உயிரிழந்தவர்களின் இறுதிச் சடங்குகளை அரசாங்கத்தின் செலவில் நடத்துவதற்கு தீர்மானம்

0
194
மீதொட்டமுல்ல குப்பை மேடு சரிந்து வீழ்ந்த  சம்பவத்தில் உயிரிழந்தவர்களின் இறுதிச் சடங்குகளை அரசாங்கத்தின் செலவில் நடத்துவதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளதாக அமைச்சர் அனுர பிரியதர்ஷன யாப்பா தெரிவித்துள்ளார்.
கொழும்பு மாவட்டத்தில் அமைச்சர்கள், பாராளுமன்ற உறுப்பினர்கள், மாவட்ட செயலாளர், அரச அதிகாரிகள் ஆகியோரின் பங்களிப்புடன் நேற்று நடைபெற்ற விசேட பேச்சுவார்த்தையில் இந்தத் தீர்மானம் மேற்கொள்ளப்பட்டதாக அமைச்சர் தெரிவித்தார்.
ஜனாதிபதி மற்றும் பிரதமர் ஆகியோரின் அறிவுறுத்தலின் படி அமைச்சர் சுசில் பிரேமஜயந்த அவர்களின் தலைமையில் நியமிக்கப்பட்ட அனர்த்தத்திற்கு உட்பட்டவர்களுக்கு நிவாரணம் வழங்கும் விசேட குழு மூலமாக தேவையான நிவாரணம் வழங்கும் நடவடிக்கை தொடர்ந்து செயற்படுத்தப்படுவதோடு, இடர் முகாமைத்துவ அமைச்சுஇ சட்டம் ஒழுங்கு  மற்றும் தெற்கு அபிவிருத்தி அமைச்சு, முப்படை வீரர்கள்இ விசேட படையினர், பொலீஸ் மற்றும் கொழும்பு மாநகர சபை உட்பட சம்பந்தப்பட்ட அரச நிறுவனங்கள் தற்பொழுது தேவையான நடவடிக்கைகளை மேற்கொண்டுவருகின்றன.
இதேவேளை  சட்டம் ஒழுங்கு  மற்றும் தெற்கு அபிவிருத்தி அமைச்சர் சாகல ரட்நாயக்க இந்த பிரதேசத்திற்கு விஐயம் செய்து நிலைமைகளை  ஆராய்ந்தார்.
தேசிய மின்சார கட்டமைப்பின் விநியோகம் தடை இடைநிறுத்தப்பட்டிருப்பதால் இரவு நேரங்களில் பிரதேசத்திற்கு தேவையான மின்சாரத்தை விநியோகிப்பதற்கு நடவடிக்கை மேற்கொள்ளுமாறு மின்சார சபைக்கு அறிவுத்தல் வழங்கப்பட்டுள்ளது. குப்பை மேடு மேலும் சரிந்து விழுமா என்பது குறித்து கட்டட ஆய்வு நிறுவனம் விசேட ஆய்வுகளை மேற்கொண்டு வருகிறது.
பேராதனை பல்கலைக்கழகத்தின் புவியியல் விஞ்ஞான பிரிவின் பத்துப் பேரைக் கொண்ட விசேட குழுவொன்றும் இங்கு அழைக்கப்பட்டுள்ளது. இதற்கு மேலதிகமாக புவி அகழ்வு மற்றும் புவிசரிதவியல் பிரிவு அதிகாரிகள் குழுவொன்றும் மரண விசாரணைக்கான சட்ட வைத்தியர் குழுவொன்றும் இங்கு அழைக்கப்பட்டுள்ளது. சம்பவம் தொடர்பில் விசாரணையில் விசேட குழுவொன்றும் செயற்பட்டு வருகிறது.