வாழ்க என்றால் வாழ்ந்து விடாது! – வளர்க்க வேண்டும்.

0
613

   உலகம் மிகப் பெரியது. ஏராளமான உயிரினங்களுக்கு இருப்பிடமாய் இருப்பது. எல்லா                     உயிர்களும் தத்தம் எண்ணங்களை ஏதோ ஒரு வகையில் பரிமாறிக் கொள்கின்றன. அதனால்தான் அவை கூட்டு வாழ்க்கை வாழ்கின்றன.

மனித இனமும் தகவல் பரிமாற்றத்திற்கு சைகையிலிருந்து வளர்ச்சி பெற்று மொழி உருவாக்கிக் கொண்டது. ஓர் இனத்தின் அடையாளமே தாய்மொழியாகும். மனித இனத்துக்கு இதைவிடச் சிறந்த தகவல் தொடர்பு சாதனம் வேறு கிடையாது என்றே உறுதியாகக் கூறலாம். அந்த வழியில் தமிழ் மக்களுக்கும் சிறந்த அடையாளமாகத் தமிழ் விளங்குகிறது. அது உயிரோடும், உணர்வோடும் ஒட்டிப் பிறந்தது; பிரிக்க இயலாத தொடர்புடையது. தமிழ் வாழ்க என்று முழங்கினால் தமிழ் வளர்ந்து விடுமா? அதனை வளர்க்க வேண்டும். உலகம் முழுவதும் வாழ்ந்து கொண்டிருக்கும் ஆங்கிலத்தை அம்மக்கள் வாழ்க என்று முழங்கவில்லை. ஆனால், அதனை உலகம் முழுவதும் பேசச் செய்து விட்டார்கள்.

ஆதி காலம் முதல் வழக்கத்தில் இருந்துவரும் தமிழுக்கு நீண்ட பாரம்பரியமும், இலக்கண இலக்கியமும் உள்ளன. தமிழ் இலக்கண நூலான தொல்காப்பியம் கி.மு. முதல் நூற்றாண்டைச் சேர்ந்தது. கி.மு. ஐந்தாம் நூற்றாண்டில் எழுதப்பட்ட தமிழ் பிராமி எழுத்துகள் ஆதிச்சநல்லூரில் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன.பாண்டிய மன்னர்கள் மூன்று தமிழ்ச் சங்கங்களை ஏற்படுத்தித் தமிழை வளர்த்துள்ளனர். கி.பி. 6-ஆம் நூற்றாண்டில் சைவ சமயம் தொடர்பாக எழுதப்பட்ட 11 ஆயிரம் ஓலைச் சுவடிகள் கண்டுபிடிக்கப்பட்டு புதுவை மாநிலம் பிரெஞ்சு மொழி நிறுவனத்தில் வைக்கப்பட்டுள்ளன. இந்தியத் தொல்லியல் துறையினரால் கண்டுபிடிக்கப்பட்ட கல்வெட்டுகளில் 55 ஆயிரம் கல்வெட்டுகள் தமிழில் எழுதப்பட்டவையாகும்.தமிழ் பிராமி எழுத்துகளைக் கொண்ட கல்வெட்டுகள் இலங்கை, எகிப்து, தாய்லாந்து ஆகிய நாடுகளில் கண்டறியப்பட்டுள்ளன.கனடா நாட்டில் ஜனவரி மாதம் தமிழ் பாரம்பரிய மாதமாகக் கொண்டாடப்படுகிறது.உலக மக்கள்தொகையில் ஒரு விழுக்காடு மக்கள் தமிழ் பேசுகின்றனர். உலகில் அதிகம் பேசப்படும் மொழிகளில் தமிழ் மொழி 15-ஆவது இடத்தைப் பிடித்துள்ளது. ஆனால், தமிழ்நாட்டில் அடுத்த தலைமுறையினருக்கு தமிழ் சொல்லிக் கொடுக்க எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை.

மேலை நாட்டவர் எல்லாம் தமிழை உலக மக்கள் மத்தியில் பரப்பிட பல நடவடிக்கைகளை எடுத்துள்ளனர். ஆனால், தமிழ் வளர்ச்சித்துறை எதையும் செய்யாமல் உள்ளது என்று நீதிபதிகள் குறைபட்டுக் கொண்டுள்ளனர். உண்மைதானே! மத்திய அரசும் கடந்த 2004-ஆம் ஆண்டு இந்திய மொழிகளிலேயே செம்மொழி என்ற தகுதியைத் தமிழுக்கு அளித்துள்ளது. அத்துடன் இந்தி மொழியைத் தாய்மொழியாகக் கொண்ட ஹரியாணாவில் தமிழ் இரண்டாவது மொழியாகக் கற்றுக் கொடுக்கப்படுகிறது என்பது பலருக்குத் தெரியாது. இப்போது இலங்கைத் தமிழர்கள் பல்வேறு நாடுகளில் குடியேறியுள்ளனர்.

