கிழக்கிலங்கையின் மூத்தஎழுத்தாளர் ஆரையம்பதி நவம் இயற்கை எய்தினார்

0
1396

Navam Arayampathi batticaloaமட்டக்களப்பு, ஆரையம்பதியைச் சேர்ந்த மூத்த எழுத்தாளரான சீனித்தம்பி ஆறுமுகம் என்னும் இயற்பெயரைக் கொண்ட நவம் அவர்கள் கடந்த 12.04.2017 இல் தனது 89ஆவது வயதில் மட்டக்களப்பு ஆரையம்பதியில் இயற்கை எய்தினார்.

தமிழ் ஆசிரியராகப் பணிபுரிந்த நவம் அவர்கள் தமிழ் இலக்கியத் துறைக்குப் பங்காற்றிய மட்டக்களப்பு எழுத்தாளர்களுள் முக்கியமான ஒருவராவார். இலங்கையில் நிலவிய யுத்த சூழலால் புலம்பெயர்ந்து 20 வருடங்களுக்கும் மேலாக தமிழ் நாட்டிலும் பின்னர் ஜேர்மனி,கனடா, அவுஸ்திரேலியா போன்ற நாடுகளிலும் வசித்து வந்த இவர் மீண்டும் தாய் மண்ணிற்குத் திரும்பி கடந்த நான்கு வருடங்களாக தனது சொந்த ஊரிலேயே இறக்கும் வரை வசித்துவந்தார்.

சிறுகதை, நாவல், கவிதை, கட்டுரை, நாடகம் எனப் பல்துறை வல்லுனராகத் தமிழ் இலக்கிய வரலாற்றில் தடம் பதித்த இவர்,‘நவம்’ என்ற புனைபெயராலேயே நன்கறியப்பட்டவராவார். நிழல் மனிதன் (நீலவேணி), அழகுசுடும்,நந்தாவதி முதலான பல ஆக்கங்களை இவர் வெளியிட்டுள்ளார். இலங்கையின் பல்வேறு இதழ்கள் மற்றும் சஞ்சிகைகளிலும் அதேபோல தமிழ்நாட்டின் பல்வேறு இதழ்களிலும் இவரது ஆக்கங்கள் வெளிவந்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

அன்னாரின் இறுதிச் சடங்கு எதிர்வரும் 16.04.2017 ஞாயிற்றுக்கிழமை பி.ப 4.00 மணிக்கு முதலாம் குறிச்சி ஆரையம்பதி இல்லத்தில் இடம்பெற்று ஆரையம்பதி பொது மயானத்தில் பூதவுடல் தகனம் செய்யப்படும். அன்னாரின் ஆத்மாசாந்திபெறுவதாக.