கிழக்குப் பல்கலைக்கழகத்திற்கு வேந்தர் நியமிக்கப்பட்டதும் 21வது பொதுப்பட்டமளிப்பு இடம்பெறும்

0
717

Easternuni_a(வர்ணன்)

கிழக்குப் பல்கலைக்கழக நிருவாகம்.
கிழக்குப் பல்கலைக்கழகத்திற்கு வேந்தர் நியமிக்கப்பட்டதும் 21வது பொதுப்பட்டமளிப்பு விழா ஏற்கெனவே ஒழுங்கு செய்யப்பட்டதின்படி கோலாகலமாக இடம்பெறும் என்று கிழக்குப் பல்கலைக்கழ நிருவாகம் முடிவெடுத்துள்ளதாக அப்பல்கலைக் கழகத்தின் உபவேந்தர் கலாநிதி தங்கமுத்து ஜயசிங்கம் தெரிவித்தார்..

கடந்த 08.04.2017 திகதியன்று கிழக்குப் பல்கலைக்கழகம் வந்தாறுமூலை வளாக நல்லையா மண்டபத்தில் நடைபெறவிருந்த இவ்வாண்டுக்குரிய                    21வது பொதுப் பட்டமளிப்பு விழா தவிர்க்க முடியாத காரணங்களால் பிற்போடப்பட்டுள்ளதாக பல்கலைக் கழக நிருவாகம் உத்தியோகபூர்வமாக கடந்த 6ஆம் திகதி மாலை அறிவித்திருந்தது.

பிற்போடப்பட்ட பொதுப் பட்டமளிப்பு விழாவிற்கான புதிய திகதி பின்னர் அறிவிக்கப்படும் என்றும் அதில் கூறப்பட்டிருந்தது.
ஆயினும், பல்கலைக்கழகத்தில் பட்டமளிப்பு விழா நடைபெறும் போது சம்பிரதாயப்படி அதன் வேந்தர் பிரசன்னமாகியிருக்க வேண்டும்.
எவ்வாறாயினும், கிழக்குப் பல்கலைக் கழகத்தில் வேந்தராகப் பதவி வகித்த பேராசிரியை  யோகா இராசநாயகத்தின் பதவிக்காலம் ஏற்கெனவே கடந்த ஓகஸ்ட் மாதம் வறிதானதையடுத்து அப்பதவிக்கான புதிய வேந்தர் நியமனம் இன்னமும் இடம்பெறவில்லை.

பல்கலைக் கழக மானியங்கள் ஆணைக்குழுவின் சிபார்சில் பல்கலைக்கழகத்திற்கான புதிய வேந்தர் ஜனாதிபதியினால் விரைவில் நியமிக்கப்படுவார் என்று எதிர்பார்க்கப்படுவதாக உபவேந்தர் ஜயசிங்கம் மேலும் தெரிவித்தார்.

அந்த நியமனம் இடம்பெற்றதும் தாமதமின்றி புதிய வேந்தரின் பிரசன்னத்துடன் பொதுப்பட்டமளிப்பு விழா இடம்பெறும் என்றும் அவர் நம்பிக்கை வெளியிட்டார்.