காலடி நீரை கனதூரம் கொடுத்துவிட்டு கலங்கும் கிராமங்கள்

0
1105

unnamed (4) (படுவான் பாலகன்) மட்டக்களப்பு மாவட்டத்தின் படுவான்கரைப்பகுதி யுத்தத்தினால் மிகவும் பாதிக்கப்பட்ட பிரதேசமாகும். இப்பிரதேசத்து மக்கள் யுத்தம் காரணமாக இடம்பெயர்ந்து, இறுதியாக 2017ம் ஆண்டு அவர்களது சொந்த இடங்களில் குடியமர்த்தப்பட்டனர். இடம்பெயர்ந்து, அகதிமுகாம்களிலும், உறவினர் வீடுகளிலும் தங்கியிருந்து பல நெருங்கடிகளையும் சந்தித்து, சொந்த இடங்களுக்கு குடியமர்த்தும் போது, ஏற்கனவே இருந்த வீடுகளும் உடைக்கப்பட்டு, வீடுகளில் இருந்த சொத்துடமைகள் முற்றாக அழிக்கப்பட்ட நிலையில் வெறுமையாகவே காணப்பட்டன. இதனால் மீண்டும் தாம் வாழ்வதற்கான வீடுகளை அமைத்து, வீட்டிற்கான பொருட்களை தேடி பெற்றுக்கொள்வதில் பல்வேறு சிரமங்களை எதிர்கொண்டனர். மக்களை குடியேற்றிய நல்லாட்சி அராசங்கமும், அவர்களுக்கான அடிப்படை வசதிகளை இன்றுவரை ஏற்படுத்த தவறி வருகின்றமை கவலைதரும் விடயமாகும்.

குடியமர்த்தப்பட்ட மக்களுக்கு நிவாரணமாக பணம் வழங்குவதாக குறிப்பிட்டும் அவை இன்றுவரை வழங்கப்படவில்லை என்றதான குற்றச்சாட்டை அரசாங்கத்தின் மீது unnamed (5)குறித்த பகுதிவாழ் மக்கள் சுமத்திவருகின்றனர். அவற்றினை அரசாங்கம் கண்டுகொள்ளவதாகத் தெரியவில்லை. அந்தவகையில், மட்டக்களப்பு மாவட்டத்தின் ஏறாவூர்பற்று பிரதேச செயலாளர் பிரிவிற்குட்பட்ட சர்வோதயநகர், கித்துள், உறுகாமம், மரப்பாலம், கற்பானை போன்ற கிராமங்களைச் சேர்ந்த மக்கள் இன்றுவரை களிமண் வீடுகளுடனும், மலசல கூடம் மற்றும் நீர்வசதி இன்றியும், தமது வாழ்வினை கொண்டு சென்றுகொண்டிருக்கின்றனர். இவர்கள் வாக்களித்து அரியனை அரசாங்கமும், அரசியல்வாதிகளும் இவர்களை கண்டுகொள்ளவில்லை என்பதே இம்மக்களது ஆதங்கங்களாக இருக்கின்றன. இங்கு வாழ்கின்ற மக்களில் அநேகமானோர் வரக்காப்பொல, நுவரெலியா, எட்டியாந்தோட்டை, பதுளை, மாத்தளை போன்ற பகுதிகளில் இருந்து மட்டக்களப்பில் குடியேறிய மக்களாகவே காணப்படுகின்றனர். 1968, 1977ம் ஆண்டு இடம்பெற்ற தமிழ், சிங்கள கலவரத்தினால் தமது உயிரை காப்பாற்றிக்கொள்ளும் நோக்கில் அங்கிருந்து வெளியேறி மட்டக்களப்பு மாவட்டத்தின் எல்லைப்பகுதிகளில் குடியேறியிருக்கின்றமை குறிப்பிடத்தக்கது. இம்மக்கள் தற்போது குறித்த பிரதேசத்தில் குடியேறி 40 வருடங்களுக்கு மேலாக இப்பிரதேசத்திலே வாழ்கின்றபோதிலும் தமக்கான காணி அனுமதிப்பத்திரம் வழங்கப்பட்டவில்லை என்றும் அனுமதிப்பத்திரம் இன்றியே தாம் வாழ்ந்து கொண்டிருப்பதாகவும் இம்மக்கள் கூறுகின்றனர். அங்கு சென்று அவர்கள் மத்தியில் உரையாடி அவர்களது பிரச்சினைகளை ஆராயுமிடத்து பல்வேறு பிரச்சினைகள் மற்றும் போராட்;டங்களின் மத்தியில் வாழும் சமூகமாக இப்பிரதேசம் விளங்குகின்றமையினை அறியக் கூடியதாகவுள்ளது.

