வீரகேசரியின் பிரதம ஆசிரியர் சிவப்பிரகாசம் இயற்கை எய்தினார்.

0
394

Sivappiragasam Wditorஇலங்கையின் தலை நகரான கொழும்பில் இருந்து வெளிவந்த தமிழ் பத்திரிகைகளில் இன்று வரை தனக்கென தனி முத்திரை பதித்து வரும் வீரகேசரி பத்திரிகையில் 1966ம் ஆண்டு முதல் 1983ம் ஆண்டு வரை பிரதம ஆசிரியராகப் பணியாற்றிய பெருமைக்குரிய கந்தசாமி சிவப்பிரகாசம் அவர்கள் தனது 82 வது வயதில்  14ம் திகதி அமெரி க்காவின் வெர்ஜீனியா நகரில் இயற்கை எய்தினார்.

அன்னார் காலஞ் சென்ற ஆசிரியை திருமலரின் அன்புக் கணவ ரும், சஞ்ஜீவன், பிரதீபா ஆகியோரின் தந்தையும், நினா திரகுல் சிவப்பிரகாசம், குறவெல் ஆகியோரின் மாமனாரும் ஆவார்.

இவரது பூதவுடல் 16ம் திகதி காலை 10 மணி முதல் நண்பகல் 12 மணிவரை பின்வரும் முகவரியில் அஞ்சலிக்காக  வைக்கப்படும்.

இறுதிக் கிரிகைகள் ஒரு வார காலத்தில் Demaine Funeral Home, 10565 Main Street, Fairfax, VA 22030 என்ற முகவரியில் இடம் பெறவிருக்கின்றது. யாழ்ப்பாணம் மாதகலை பிறப்பிடாகக் கொண்ட சிவப்பிரகாசம் அவர்கள் பேராதனை பல்கலைக்கழகத்தில் கல்வி பயின்று பட்டதாரி ஆனார்.

அக்கால கட்டத்தில் பிரதான தமிழ் பத்திரிகைகளாக கொழும்பிலிருந்து வீரகேசரியும், தினகரனும் வெளிவந்து கொண்டிருந்தன. தற்போதைய பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவின் தந்தையார்  எஸ்மன்ட் விக்கிரமசிங்க அப்போது தினகரன் பத்திரிகையை வெளியிட்டு வந்த “லேக் ஹவுஸ்” நிறுவனத்தின் நிர்வாகியாக இருந்தார்.

சிவப்பிரகாசம் முதலில் தினகரன் பத்திரிகையில் உதவி ஆசிரியராகச் சேர்ந்து பணியாற்றி வந்தார். பின்னர் எஸ்மன்ட் விக்கிரமசிங்க வீரகேசரி பத்திரிகை நிறுவனத்தின் நிர்வாகப் பொறுப்பினையும் ஏற்றுக் கொண்டார். அதனால் தினகரன் பத்திரிகை அலுவவலகத்தில் பணியாற்றிய க. சிவப் பிரகாசம், ரி.சிவப்பிரகாம், பாலச்சந்திரன் ஆகியோரை வீரகேசரி அலுவலகத்தில் பணிபுரிய அழைத்து வந்தார்.

க.சிவப்பிரகாசம் அவர்களை உதவி பிரதம ஆசிரியராகவும், ரி.சிவப்பிரகாசத்தினை விநியோக முகாமையாளராகவும், பாலச்சந்திரனை அலுவலக நிர்வாகியாகவும் நியமித்தார். அக்காலத்தில் கே.வி.எஸ்.வாஸ் என்பவர் வீரகேசரி பத்திரிகையின் பிரதம ஆசிரியராகப் பணியாற்றிக் கொண்டிருந்தார். சில காலத்தின் பின்னர் வாஸ் அவர்கள் ஆசிரியப் பதவியிலிருந்து ஓய்வு பெற்றதும் க.சிவப்பிரகாசம் அவர்கள் பிரதம ஆசிரியர் பதவியைப் பொறுப்பேற்று திறம்பட நடாத்தி வந்தார்.

அவரின் கீழ் பணியாற்றி வந்த செய்தி ஆசிரியர் டேவிட் ராஜ், மற்றும் உதவி ஆசிரியர்,  நிருபர்களையும், ஒப்பு நோக்காளர்களையும் கண்ணியமாகவும், கண்டிப்புடனும் நடாத்தினார். இவரது திறமான நிர்வாகம்,ஆணித் தரமான ஆசிரியத் தலையங்கம், சுடச் சுட வெளிவந்த செய்திகள் ஆகியவற்றினால் வீரகேசரி படிப்படியாக வளர்ச்சி அடைந்து இலங்கையில் இருந்து வெளிவந்த தமிழ் பத்திரிகைகளளில் முதலாவது பத்திரிகை என்ற பெயரினையும், புகழையும் பெற்றது.

அத்துடன் மித்திரன் என்ற மாலைப் பத்திரிகையினையும் ஆரம்பித்தார். அப்புகழ் இன்று வரை தொடர்ந்து நிலைத்து நிற்கின்றது. அதற்கு அத்திவாரம் இட்டவர் அதன் பிரதம ஆசிரியராகப் பணியாற்றிய சிவப்பிரகாசம் அவர்கள் தான் என்பது மிகையாகாது.