எனவே, வெளிநாடுகளைச் சேர்ந்தவர்களும், குறிப்பாக வெளிநாட்டில் வாழும் தமிழர்களின் குழந்தைகளுக்கும் தமிழைக் கற்றுக் கொடுக்க வேண்டும். உலகம் முழுவதும் உள்ள பல்கலைக் கழகங்களில் தமிழ்ப் பாடம் சொல்லிக் கொடுக்கவும் தமிழ் மொழியைப் பற்றி ஆராய்ச்சி செய்யவும் அனைத்து வகையான நடவடிக்கைகளையும் தமிழக அரசு எடுக்க வேண்டும். இதற்காக தமிழகம் மட்டுமல்லாமல், உலகம் எங்கும் உள்ள தமிழ் அறிஞர்களுடன் கலந்து பேசி, அடுத்தத் தலைமுறையினருக்கும் தமிழை எடுத்துச் செல்லத் தேவையான நடவடிக்கைகளையும் மேற்கொள்ள வேண்டும்.“அடுத்த பிறவி எடுக்க நேர்ந்தால் தமிழனாகவே பிறக்க ஆசைப்படுகிறேன். ஏனென்றால், அம்மொழியிலுள்ள திருக்குறளை அம்மொழி மூலமாகவே படிக்க வேண்டும் என்ற என் ஆவலேயாகும்’ என்று காந்தியடிகள் கூறியுள்ளார் என்றால் தமிழ் மொழியின் சிறப்பினை என்னென்பது?உலகில் பல மொழிகள் இருந்த சுவடுகள் தெரியாமல் மறைந்து கொண்டிருக்கின்றன. அந்த நிலை தமிழுக்கும் வந்துவிடக் கூடாது என்ற கவலை மொழியுணர்வாளர்களுக்கு ஏற்பட்டுள்ளது. ஐ.நா.வின் யுனெஸ்கோ நிறுவனம் மொழி பற்றிய ஆய்வு செய்து எச்சரிக்கை செய்துள்ளது. அந்த மறையும் மொழிகள் பற்றிய பட்டியலில் தமிழும் சேர்க்கப்பட்டிருப்பது கவலையை மிகுதிப் படுத்தியுள்ளது.

மெல்லத் தமிழினி சாகும் – அந்த
மேற்கு மொழிகள் புவிமிசை ஓங்கும்
என்றந்த பேதை உரைத்தான்  என்று பாரதி அன்று பொங்கி எழுந்தார். அந்த ஆவேசம் இப்போது தமிழர்களுக்கு வர வேண்டாமா?

சமுதாயமும், அரசும், அரசுத் துறைகளும் வழிமாறிப் போகுமானால், அவற்றைத் தடுத்துத் திருத்த வேண்டிய கடமை அறிவாளர்களுக்கும், நீதியரசர்களுக்கும் கட்டாயம் இருக்கிறது. எந்த நாட்டில் பணம் மற்றும் பதவிகளுக்கு அறிஞர்கள் விலை போகிறார்களோ, அந்த நாடு வீழ்ச்சியடைவதை யாராலும் தடுக்க இயலாது என்று துணிந்து கூறலாம்.உலகச் செம்மொழிகளான கிரேக்கம், இலத்தீன், எபிரேயம், சம்ஸ்கிருதம், சீனம் என்னும் பட்டியலில் நம் தாய்மொழி தமிழும் இடம் பெற்றிருப்பதற்குத் தமிழர்கள் பெருமிதம் கொள்ள வேண்டும். இந்தச் செம்மொழிகளில் இப்போதும் வழக்காற்றில் இருப்பது சீனமும், தமிழும்தான்.

சீன மக்களின் ஆற்றல் காரணமாகவும், தாய் மொழிப் பற்றின் காரணமாகவும் சீனம் இன்னும் வழக்காற்றில் இருக்கிறது. ஆனால், தமிழ் வழக்காற்றில் இருப்பதற்குத் தமிழர்களின் ஆற்றலும், தாய் மொழிப் பற்றும் காரணம் அல்ல. அந்த மொழியின் ஆற்றலால் மட்டுமே அது இதுவரை வழக்கில் இருந்து வருகிறது என்பதை நினைவில் கொள்ள வேண்டும்.நாம் இன்று அனுபவிப்பவையெல்லாம் கடந்த கால மக்களின் உழைப்பின் பயன்களாகும். நாம் இப்போது பேசும் மொழியையும் அடுத்தத் தலைமுறைக்கு அளிக்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. அதைத்தான் நீதிமன்றமும் நமக்கு நினைவுபடுத்துகிறது. ஆம், தமிழை வாழ்க என்றால் வாழ்ந்து விடாது, வளர்க்க வேண்டும்.