பாம்பு புற்றோடு வாழும் மக்கள்

0
888

unnamed (1) (படுவான் பாலகன்) சர்வோதயநகர், கித்துள், உறுகாமம், மரப்பாலம், கற்பானை மக்களின் நிலை

அடிப்படை வசதியின்மையால் அல்லல் (வீடு மற்றும் மலசல கூட வசதியின்மை)

நியாப், யூ.என்.கபிராட், நேப், ஐரோப்பிய ஒன்றியம் போன்ற நிறுவனங்களினால் இப்பகுதியில் உள்ள சில குடும்பங்களுக்கு வீடுகள் அமைத்துக் கொடுக்கப்பட்டுள்ளன. அதே போன்று மலசலகூடங்களும் அமைக்கப்பட்டு பயன்படுத்தப்படுகின்றன. ஆனாலும் பலவிடத்தில் இன்றும் களிமண்வீடுகளே இக்கிராமங்களில் அதிகம் காட்சி கொடுக்கின்றன. களிமண் வீடுகளினுள்ளே புற்றும் மேலெழுந்துள்ளது. பாம்புகளின் நடமாட்டமும் இருந்துகொண்டுதான் இருக்கின்றன. இறைவனின் நம்பிக்கையிலே வாழ்ந்து கொண்டிருப்பதாக அப்பகுதி மக்கள் கூறுகின்றனர். வீட்டின் கூரைக்கு தகரமும், சில இடங்களில் ஓலைமட்டையும் வேயப்பட்டிருக்கின்றன. தகரவீட்டிலே கொழுத்தும் வெயிலில் குடியிருக்க முடியவில்லையென்ற கவலையையும் அப்பகுதி மunnamed (2)க்கள் வெளியிடுகின்றனர். களிமண் வீடுகளை வளைத்துள்ள சுவர்ப்பகுதிகளில் குழிகளும் காட்சி கொடுக்கின்றன. இந்நிலையில் பாதுகாப்பாற்ற வீட்டில் மற்றும் சூழலிலேயே தங்களது வாழ்வை கொண்டு செல்கின்றனர். விரைவில் அடிப்படை வசதிகளை ஏற்படுத்தித் தருவதாக அதிகாரிகள் கூறுகின்றனரே தவிர இதுவரை எந்தக் குறைபாடுகளும் நிவர்த்தி செய்யப்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது. கற்பானைக் கிராமத்தில் 56 குடும்பங்கள் வாழ்கின்ற போதும், இங்கு 36 குடும்பங்கள் மலசல கூடவசதி இன்றி பல்வேறு இன்னல்களுக்கு முகம் கொடுத்தே வாழ்கின்றனர். மலசல கூடங்களாக தமது இருப்பிடங்களுக்கு அண்மையில் உள்ள பற்றைக்காடுகளை இவர்கள் பயன்படுத்தினர். தற்போது அவை இல்லாமலாக்கப்பட்ட நிலையில் நல்லாட்சியில் கூட இப்பகுதி மக்கள் மலசலகூட வசதிக்காக பெரும் சிரமங்களை எதிர்கொண்டு வருகின்றமை நல்லாட்சிக்கு ஆரோக்கியமானதா என்பதை நல்லாட்சியே உணர்ந்து கொள்ளவேண்டும்.

தொடரும் அனர்த்தங்களால் பாதிப்பு(குளங்கள் உடைப்பும், வெள்ளமும் )

குறித்த பிரதேசத்தில் அதிகமாக மழைபெய்கின்ற காலப்பகுதியில், இப்பகுதியில் குறிப்பாக கற்பானைக்குளம் நிரப்பி குளம் உடைப்பெடுக்கின்ற சம்பவங்களும் அதிகம் இடம்பெறுகின்றன. இதனால் மக்கள் குறித்த காலப்பகுதியில் இடம்பெயர்வதுடன், வீதிகளின் போக்குவரத்து தடைப்படுவதுமே கடந்த கால அனுபவங்களாக அப்பகுதி மக்கள் கூறுகின்றனர். இக்குளத்திற்கு வான்கதவுகள் இல்லாமையே இவ்வாறு உடைப்பெடுப்பதற்கு காரணமாக அமைகின்றன. அவற்றினை அமைக்கின்றபோது வருடாந்தம் இப்பகுதியிலே நடைபெறும் வெள்ள அனர்த்தத்தினை குunnamedறைக்க முடியும் என்பது அப்பகுதி மக்களின் கருத்தாக இருக்கின்றது.

