாளர் என்ற கௌரவம் வழங்கப்பட வேண்டும்

இன்று மட்டக்களப்பு மண்ணில் தனது மக்களின் சமாதானத்திற்காய் உண்ணா நோன்பிருந்து உயிர் நீத்த அன்னை பூபதி அம்மையாரின் 29 வது நினைவு நாள்

இன் நாளில் இலங்கையின் அதி உன்னத சிவில்சமூக செயற்பாட்டாளர் என்ற கௌரவத்தை அன்னை பூபதிக்கு வழங்க வேண்டுமென்ற கோரிக்கையை மட்டக்களப்பு சிவில் சமூக அமைப்புக்களின் சார்பாக நாம் முன்வைக்கின்றோம்.

poovathiamma-b

இலங்கை வரலாற்றில் ஒரு சிவில்சமூக செயற்பாட்டாளரினால் தான் சார்ந்த மக்களுக்கான நீதியையும் சமாதானத்தையும் பெற்றுக் கொடுப்பதற்காக மேற்கொள்ளப்பட்ட அதிஉயர் தியாகமாக அன்னை பூபதி அவர்களின் மரணத்தையே கருதுகின்றோம்.

ஒரு நாட்டின் ஆக்கிரமிப்பு படைக்கு எதிராக தன்னிடம் இருந்த அகிம்சை என்ற ஆயுதம் ஏந்தி இறுதி வரை போராடி உயிர் நீத்த பூபதி தாயின் தியாகத்தை நாட்டில் உள்ள அனைத்து சிவில்சமூக அமைப்புக்களும் மனிதவுரிமை அமைப்புக்களும் இனிவரும் காலங்களில் நினைவு கூர்ந்து அவரின் தியாகத்திற்கு மதிப்பளித்து அவரை இலங்கையின் அதி உன்னத சிவில்சமூக செயற்பாட்டாளராக கௌரவப்படுத்த வேண்டும் என்ற
கோரிக்கையை முன்வைக்கின்றோம்.poovathiamma-c

அன்னை பூபதி அம்மையார் அவர்களின் உயிர் பிரியும் வரையிலான உண்ணாவிரத போராட்டமானது மட்டக்களப்பு அம்பாறை மாவட்ட சிவில் சமூகத்தின் அதி உயர் எழுச்சியின் அடையாளம் ஆகும்.

மட்டு-அம்பாறையில் செயற்பட்ட சிவில்சமூக அமைப்பான அன்னையர் முன்னணியில் இருந்து கொண்டு இந்து சமுத்திரப் பிராந்திய வல்லரசான இந்திய படைகளுக்கு எதிராக தனது உறுதி தளராத ஆன்ம பலத்துடன் உண்ணாவிரதம் என்ற அகிம்சை போராட்டத்தை நடாத்தி தனது மக்களின் சமாதானத்திற்காக உயிர் நீத்த
இலங்கையின் உண்மையான சிவில்சமூக செயற்பாட்டாளரான அன்னை பூபதி அம்மையாரின் தியாகம் முப்பதாண்டு கால யுத்தம் காரணமாகவும் பிராந்திய உள்நாட்டு அரசியல் காரணங்களுக்காகவும் முடி மறைக்கப்பட்டுவிட்டன இதுவே பெரும்பான்மை இனத்தில் அல்லது சர்வதேச நாடுகளில் இதுபோன்ற தியாகங்கள் மேற்கொள்ளப்பட்டால் அவர்களை அந்த நாட்டு அரசாங்கங்களே கௌரவப்படுத்தியிருக்கும் ஆனால் இலங்கையை பொறுத்தமட்டில் இன்னும் அந்த நிலை உருவாகவில்லை தமிழர்கள் என்பதற்காக அனைத்தையும் விடுதலைப் புலிகளுடன் ஒப்பிட்டு பார்த்து அனைத்து சிவில்சமூக செயற்பாட்டாளர் களின் தியாகங்களையும் வெளிக்கொண்டுவர முடியாது தடை விதித்து வருகின்றனர் இந்த நிலை மாறவேண்டும். அந்த மாற்றம் தியாகத் தாய் அன்னை பூபதியில் இருந்து ஆரம்பிக்க வேண்டும் என்பதே எமது வேண்டுகோளாகும்.

தனது சமூகத்திற்காக ஒரு நாட்டின் ஆக்கிரமிப்பு படைக்கு எதிராக தனது மக்கள் நிம்மதியாக சமாதானமாக வாழ வேண்டும் என்பதற்காக உண்ணாவிரதம் இருந்து உயிர் நீத்த மாபெரும் சிவில்சமூக செயற்பாட்டாளரான அன்னை பூபதி அவர்களை
இலங்கையின் உன்னதமான உண்மையான தலைசிறந்த சிவில்சமூக செயற்பாட்டாளர் என்ற உயர் அந்தஸ்தை நாம் வழங்குகின்றோம்.

இதனை இலங்கையில் உள்ள அனைத்து சிவில்சமூக அமைப்புக்களும் ஏற்றுக்கொண்டு அவரின் தியாகத்திற்கு மதிப்பளித்து நீங்களும் அவரை இலங்கையின் தலைசிறந்த சிவில் சமூக செயற்பாட்டாளராக அடையாளப்படுத்த வேண்டும் என வேண்டுகோள் விடுக்கின்றோம்.

-நன்றி –

மட்டக்களப்பு மாவட்ட சிவில்சமூக அமைப்புக்களின் ஒன்றியம்