உங்களுக்கு வழங்கப்பட்ட பட்டத்தை என்றும் மற்றவர் இகழாத வண்ணம் நடந்து கொள்ளுங்கள்

0
315

degree-aசிறு வயது தொழில் முனைவரை சந்தித்த தருணம்…..

இன்று காலை இளநீர் அருந்துவதற்காக ஒரு சிறிய இளநீர் கடைக்குச் சென்றிருந்தேன் கடையில் இரு இளைஞர்கள் நின்று கொண்டிருந்தனர் இருவருக்கும் வயது சுமார் இருபத்தைந்து மட்டில் இருக்கலாம் ஒருவர் இளநீர் வெட்டி வருபவர்களுக்கு வழங்கிக் கொண்டிருக்க மற்றவர் வடை சுடுவதற்கு ஆயத்தமாகிக் கொண்டிருந்தார்..

கடந்த தடவை அதாவது இரண்டு மாதங்களுக்கு முன்னர் நான் இளநீர் அருந்த சென்ற பொழுது அக்கடையில் ஒருவர் மாத்திரம் நின்றிருந்தார் அத்தருணம் இளநீர் மாத்திரம் விற்கப்பட்டது இன்று ஒரு தொழில் முனைவர் இணைந்து விட்டார்.

நாங்கள் இளநீர் அருந்திக் கொண்டிருந்த தருணத்திலேயே பலர் அங்கு வந்து இளநீர் அருந்திச் செல்வதையும் வாங்கிக் கொண்டு செல்வதையும் காணக்கூடியதாக இருந்தது.

ஒரு நாளைக்கு இருபது ரூபாய் மேலதிகமாக வைத்து குறைந்தது நூறு இளநீர் விற்றாலே நிகர இலாபம் இரண்டாயிரம் கிடைக்கும் மாதத்திற்கு அறுபதினாயிரம் கிடைக்கும். ஒரு சிறிய முதலீட்டில் பெரிய இலாபம் மட்டுமல்ல அவர்கள் நாட்டிற்கு வரி செலுத்துபவர்களாகவும் உருமாறி விட்டார்கள்.

நாங்கள் அவர்களை விட மிகப்பெரியளவில் கல்வி கற்று அரச வேலை பெற்று இவ்வாறான முயற்சியாளர்கள் மற்றும் மக்களின் வரிப் பணத்தை சம்பளமாக பெற்று நாட்டிற்கு சுமையாக மாறிக் கொண்டிருக்கின்றோம்…..

உண்மையில் நாம் பெற்ற பட்டங்களே எம்மை தொழில் முயலுனர்களாக மாற இடமளிப்பதில்லை போலும் ஏனெனில் மட்டக்களப்பில் மாத்திரமல்ல உலகின் மிகப் பெரிய தொழில் முயற்சியாளர்கள் அனைவரும் இளவயதில் பட்டம் பெறுவதற்கு நேரம் செலவழித்ததை விட தொழில் முயற்சியிலேயே ஆர்வம் செலுத்தியமையாலேயே இன்று பெரிய வெற்றியாளர்களாக காணப்படுகின்றனர்.

ஒரு நாட்டின் வருமானமானது பெருமளவில் வரி வருமானத்திலேயே தங்கியுள்ளது. இலங்கையைப் பொறுத்தமட்டில் பெருமளவு வருமானமானது அரச ஊழியர்கள் மற்றும் அரசியல் வாதிகளின் சம்பளங்கள் மற்றும் நலனோம்புகை விடயங்களுக்காக பெருமளவில் செலவழிக்கப்படுகின்றது இதன் காரணமாக அபிவிருத்தி மற்றும் பொருளாதார அபிவிருத்தி தொடர்பான விடயங்களில் முதலீடு செய்வதற்காக பின் நிற்க வேண்டிய சூழ்நிலை காணப்படுகின்றது.