தொழில்வாய்ப்பின்றிய வாழ்க்கைச் சூழல்

மீன்பிடி, கூலிவேலை, கால்நடை வளர்ப்பு, மேட்டுநிலப் பயிர்ச்செய்கை போன்ற பல வேலைகளை இப்பகுதி மக்கள் மேற்கொண்டுவருகின்றனர். கல்வித்துறையில் சிறிது, சிறிதாக வளர்ச்சி அடைகின்ற மக்களாக இருக்கின்ற பிரதேசமாக காணப்படினும் தமது பிள்ளைகளின் கல்வி எதிர்காலத்தை செவ்வனே நிறைவேற்றுவதற்கு முடியாத சமூகமாகவே காணப்படுகின்றது. எனினும் பிள்ளைகளை கற்பிக்க வேண்டுமென்பதில் அதிக அக்கறையாக செயற்படுகின்றமையும் பெற்றோரின் பேச்சுக்களில், செயற்பாடுகளிலிருந்து புரிந்து கொள்ள முடிகின்றது. ஆனாலும் பெண்களுக்கான வேலைவாய்ப்பு என்பது சிறிதளவும் இல்லாத நிலையே காணப்படுகின்றது. இக்கிராமங்களை அண்டிய பகுதியில் கரடியநாறு விவசாய பண்ணை அமைந்துள்ள போதிலும், அங்கு இக்கிராமங்களைச்சேர்ந்த குறிப்பிட்ட அளவிலான நபர்களே வேலை செய்கின்றனர். இங்கு சம்மாந்துறை, அக்கரைப்பற்று மகாஓயா எனும் தூர பிரதேசங்களை சேர்ந்தவர்களே அதிகம் வேலைசெய்வதாகவும், தம்மை அண்டிய பகுதியில் பண்ணை அமைந்துள்ளமையினால் தமது பகுதியினைச் சேர்ந்தவர்களையே இதில் வேலை செய்வதற்கு நியமனம் செய்திருக்க வேண்டும். என்ற கருத்தும் இங்குவாழ்கின்ற மக்களிடம் நிலவுகின்றன. அதேபோன்று தொழிற்சாலைகள் அமைக்கப்பட்டு அவற்றின் ஊடாக வேலைவாய்ப்புக்கள் வழங்கப்பட வேண்டுமென்பதும் அவர்களது எதிர்பார்ப்புக்களாக இருக்கின்றன. மீன்பிடியில் ஈடுபடும் விவசாயிகள், அலங்கார மீன்களினால் பாதிப்பினை எதிர்கொண்டிருக்கின்றனர். வேறு நாடுகளில் இருந்து இறக்குமதி செய்யப்பட்ட அலங்கார மீன் இனங்கள் குளங்களிலே இடப்பட்டுள்ளமையினால், அவைபெருகி அவ்வாறான மீன்களே வலைகளில் பிடிபடுகின்றது. இதனால் வலைகள் சேதமாக்கப்படுவதுடன் கைகளிலே புண்கள் ஏற்படுவதுமே தொழில் பிரதிபலிப்பாகியுள்ளது. 10கிலோ கிராம் மீன் பிடிப்பட்டால் ஒரு கிலோகிராம் மீன்தான் உள்@ர் மீன்கள் பிடிபடுகின்றன. அலங்கார மீன்களை உண்பதற்கும் யாரும் விரும்புவதில்லை, வேறுதேவைக்கு பயன்படுத்துவதற்கு இதனை கொள்வனவு செய்வதற்கு யாரும் முன்வருவதில்லை. தொடர்ச்சியாக இதனது இனப்பெருக்கத்தின் ஊடாக எமது உள்@ர் மீன்கள் அருகிக்கொண்டே செல்லும் நிலையும் ஏற்படுகின்றது என்பதும் அம்மக்களின் கருத்துக்களாக இருக்கின்றன.

கருங்கல், ஆற்றுமண், கிறவல் போன்ற கனியவளங்கள் இப்பகுதியிலே அதிகம் காணப்படுகின்றன. இங்கிருந்து அவ்வாறான வளங்கள் பிற இடங்களுக்கு கொண்டு செல்லப்படுகின்றது. இவற்றினை ஏற்றிச்செல்வதற்கு அதிகமாக பிற பிரதேசங்களை சேர்ந்தவர்களுக்கே அனுமதிகள் வழங்கப்பட்டுள்ளன. இங்குள்ள ஒருசிலருக்கும் அவ்வாறான அனுமதிகள் வழங்கப்பட்டுள்ளபோதிலும், எமது பகுதியினைச் சேர்ந்தவர்களுக்கே அதிகம் அனுமதிப்பத்திரங்கள் வழங்கப்பட வேண்டும் என்ற கோரிக்கையும் இப்பகுதி மக்களிடையே வேண்டப்படுகின்றன.

யானையின் தாக்கமும், பாதுகாப்பு இன்மையும்

பெரும்பாலும் வனத்தை அண்டிய இப்பகுதியில் மக்கள் வாழ்கின்றமையினால், காட்டு யானைகளின் தாக்கம் அதிகம் இடம்பெறுகின்றன. இதனை கட்டுப்படுத்துவதற்கு மின்சார வேலிகள் ஒழுங்காக அமைக்கப்படவில்லை. அமைப்பதற்காக கொண்டுவரப்பட்ட பொருட்கள் கித்துள் குளத்தின் நீர்பாசன திணைக்கள வளாகத்திற்குள்ளே அடுக்கி வைக்கப்பட்டுள்ளதாகவும், அதற்காக எந்த நடவடிக்கைகளும் இடம்பெறவில்லை என்ற குற்றச்சாட்டுக்களையும் இப்பகுதி மக்கள் முன்வைக்கின்றனர். இவ்வாறான வேலைத்திட்டங்களை விரைவாக முன்னெடுத்து தமக்கான தீர்வை பெற்றுக்கொடுக்க வேண்டுமென்பதே இம்மக்களின் கோரிக்கைகளாவும் இருக்கின்றன.

