இந்து சமய பாடப்புத்தகத்தில் உள்ள குறைபாடுகளை நிவர்த்தி செய்யத் திட்டம்

0
442

இந்து சமய பாடப் புத்தகத்தில் காணப்படும் குறைபாடுகளை நிவர்த்தி செய்வதற்கான நிபுணர் குழுவொன்று உருவாக்கப்படவுள்ளதாக கல்வி அமைச்சு குறிப்பிட்டது.

கல்வி அமைச்சில் இன்று நடைபெற்ற கலந்துரையாடலின் போது இந்த தீர்மானம் எடுக்கப்பட்டதாக கல்வி இராஜாங்க அமைச்சர் வீ.இராதாகிருஷ்ணன் தெரிவித்தார்.

கல்வி வெளியீட்டுத் திணைக்களத்தின் அதிகாரிகள், தேசிய கல்வி நிறுவகம், பரீட்சைகள் திணைக்கள பாட விடயங்களுக்குப் பொறுப்பான மேலதிகாரிகள், பல்கலைக்கழக நிபுணர்கள், மாகாண உதவிக்கல்விப் பணிப்பாளர்கள், இந்து சமய பாட ஆசிரிய ஆலோசகர்கள் அடங்கிய குழுவொன்றே ஸ்தாபிக்கப்படவுள்ளதாகவும் கல்வி இராஜாங்க அமைச்சர் கூறினார்.

இந்து சமய பாடநெறி தொடர்பாகவும் பாடத்திட்டம் தொடர்பாகவும் உரிய முறையில் கவனம் செலுத்தாமை காரணமாக பாடத்திட்டத்தில் நிலவுகின்ற பல்வேறு குறைபாடுகள் நிவர்த்தி செய்யப்படாமல் உள்ளதாகவும் கல்வி இராஜாங்க அமைச்சர் குறிப்பிட்டார்.

இதன் காரணமாக, மாணவர்கள் பல சிரமங்களை எதிர்நோக்குவதாகவும் அவர் சுட்டிக்காட்டினார்.

இந்து சமய பாடத்திட்டத்தில் தரம் ஒன்று முதல் 11 வரையான வகுப்பு மாணவர்களின் தகுதிக்கு அப்பாற்பட்ட பாடவிதானங்கள் உள்வாங்கப்பட்டுள்ளதாக முறைப்பாடு கிடைத்துள்ளதாகவும் கல்வி இராஜாங்க அமைச்சர் கூறினார்.

எனவே, இந்து சமய பாடத்தை மாணவர்கள் விரும்பி கற்கும் வகையில், நிபுணர்களின் ஆலோசனைக்கு அமைய புதிய பாடப்புத்தகத்தை வெளியிடத் தீர்மானித்துள்ளதாக கல்வி இராஜாங்க அமைச்சர் வீ.இராதாகிருஷ்ணன் குறிப்பிட்டார்.