பண்பாடுகளை பின்பற்ற வேண்டும் இல்லாவிடின் வாழ்வியலை இழக்க நேரிடும்

0
342

தமிழர்களின் பண்பாடுகள், பாராம்பரியங்கள் அழிந்து செல்கின்றன. உண்ணும் உணவிருந்து அணியும் ஆடைவரை மாற்றங்கள் ஏற்பட்டுள்ளன. இதனால் எமது வாழ்வியலை இழக்க நேரிடும் என தமிழ்தேசிய கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர் சீ.யோகேஸ்வரன் தெரிவித்தார்.

முதலைக்குடா ஏகதந்தன் இந்து இளைஞர் அபிவிருத்திச் சங்கத்தின் ஏற்பாட்டில் அண்மையில் நடைபெற்ற சால்வை வெளியீட்டு நிகழ்வில் அதிதியாக கலந்து கொண்டு உரையாற்றுகையிலேயே இதனை குறிப்பிட்டார்.

மேலும் அங்கு அவர் உரையாற்றுகையில், பண்பாடு பாராம்பரியங்கள் ஓர் இனத்தின், மதத்தின், பிரதேசத்தின் அடையாளம். அவை இன்று எம்மிலிருந்து விடுபட்டுச் செல்கின்றது. மாணவர்கள் தொடக்கம் இளைஞர்கள் வரை மதுவுக்கு அடிமையாகியுள்ளனர். இவற்றினை இல்லாமல் ஒழிப்பதற்கு இளைஞர்கள் முன்வர வேண்டும். இல்லையாயின் மண்ணும் பறிபோகும் நிலையேற்படும். மாடு என்பது செல்வம். அச்செல்வத்தினை அறுப்பதற்கு அனுப்பும் துரோக இனமாக நாம் மாறியிருக்கின்றோம். இவ்வாறான துரோக செயல்களில் ஈடுபடுவதற்கு அனுமதிக்க கூடாது. அவ்வாறு ஈடுபட்டால் அவை எமது இனத்தினை வெகுவாக பாதிக்கும். புத்தாண்டு காலத்திலே சைவ உணவு உண்ணவேண்டிய நாம் உயிர்களை பலிகொடுத்து அவற்றினை உண்கின்றோம். நம் உயிர் வாழ்வுக்காக சிறப்பான நாளில் பிற உயிரையெடுப்பது எவ்வகையில் நியாயமானது. பிறக்கும் புதுவருடத்தில் சைவ உணவினை அனைவரும் உட்கொள்ள வேண்டும். என்றார்.