கிழக்கு வேலையில்லா பட்டதாரிகளுக்கு சில ஆலோசனைகள்

0
877

17308701_1344215582311065_4557246127746997350_nகிழக்கு வேலையில்லா பட்டதாரிகளுக்கு சமுக நலன் விரும்பி என்ற வகையில் சில ஆலோசனைகளை வழங்க வேண்டிய கடமை எனக்கு இருக்கின்றது எனவே நான் இதை பதிகின்றேன். சரியான தீர்மானங்களை எடுப்பது நீங்கள் மாத்திரம் தான்..

நீங்கள் பெறுமதியற்ற பட்டத்தை பெற்றிருக்கின்றீர்கள் என்று சொல்பவர்களை நான் வன்மையாக கண்டிக்கிறேன். எவ்வகையான கல்வியாக இருந்தாலும் அது எப்போதுமே சிறந்தது தான். நீங்கள் வீணானவர்கள் கிடையாது. உங்களுடைய வேகத்தினையும், விவேகத்தினையும் புரட்சியான செயற்பாடுகளையும் நான் அவதானித்தவனாக இருக்கிறேன். நீங்கள் உங்களுடைய முயற்சிகளை கை விடவில்லை அது மிகவும் ஒரு பாரிய சக்தியாகும். எத்தனை தோல்விகள் வந்த போதும் உம்முடைய நோக்கத்தை நிறைவேற்ற இரவு பகலாக வீதிகளில் போராட்டங்கள் நடத்தி நீங்கள் பாடுபடுவது உண்மையில் பிரம்மிக்கத்தக்கதாக இருக்கின்றது.

நீங்கள் அனைவரும் கற்றறிந்தவர்கள். 3 அல்லது 4 அல்லது 5 வருடங்கள் என பல்கலைக்கழகங்களில் நீங்கள் உங்களுடைய இளமைக்காலத்தை செலவழித்து பட்டங்களை பெற்றிருக்கின்றீர்கள். இதற்காக பல கோடி ரூபாய்களை அரசாங்கம் உமக்காக செலவிடுகின்றது. இது உண்மையில் பாரியதொரு வாய்ப்பாகும். ஏனெனில் எல்லோருக்கும் இவ் வாய்ப்புக்கள் கிடைப்பதில்லை. முதலில் நீங்கள் ஒரு விடயத்தை புரிந்து கொள்ள வேண்டும். பட்டம் பெற்றுவிட்டால் வேலை தருவோம் என அரசு எப்போதும் கூறியதில்லை. அப்படியென்றால் நான் ஏன் பட்டம் பெற வேண்டும் என்று நீங்கள் என்னைப் பார்த்து கேட்கலாம்.

ஆம். சமுகத்தில் அந்தஸ்தை பெற வேண்டுமாக இருந்தால் ஒன்று செல்வந்தராக இருக்க வேண்டும் அல்லது பட்டதாரியாக இருக்க வேண்டும் அல்லது பதவி இருக்க வேண்டும். இவை இல்லாதவர்களை இந்த சமுகம் தாழ்ந்தவர்களாக பார்க்கின்றார்கள் என்பதை நான் அறியத்தருகிறேன். நீங்கள் சென்று ஒரு பட்டம் இல்லாமல் கல்வி ரீதியான தொழிலை நடத்துபவரை சென்று கேட்டுப்பாருங்கள் சமுகத்தில் பட்டம் இல்லாத காரணத்தினால் சில பொழுதுகளில் அவர்கள் புரக்கணிக்கப்பட்டிருக்கிறார்கள் என்பதை நீங்கள் அறிந்து கொள்வீர்கள். அப்படியானால் நீங்கள் உண்மையில் புன்னியம் செய்தவர்கள்தான். இவ் நாடு சமுகத்தில் உங்களை ஒரு படி உயர்த்தி இருக்கின்றது. பட்டமானது உங்களை அடுத்த கட்டத்திற்கு கொண்டு செல்கிறதே தவிர வேலைவாய்ப்பை பெற்றுத்தரும் என்பதில் எவ்விதமான உறுதிப்பாடும் கிடையாது நீங்கள் அதை எதிர்பார்ப்பதில் எந்த அர்த்தமும் கிடையாது.

உண்மையில் நீங்கள் அனைவரும் சாதிக்க பிறந்தவர்கள். உங்களுக்கு எல்லா விதமான திறமைகளும் இருக்கின்றது. ஆனால் உங்கள் மகத்தான சக்தியை நீங்கள் உங்கள் பிரச்சனைகளை சுயமாக தீர்ப்பதற்கு தவறி விடுகிறீர்கள் என எனக்கு தோன்றுகிறது. முதலில் நீங்கள் உங்களை நம்புங்கள். நீங்கள் Law of Attraction என்கிறதொரு விடயத்தை கேள்விப்பட்டதுன்டா?. சுருக்கமாக கூறினால் நீங்கள் அடைய இருக்கும் இடத்தை ஏற்கனவே அடைந்தது போல் நம்புவதாகும், மனக்கண் கொண்டு பார்ப்பதாகும். உதாரணமாக எனக்கு வேலை கிடைக்கவில்லை என்று கூறுவதற்கு பதிலாக எவ்வாறு நான் வேலையை பெற்றுக்கொள்ள முடியும் என்று உங்களை நீங்களை கேளுங்கள். இது உங்கள் மூளையை சுயமாக தீர்வை கான தூண்டும்.