இந்நிலை மாற வேண்டுமெனில் மக்களின் மனநிலை மாற வேண்டும் இன மத பேதங்களை ஊட்டுவதை விடுத்து திட்டமிட்ட குடும்பக் கட்டுப்பாடு, தொழில் முயற்சியாளராக உருவாகக் கூடிய வழியை வழங்கும் கல்வியை கற்றல், மக்களுக்காக இன மத பேதம் பாராட்டாத ஊழலற்ற ஆடம்பரமற்ற திறமையான அரசியல் வாதிகளை தெரிவு செய்தல் என்பவற்றினூடாகவே காத்திரமான எதிர்கால சந்ததியை தெரிவு செய்யலாம்.

நண்பர்களே உங்களுக்குத் தெரியுமா அரச அலுவலகங்களில் சேவை பெறுபவர்களை விட சேவை வழங்குபவர்களே அதிகமுள்ளனர் ஒரு சில உத்தியோகத்தர்களிற்கு தாங்கள் பெற்ற பட்டம் தொடர்பிலும் விளக்கமில்லை பிழையற்ற கடிதங்களை எழுதுவதிலும் தெளிவில்லை உதாரணமாக நான் ஒரு நேர்முக தேர்வில் உறுப்பினராக பங்கு பற்றியிருந்தேன் அங்கு ஒரு நேர்முக தேர்வுக்கு வந்தவர் இந்திய அழகப்பா பல்கலைக்கழகத்தில் வரலாறு பாடத்தை பட்டமாக பெற்றிருந்தார் அவரிடம் நானும் நேர்முக தேர்வில் இருந்தவர்களும் இலங்கை மற்றும் இந்தியா தொடர்பான வரலாறு சம்மந்தப்பட்ட சிறிய கேள்விகளை வினாவினோம் அவர் மௌனத்தையே பதிலாக தந்தார் இது தான் பட்டம் பெற்ற இலட்சணமா என ஒரு அவ நம்பிக்கை வந்தது. அதே போல் ஒரு திணைக்களத்தின் நிர்வாக உத்தியோகத்தரை அலுவலக விடயமாக சந்திக்க சென்றிருந்தேன் அப்பொழுது அவர் குறிப்பிட்ட உத்தியோகத்தரை காட்டி சார் இவர் ஒரு கடிதம் கூட எழுத்துப் பிழையின்றி சரிபார்க்க தருவதில்லை என்றார் பின்னர் அவரை நான் வினாவிய பொழுது அவர் பேக்கரியில் வேலை செய்து கொண்டு வெளிவாரியாக பதிவு செய்ததாகவும் குறிப்பிட்டளவு பணம் வழங்கினால் பெரிய சிரமமின்றி பட்டங்களை பெறலாம் எனவும் கூறினார். பார்த்தீர்களா பட்டங்களின் அவல நிலமையை….?

நண்பர்களே பட்டம் என்பது எமது தகுதிகளை உயர்த்துவதற்கான ஓர் ஏணி அது உள்வாரியாயினும் சரி வெளிவாரியாயினும் சரி (உள்வாரி மாணவர்களை விட சிறப்பாக செயலாற்றும் வெளிவாரிப் பட்டதாரிகளும் உள்ளனர் என்பதனை நினைவிற் கொள்க..) அதை வைத்துக் கொண்டு வரி செலுத்துபவராக மாறுவதா அல்லது மற்றவரது வரிப் பணத்தில் தங்கியிருப்பதா என்பதை நீங்களே தீர்மானியுங்கள் ஒன்று மட்டும் என்னால் கூறமுடியும்

உங்களுக்கு வழங்கப்பட்ட பட்டத்தை என்றும் மற்றவர் இகழாத வண்ணம் நடந்து கொள்ளுங்கள் அதுவே நீங்கள் பெற்ற பட்டத்திற்கு வழங்கும் உயர் மரியாதை

கடவுள் என்றும் உங்கள் பக்கம் நிற்பாராக…

Pragash Sinnarajah  முகப்புத்தகத்திலிருந்து.