மட்டுநகர் சொறிக்கல்முனை திருச்சிலுவை திருத்தலம்! ஆன்மீக பயணத்தின் ஓர் கலங்கரை விளக்கு.

0
855

எதிர்வரும் 14 வெள்ளிக்கிழமை பெரிய வெள்ளி நிகழ்வு

மட்டுநகர் சொறிக்கல்முனை திருச்சிலுவை திருத்தலம்! ஆன்மீக பயணத்தின் ஓர் கலங்கரை விளக்கு.
இறையனுபவம் என்பது வெறும் அறிவல்ல அது விபரிக்க இயலாத உள்ளன்பு இவ்வனுபவத்தை அறிந்து விளக்குவது கடினம் தங்கள் இயல்புக்கு மேலான ஆற்றல் தங்களைச் சூழ்ந்து கொள்வதை இறையனுபவம் உணர்த்துகின்றது இந்த இறையனுபவத்தை பெறுவதற்கும் தங்களது வாழ்விலும் வரலாற்றிலும் உடனிருந்து செயற்படும் இறைவனை தங்கள் மனங்களில் அனுபவித்து நிறைவு காண மக்களுக்கு உதவுவதே சமயங்களின் தலையாய கடமையாகும்..
இவ் அனுபவத்தைப் பெற கத்தோலிக்கத் திருச்சபையானது ஒரு வருட காலத்தை திருவருகைக்காலம், பொதுக்காலம், தவக்காலம் என மூன்று பிரிவுகளாக பிரித்து நம்முடன் பயணிக்கின்ற இறைவனை நாம் அனுபவிக்க எம்மை ஆயத்தம் செய்ய உதவுகின்றது.
அந்த வகையில் தவக்காலமெனத் தரப்படுகின்ற நாற்பது நாட்கள் ஓர் கிறிஸ்தவனை செபத்திலும் தபத்திலும் தம்மை ஈடுபடுத்தி மனத்தைப் புடம் போட்டு நமக்காக மரித்த இயேசுவின் ஆழ்ந்த அன்பை உணர அழைக்கின்ற காலமாக அமைகின்றது.
இத்தவக்காலத்தின் உச்சகட்டமே பெரிய கிழமை என அழைக்கப்படுகின்ற இறுதி நாட்களாகும். அந்த இறுதி நாட்களுக்குள் ஒன்றாக வருகின்ற பெரிய வெள்ளிக்கிழமையில்தான் அநீதிகளாலும் அக்கிரமங்களாலும் ஒடுக்கப்பட்ட மக்களோடு தாம் கொண்டிருந்த உறவின் உச்சகட்டமாகவும் அப்பா இறைவனோடு தாம் கொண்டிருந்த அன்புறவின் உச்சமாகவும்  “ என் விருப்பப்படியல்ல. உம் விருப்பப்படி நிகழ்ட்டும்” (மாற் 14:36) என இயேசு தம் வாழ்வையும் உயிரையும் கல்வாரியில் அர்ப்பணம் செய்தார். இந்த அர்ப்பண நிகழ்வானது கத்தோலிக்கத் திருச்சபையில் திருச் சிலுவைப்பாதை என அழைக்கப்பட்டு ஓர் பக்தி முயற்சியாக பாரம்பரியமாக கடைப்பிடிக்கப்பட்டு வருகின்றது.
இப்பக்தி முயற்சியானது வருடாவருடம் பக்தி பூர்வமாக மட்டக்களப்பு மறைமாவட்டத்தில் அமைந்துள்ள சொறிக்கல்முனை திருச்சிலுவை திருத்தலத்தில் இன, மத, மொழி வேறுபாட்டைக் கடந்த ஓர் பக்தி முயற்சியாக அனுஷ்டிக்கப்பட்டு வருகின்றது. மட்டக்களப்பு மறைமாவட்டத்தில் கல்முனைக்குத் தென்மேற்காக அமைந்துள்ள சொறிக்கல்முனை கிராமமானது கத்தோலிக்க மக்களின் விசுவாச வாழ்விற்கு ஊன்று சக்தியாக திகழ்கின்றது இங்கு அமைந்துள்ள திருச்சிலுவை ஆலயமே இலங்கையில் முதன்முதலாக அமைக்கப்பட்ட திருச்சிலுவை ஆலயமாகும்.
