திட்டங்கள் தீட்டதினால் பட்டதாரிகள் நடுவீதியில் புத்தாண்டை கொண்டாடும் நிலை

0
428

(படுவான் பாலகன்) பட்டதாரிகளுக்கென ஒழுங்குமுறையான திட்டத்தினை இன்றுவரை மத்திய அரசோ, மாகாண அரசோ மேற்கொள்ளாமையினால் புத்தாண்டை பட்டதாரிகள் நடுவீதியில் கொண்டாடும் நிலையேற்பட்டுள்ளது. என கிழக்கு மாகாணசபை உறுப்பினர் இரா.துரைரெட்ணம் குறிப்பிட்டார்..
இது தொடர்பில் கிழக்கு மாகாணசபை உறுப்பினர் இரா.துரைரெட்ணம் ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கையில்,
மத்திய அரசாங்கம், மாகாணசபைகளுக்கு பட்டதாரிகளை நியமிப்பதற்கான அதிகாரங்களை வழங்கியுள்ள போதிலும், அவற்றினை அமுல்படுத்த நிதிவளம் இல்லாமல் இருப்பது, மத்திய அரசினதும், மாகாண அரசினதும் பலவீனத்தினையும் எடுத்தக்காட்டுகின்றது. இதுவரை பட்டதாரிகளின் பிரச்சினைக்கு ஒழுங்கான திட்டத்தினை முன்வைக்காமல் இருப்பதும் மிகத்தவறாகவும். பட்டதாரிகள் பட்டம் பெற்று குறைந்தது மூன்று மாதங்களுக்குள் அவர்களுக்கான நியமனத்தினை வழங்குவதற்குரிய திட்டங்களை வகுக்க வேண்டுமென பலதடவைகள் குறிப்பிட்டும் அவை இன்னும் மேற்கொள்ளப்படவில்லை.
கை குழந்தைகளுடனும், வீதியோரத்திலே தமக்கான வேலைவாய்ப்பினைக்கோரி 56நாளாக நின்றுகொண்டிருக்கின்றனர். இவர்களின் போராட்டம் நியாயமானது. இதற்கான தீர்வினை அரசு வழங்காமல் இருப்பதும் மிகவும் கவலையளிப்பதாகவே இருக்கின்றது. நீடிக்கும் போராட்டம் பட்டதாரிகளிடையே விரக்தியையும் உண்டுபண்ணியுள்ளது. இதற்கான பொறுப்பை மத்திய அரசும், மாகாண அரசும் ஏற்க வேண்டும்.
போராட்டத்தில் ஈடுபட்டள்ள பட்டதாரிகளுக்கு மத்திய, மாகாணத்தில் உள்ள அரச திணைக்களங்களில் இருக்கின்ற வெற்றிடங்களை, குறிப்பாக சமூர்த்தி, ஆசிரிய வெற்றிடங்களை கொண்டு நிரப்பப்போவதாக அறியக்கூடியதாகவிருக்கின்றது. அதற்கமைய 31.12.2016வரை பட்டங்களைப் பெற்றிருக்கும் அனைவருக்கும் நியமனத்தினை வழங்க வேண்டும். 2017ம் ஆண்டிலிருந்து பட்டங்களை பெறும் பட்டதாரிகளுக்கு பயிற்சி அடிப்படையிலும், நிரந்தரமாகவும் அரசாங்கத்திலும், தனியார் துறைகளிலும் நியமனத்தினை வழங்க திட்டங்களை முன்வைக்க வேண்டும். திட்டங்களை வகுப்பதற்கான விவாதத்தினை நடத்த, ஆலோசனையை முன்வைக்க, முதலமைச்சர் கிழக்கு மாகாண சபையை விசேடமாக ஒருநாள் கூட்டவேண்டும். அதன் மூலம் நிரந்தர திட்டத்தினை வகுக்க முடியும். எதிர்கால பட்டதாரிகளும் இவ்வாறான போராட்டங்களை முன்னெடுப்பதை தவிர்க்க முடியும் என்றார்.