அந்தவகையில்,

நீரைப் பெறுவதில் போராட்டம்

கித்துள் பகுதியில் இருந்து 3கிலோ மீற்றர் தொலைவில் உள்ள உன்னிச்சை குளத்தில் இருந்து குடிநீரை 32கிலோமீற்றர் தொலைவில் உள்ள மட்டக்களப்பு, காத்தான்குடி, பாசிக்குடா போன்ற பகுதிகளுக்கு எடுத்துச் செல்கின்றனர். ஆனால் அண்மையில் உள்ள இப்பிரதேசத்து மக்களுக்கு குடிநீர் வழங்கப்படுவதில்லை. இதனால் இம்மக்கள் குடிநீருக்காக கொட்டுகளைப்பதித்தும், குளங்களின் அருகே பூவல்களை தோண்டியும், பொதுக்கிணறுகள் உள்ள இடங்களுக்கு சென்றும் நீரைப்பெற்றுக்கொள்கின்றனர். இதனைப்பெறுவதற்கு நீண்ட தூரம் செல்ல வேண்டிய நிலையும் இப்பிரதேசத்து மக்களுக்கு ஏற்பட்டிருக்கின்றன. சில மாத காலப்பகுதியில், குறிப்பாக மே மாதத்திற்கு பிறகு செப்டெம்பர் மாதம் வரை கிணறுகளிலும் நீர்வற்றி, நீருக்காக போராடும் மக்களாக இப்பகுதி மக்கள் வாழ்கின்றனர். உன்னிச்சையில் இருந்து குடிநீர் திட்டத்தினை கொண்டு செல்வதற்கு முன்பாக ஆயித்தியமலையில் நீர்சுத்திகரிப்பு நிலையத்தினை அமைப்பதாகவே அங்குவாழும் மக்களிடம் கூறப்பட்டள்ளது. இதனால் தமக்கும் நீர் கிடைக்குமென்ற மகிழ்ச்சியில் மக்கள் இருந்துள்ளனர். மக்களிடம் கூறிய கூற்றுக்கு ஏற்றவாறு நடந்து கொள்ளாமால் வவுணதீவில் சுத்திகரிப்பு நிலையத்தினை அமைத்து நகர்ப்புறத்திற்கு நீரை கொண்டு சென்றிருக்கின்றனர். இதனால் நீரைப் பெறுவதிலும் ஏமாற்றப்பட்ட சமூகமாக இப்பிரதேசத்து மக்கள் தள்ளப்பட்டுள்ளனர். நகரில் உள்ளவர்கள் குறித்த நீரைப்பயன்படுத்தி தமக்கான அனைத்து unnamed (6)தேவைகளையும் பூர்த்தி செய்கின்றபோதும், குடிப்பதற்கு நீரின்றி ஆர்ப்பாட்டங்களை நடாத்தும் மக்களாக மட்டுமே மாற்றப்பட்டுள்ளனர். கித்துள் கிராமத்தில் 280 குடும்பங்கள் வாழ்கின்றபோதும், இங்கு 40முஸ்லிம் சகோதரத்துவ குடும்பங்களும் வாழ்கின்றனர். இப்பிரதேசத்திலே ஒரு நீர்தாங்கியை அமைத்து அதன்மூலமாக 40முஸ்லிம் குடும்பங்களுக்கும் நீர்வசதி ஏற்படுத்திக் கொடுக்கப்பட்டுள்ளது. அதன்பயனாக ஒரு சில தமிழ் குடும்பங்களுக்கும் இந்நீர்வசதி கிடைத்திருக்கின்றது. பல வருடங்களாக தமிழ் மக்கள் இங்கு வாழ்கின்றபோதும் தமக்கான குடிநீரைப் பெற்றுக்கொடுப்பதற்கு தமிழ் அரசியல்வாதிகள் முன்வரவில்லையென்ற மன ஆதங்கம் அங்கு வாழும் தமிழ் மக்கள் மத்தியிலே இன்றும் இருந்துகொண்டிருக்கின்றன. மட்டக்களப்பு மாவட்டத்தின் பாராளுமன்ற உறுப்பினர் யாரேன்றே தெரியாத மக்களாகவும் சிலர் காணப்படுகின்றனர். வாக்குகேட்டு வருகைதந்தபோதிலும் நன்றி சொல்லக்கூட எம்மிடம் வரவில்லை. இந்நிலையில் எவ்வாறு எமது குறைகளை ஆராய்ந்து இவர்கள் தீர்த்து வைப்பார்கள் என்ற வெறுப்பிலும் வாழ்கின்ற மக்களாகவே இவர்கள் தோற்றமளிக்கின்றனர்.

2012ம் ஆண்டு கற்பானை குளத்தில் இருந்து நீர் தருவதாக கூறி பல இட்சம் ரூபாய் செலவில் குளத்திற்கு கீழே கிணறு அமைக்கப்பட்டது. அவ்விடத்தில் கிணறு அமைப்பது பொருத்தமற்றது. குளத்துக்குள்ளே கிணற்றினை அமையுங்கள் எனக்கூறினோம். எங்களது கருத்தினை பொருட்படுத்தாமல் அவ்வேலைத்திட்டத்தினை முன்னெடுத்ததாக அப்பகுதி மக்கள் கூறினர். ஆனால் இன்று அவை பயன்படாத நிலையில் தோல்வி கண்டுள்ளது. இதனால் பல ரூபாய் பணம் வீண்விரயமாக்கப்பட்டுள்ளது. மேலும் நீரின்றிய பிரச்சினையினால் தாம் கலாசார சீர்கேடுகளை எதிர்கொள்வதாகவும் அதாவது பொது இடங்களில் குளிக்கின்ற நிலைமையினால் பல பெண்கள் பல்வேறு சிரமங்களையும் எதிர்கொள்கின்றதாகவும் அப்பகுதி மக்கள் குறிப்பிடுகின்றமை மனவேதனைக்குரியதே.

மக்களின் குமுறல்கள் நாளையும் தொடரும்………