தாய்ப்பால் புரைக்கேறி சிசு உயிரிழப்பு

0
335

மட்டக்களப்பு, ஏறாவூர் சுகாதார வைத்திய அதிகாரிப் பிரிவிலுள்ள ஏறாவூர் நகரப் பகுதியில் இரண்டரை மாத சிசு, தாய்ப்பால் புரைக்கேறியதன் காரணமாக உயிரிழந்திருப்பதாக, ஏறாவூர் ஆதார வைத்தியசாலைத் தகவல்கள் தெரிவிக்கின்றன. ஏறாவூர் பழைய சந்தை வீதியைச் சேர்ந்த சலீம் பாத்திமா சபா எனும் பெண் சிசுவே, நேற்றிரவு (15) 10.30 மணியளவில் இவ்வாறு உயிரிழந்துள்ளது. சிசுவுக்கு, தாய் பாலூட்டியதன் பின்னர் தாயும் சேயும் தூக்கத்தில் இருந்துள்ளனர். நள்ளிரவுக்குச் சற்றுப் பிந்தி தாய் தூக்கம் கலைந்து கண் விழித்து சிசுவைப் பார்த்ததும் சிசு அசைவற்றுக் காணப்பட்டுள்ளது. உடனடியாக ஏறாவூர் ஆதார வைத்தியசாலைக்கு எடுத்துச் செல்லப்பட்டபோதும் சிசு ஏற்கெனவே இறந்து விட்டிருந்ததாக வைத்தியசாலையில் தெரிவிக்கப்பட்டது. உடற் கூற்றுப் பரிசோதனையின் பின்னர் சடலம், உறவினர்களிடம் ஒப்படைக்கப்பட்டதாக பிரதேச மரண விசாரணை அதிகாரி எம்.எஸ்.எம். நஸீர் தெரிவித்தார். சம்பவம் தொடர்பாக ஏறாவூர் பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.