கிராமப்புறங்களின் அபிவிருத்திகளில், அதிகாரிகளும், அரசியல்வாதிகளும் பின்நிற்கின்றமையே இந்த நாட்டிலே கிராமப்புறங்கள் பலதுறைகளில் வளர்ச்சியடையாமல் இருப்பதற்கான பிரதான காரணங்களாவிருக்கின்றன. கிராமப்புறங்களில் உள்ள வளங்கள் பலவற்றினை அனுபவிப்பவர்களாக நகர்ப்புறமக்கள் காணப்படுகின்றனர். ஆனால் அதே வளங்களைக் கொண்டிருந்தும் அனுபவிக்க முடியாதவர்களாக கிராம மக்களே வாழ்;கின்றனர். தேர்தல்கள் இடம்பெறுவதற்கு முன்பு அனைத்து கிராமங்கள் தோறும் செல்லும் மக்கள் பிரதிநிதிகள், தாம் வெற்றியடைந்த பின்பு அவற்றினை திரும்பிப் பார்க்கவில்லை என்று கூறுகின்றமை கவலையளிக்கின்ற விடயமேயாகும். கிராமப்புறங்கள் என்றால் எதையும் செய்து கொள்ளமுடியும், பார்ப்பதற்கு, கேட்பதற்கு யாரும் இல்லையென நினைக்கும் ஒருசில அதிகாரிகள் தமக்கானதை அம்மக்களிடமிருந்து பெற்றுக்கொண்டு, அவர்களுக்கான வேலைகளை செய்து கொடுக்காமால் ஏமாற்றுவதும் நிறைவுபெற்றதாகவில்லை. அர்ப்பணிப்போடும், சேவை உணர்வோடும் மக்களுக்காக சேவையாற்றும் அதிகாரிகள் பலரும் ஒருசில அதிகாரிகளின் செயற்பாடுகளினால் இழுக்கை எதிர்கொள்ள நேரிடுகின்றது. இப்பகுதி மக்களும் ஆடு, மாடு, உணவு, பணம், ஏனைய பொருட்கள் என பலவற்றையும் ஒரு சில அதிகாரிகளுக்கு கொடுத்து ஏமாற்றமடைந்து நிற்பதாகவும், சிலர் பயனடைந்துள்ளதாகவும் அம்மக்கள் குறிப்பிட்டனர்.

நகர்;ப்புறங்களை நாடியும், நிகழ்வுகளில் கலந்துகொள்வதிலும் அதிகம் ஆர்வம்காட்டும் அரசியல்வாதிகள் கிராமப்புறங்களை நாடிச்சென்று மக்களின் பிரச்சினைகளை தீர்ப்பதற்கான பிரயத்தனங்களை மேற்கொள்ள வேண்டும். 20நபருக்கு 05ஏக்கர் காணி பிரதேச செயலாளரினால் இப்பகுதியில் வாழும் வறிய மக்களுக்கு வழங்கப்பட்டுள்ளன. அக்காணி ஒருசகோதர இனத்தினை சேர்ந்தவருடையது எனக்கோரி அவரினால் வழக்குதாக்கல் செய்யப்பட்டுள்ளது. அவ்வழக்கு தாக்கல் இன்றுவரை முடியாத நிலையில் அன்றாட வாழ்வினை களிப்பதிலே சிரமங்களை எதிர்கொள்ளும் மக்கள் நீதிமன்றம்வரை சென்றுவருகின்ற நிலையும் இருப்பதாக கூறி ஆதங்கப்படுகின்றனர். தமது குடும்பத்தினை வழிநடத்திச் செல்வதற்கு வசதியின்மையினால் நஞ்சை அருந்தி இறப்பதற்கு முற்பட்ட முதியவர் ஒருவர் காப்பாற்றப்பட்ட சம்பவமும் இடம்பெற்றுள்ளது. எனவே இவ்வாறான வறுமையின் பிடியிலும், காணி அனுமதிபத்திரம் இன்றியும், பல அடிப்படை வசதிகள் ஏற்படுத்தப்படாமலும், மாவட்டத்தின் எல்லைப்பகுதியிலும், காட்டுப்பகுதியிலும் வாழ்வை வழிநடத்திச் செல்லும் மக்கள் தொடர்பிலும் அதிகாரிகளின் கவனமும், அரசியல்வாதிகளின் அயராதசேவையும் இடம்பெறவேண்டும் என்பதே அப்பகுதிவாழ் மக்கள் உட்பட அனைவரதும் விருப்பாகும்.