நான் சொல்ல வரும் விடயம் என்னவென்றால் உங்கள் அனைவரிடமும் கல்வி அறிவு இருக்கின்றது. ஆனால் இந்த அறிவைக்கொண்டு எவ்வாரு பணம் சம்பாதிப்பது என்பதை அறிய முன்னர் உங்கள் காதுகளுக்கும் கண்களுக்கும் எதிர்பாராத விதமாக முத்திரையிட்டு விட்டீர்கள். அதனால் தான் பல வருடங்களை நீங்கள் இழந்து விட்டீர்கள். உண்மையில் மன வேதனையாக இருக்கின்றது. சென்ற காலத்தையும் வாயிலிருந்து வெளிப்பட்ட வார்த்தையையும் திரும்பி பெற முடியாது.

ஆனால் வாய்ப்புக்களை நாம் மீள உருவாக்க முடியும். உங்களுக்கு தெரியுமா KFC நிருவனத்தின் ஆரம்ப கர்த்தா கர்ணல் சண்டர்ஸ். அவர் 65 வயதாக இருக்கும் போது அவருக்கு வாழ்க்கை வெறுத்து போய் தற்கொலை செய்ய இருந்தார் ஆனால் அவர் துரதிஷ்டசாளி அவர் பிறந்தது முதல் தோல்வியை மட்டுமே பார்த்தவர் பாவம் அவர் தற்கொலை செய்வதில் கூட அவர் தோற்றுவிட்டார். பின்னர் இவ்வாழ்வை நான் விரும்பியது போல் மாற்ற முடியும் என தனது 65 ஆவது வயதில் தான் உணர்ந்தார். கோழி பொரியலுக்கான இரகசிய பார்முலா ஒன்றை கண்டரிந்து அதை ஏற்றுக்கொள்ள வைக்க 1002 தடவைகள் “இல்லை” என்ற வார்த்தைகளால் தோல்வியுற்று விடாமுயற்சியுடன் செயற்பட்டு 1002 தோல்விகளின் பின்னர் “ஆம்” என்ற வார்த்தை வந்தது. இதனால் இன்று மாபெரும் KFC Franchise உருவானது.

எனவே உங்களிடம் திறமைகள் மறைந்து இருக்கின்றது. நீங்கள் உண்மையில் எதை காதல் (Passion) செய்கிறீர்கள் என்பதை கண்டறியுங்கள். அதனை பின் தொடருங்கள். அதற்காக சுய அபிவிருத்தியில் (Personal Development) தினமும் ஈடுபடுங்கள். நீங்கள் கர்ணல் சண்டர்ஸ் ஐ விட இளமையானவர்களாக இருக்கின்றீர்கள். உங்கள் குருதி சுட்டெரிக்க கூடியதாக இருக்கின்றது.

உங்கள் வேகம் வியக்கத்தக்கது. எனவே சற்று சிந்தியுங்கள். உங்கள் போராட்டங்களை நிறுத்தி விடுங்கள் என நான் கூறவில்லை. முடிவுகளை நீங்களே எடுங்கள். எந்த பாதையில் நீங்கள் செல்ல வேண்டும் என்பதை முடிவெடுங்கள். உங்களுடைய பிள்ளைகளும் இவ்வாறு ஆர்ப்பாட்டங்கள் செய்து எதிர்காலத்தில் வேலை பெறும் நிலையை உருவாக்க போகிறீர்களா? அல்லது இனி வரும் சமுதாயத்திற்கு வேலை வாய்ப்புக்களை நீங்களே வளங்க கூடிய புரட்சி மிக்க சமுதாயமாக மாறப்போகிறீர்களா? இந்நாடு செல்வந்த நாடாக மாறுவதும் அல்லது கடன் பட்ட ஏழை நாடாக இருப்பதும் உங்கள் தீர்மானத்தில் தான் இருக்கின்றது.

நீங்கள் ஒரு முயற்சியாளராக மாறப்போகின்றீர்கள் என்றால் உங்களுக்கான உதவிகளை வழங்கும் அரசு மற்றும் தனியார் நிறுவனங்கள் எம் நாட்டில் இருக்கின்றது எனவே அது சம்மந்தமாக நீங்கள் அறிந்து கொள்ளுங்கள். இது என்னுடைய ஆலோசனை மாத்திரம் தான் முடிவுகளை எடுப்பது உங்கள் கையில்.

என்றும் மக்களின் எதிரொலியாய்
MIM Zarook (Justice of Peace)
பிராந்திய அமைப்பாளர் – மண்முனைப்பற்று
ஸ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரஸ்
காங்கேயனோடை