பொன்னால் ஆக்கப்பட்ட விளக்காக இருந்தாலும் அதனை தூண்டுவதற்கு ஒரு தூண்டுகோள் இருக்க வேண்டும்

0
609

srinesan-aபொன்னால் ஆக்கப்பட்ட விளக்காக இருந்தாலும் அதனை தூண்டுவதற்கு ஒரு தூண்டுகோள் இருக்க வேண்டும் அப்போதுதான் அந்த விளக்கு எரியும் என்பார்கள் அதனையே தனிமனிதனாக இருந்து மக்களுக்கான சேவையினை செய்வதற்கு முன்வந்தமையை இட்டு நாம் இருவருக்கும் நன்றி கூற கடமைப்பட்டுள்ளோம் என மட்டக்களப்பு மாவட்ட பாராளுமன்ற உறுப்பினரும் அபிவிருத்திக்குழு இணைத்தலைவருமான ஞா.சிறிநேசன் தெரிவித்தார்..

புலம்பெயர்ந்து கனடாவில் வாழ்கின்ற மட்டக்களப்பினை சேர்ந்த முருகேசு விசாகன்; என்பவருடன் ஆசிரியர் ஆர்.தில்லைநாயகம் தொடர்பு கொண்டதன் பயனாக அவரால் வழங்கப்பட்ட நன்கொடை மூலம் எருவிலில் உள்ள மூன்று கழகங்களுக்கும் தகரத்திலாளான கொட்டகை வழங்கியதுடன் கடை வைப்பதற்காக வேண்டி ஒருவருக்கான வாழ்வாதார உதவியும் வழங்கும் நிகழ்வானது மூன்று கழகத்தலைவர்களின் தலைமையில்  நேற்று எருவில் நூலகத்தில் நடைபெற்றது.

இந்நிகழ்விற்கு மட்டக்களப்பு மாவட்ட தமிழ்த்தேசிய கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர்களான ஞா.சிறிநேசன், சீ.யோகேஸ்வரன், கிழக்கு மாகாணசபை உறுப்பினர் த.கலையரசன் மற்றும் எருவில் கண்ணகி வித்தியாலய அதிபர் சா.பரமானந்தம் கிராமத்தில் உள்ள ஆலயங்களின் தலைவர்கள், கிராம அபிவிருத்தி சங்க உறுப்பினர்கள்,கண்ணகி வித்தியாலய பழைய மாணவர்கள், பெண்கள் அமைப்பினர் மூன்று கழகங்களையும் உடைய உறுப்பினர்கள், நலன் விரும்பிகள் என பலரும் கலந்து கொண்டனர்.

இவர் இங்கு தொடர்ந்து உரையாற்றுகையில்.

இந்த நிகழ்வு நடைபெறுவதற்கு ஆர்.தில்லைநாயகம் சூத்திரதாரியாக இருந்து அவருடன் தொடர்பு கொண்டு இந்தக்கிராமத்தின் நிலை தொடர்பாக எடுத்துக்கூறியதன் பயனாக அங்கிருந்து மு.விசாகன் உதவி செய்திருக்கிறார் என்றார் அவரது பெருந்தன்மையை நாங்கள்  பாராட்டாமல் இருக்க முடியாது.

இவர்கள் இருவரும் ஒரு தனிமனிதனாக இருந்து கொண்டு இவ்வாரான உதவிகளை செய்ய முற்பட்டிருக்கின்றார்கள் என்பதனை இட்டு நாங்கள் அனைவரும் நன்றி கூற கடமைப்பட்டவர்களாக இருத்தல் வேண்டும் இன்று இவர்கள் இருவரும் மட்டக்களப்பு, அம்பாறை ஆகிய மாவட்டங்களில் தன்னாலான சமூகப்பணிகளை தொடர்ந்து ஆற்றி வருகின்றார்கள்; இனிமேலும் இவர்களது இந்தப்பணி தொடர்ந்து கொண்டு செல்ல வேண்டும் அதன்மூலம் இங்குள்ள மக்கள் பலனடைய வேண்டும் என்பதுதான் எமது எண்ணப்பாடும்.

இந்தக்கிராமத்திலே பல குறைபாடுகள் காணப்படுகின்றமையை இங்குள்ளவர்கள் அனைவரும் சுட்டிக்காட்டியிருந்தார்கள் அதனை நாங்கள் ஏற்றுக்கொள்கின்றோம் உரிய இடங்களில் உரிய பிரச்சனைகளை முன்வைப்பதன் மூலந்தான் நாங்களும் அதனை தொடர்ந்து செய்வதற்கு உறுதுணையாக அமையும்.

நான் பாராளுமன்றம் சென்று ஒன்றரை வருடங்கள் முடிந்திருக்கின்றது இன்னும் மூன்றறை வருடங்கள் எஞ்சியிருக்கின்றது இந்த காலகட்டத்தில் இந்தக்கிராமத்திற்கான பணிகளை செய்வதற்கு எண்ணியிருக்கின்றேன் எப்படியோ செய்து தருவேன் என்பதனையும் கூறிகொள்கின்றேன்.

எமக்கு அரசாங்கத்தின் மூலம் சென்ற முறை 6 வீதிகளை ஒதுக்கி இருந்தார்கள் அந்த ஆறு வீதிகளையும் பரவலாக கற்குடா தொகுதியில் இருந்து பட்டிருப்பு தொகுதி வரைக்கும் அந்த தொகுதி மக்கள் விடுத்த கோரிக்கைகளுக்கு அமைவாக அந்தவீதிகளை அமைப்பதற்கான நடவடிக்கைகளை செய்திருக்கின்றோம்.

இதே போன்று இம்முறையும் அவ்வாரான வீதிகள் சம்பந்தமான ஒதுக்கீட்டினை தருவார்கள் என நம்புகின்றோம் அவ்வாறு தரும் பட்சத்தில் எருவில் கிராமத்திற்கு முன்னுரிமை வழங்குவோம் என்பதனையும் கூறிக்கொள்கின்றேன்.

அண்மையில் நடைபெற்ற அபிவிருத்தி குழு கூட்டத்தில் வீதி தொடர்பாக சில முடிவுகளை எடுத்திருந்தோம் அதாவது மணல் வீதிகள் அனைத்தும் கிரவல் வீதிகளாகவும், கிரவல் வீதிகள் கொங்கிறிட் வீதிகளாகவும், பிரதான வீதிகள் அனைத்தும் காபட் வீதிகளாக அமைக்க வேண்டும் எனவும் தீர்மானம் எடுத்திருக்கின்றோம்.

அந்த அடிப்படையிலே இனிவரும் காலங்களில் வீதி அபிவிருத்தி தொடர்பான செயற்பாடுகள் அமையும் கிழக்கு மாகாணசபை உறுப்பினர்கள் வீதி தொடர்பான விபரங்களை எங்களிடம் தருகின்றபோது தொடர்ந்தும் வீதி அபிவிருத்தி தொடர்பான நடவடிக்கைகளை மேற்கொள்ள வசதியாக இருக்கும் எனவும் கூறினார்.