எமது மீட்பராம் இயேசு மரித்த சிலுவை மரத்தின் சிறுதுண்டு ரோமாபுரியிலிருந்து கோவைக்குக் கொண்டு வரப்பட்டு பேரருள் திரு வெற்றிக்கனி ஆயர் அவர்களால் கோவையிலிருந்து பெறப்பட்டு இவ் சொறிக்கல்முனை திருச்சிலுவை திருத்தலத்தில் பேணப்பட்டு வருகின்றது.
அத்துடன் புனித யோசேவ்வாஸ் அடிகளார் 1710ம் ஆண்டில் இக்கிராமத்திற்கு வருகை தந்து  திருப்பலி நிறைவேற்றியதும் சொறிக்கல்முனை மண்ணிற்குக் கிடைத்த மாபெரும் பாக்கியம் என வரலாற்று சான்றுகள் கூறுகின்றன.
இவ்வாலயத்தில் பேணப்பட்டு வரும் கல்லரை ஆண்டவர் சொரூபமானது இந்தியாவிலுள்ள தூத்துக்குடி எனும் இடத்திலிருந்து கொண்டு வரப்பட்டதாகும் பல புதுமைகளைப் புரிந்து வரும் இக் கல்லரை ஆண்டவர் வருடந்தோறும் இடம்பெறும் பாஸ்கா நிகழ்வுகளில் அறைந்து இறக்குவது பக்தியாகவும் விமர்சனையாகவும் இடம்பெறும் ஓர் இறையனுபவமாகும்.
அன்றாட வாழ்வின் சுமைகளாலும் வேதனைகளாலும் அசுர வேகத்தில் மாறி வருகின்ற உலகின் சவால்களாலும் தடுமாறித் தவிக்கும் உள்ளங்களுக்கு வாழிவின் ஒளியைக் காட்டுகின்ற இயேசுவின் அன்பின் ஆழத்தையும் இரக்கத்தையும் மன்னிப்பையும் அனுபவிக்கத் தூண்டுகின்ற ஓர் இறை அனுபவமாக சிலுவைப்பாதை நிகழ்வு பாலைவனத்தில் ஓர் தடாகம் போல் அமைகின்றது.
அம்பாறை மாவட்டத்தில் இயற்கை எழில் கொஞ்சும் வீரமுனைச் சந்தியிலிருந்தும் 6ம் கொலனி புனித அன்தோனியார் ஆலயத்திலிருந்தும் பெரிய வெள்ளிக்கிழமை காலை 6 மணிக்கு ஆரம்பிக்கப்படும் சிலுவைப்பாதையானது திருச்சிலுவைத் திருத்தலத்தில் புதிதாக அமைக்கப்பட்டுள்ள கல்வாரியில் நிறைவு பெறுகின்றது.
இச் சிலுவைப்பாதையைத் தொடர்ந்து இத் திருத்தலத்தின் விசேட அம்சமாக கல்லறை ஆண்டவர் மக்களின் வழிபாட்டிற்காக பேழையில் இருந்து வெளியில் எடுத்து ஆலயத்தில் வைக்கப்படும் நிகழ்வானது ஒரு வருடத்தில் ஒரு தடைவ மாத்திரமே நிகழ்கின்றது.
இந்நிகழ்வில் பல புதுமைகள், குணமாக்கல்கள், மனமாற்றங்கள் இடம் பெற்று வருவது வழமை. பல தேவைகள், வேண்டுதல்கள், ஏக்கங்களை சுமந்து வருகின்ற பக்தர்களும் ஆசிபெற்றவர்களும் குணம் அடைந்தவர்களும் கல்லரை ஆண்டவருக்கு நன்றி கூற திரண்டு வருவதும் இவ் ஆலயத்தின் முக்கியதோர் அம்சமாகும்.
இலங்கையில் பல பாகங்களிலிருந்தும் வருகை தருகின்ற பக்தர்கள் இன, மத, மொழி வேறுபாட்டைக் கடந்து அந்த வரம்பற்ற உண்மைத் தெய்வத்தின் சந்நிதானத்திலே மன அமைதி பெறுவதை கண் கூடாகக் காணலாம். நமது இருப்பின் ஊற்று மூலமும் அடித்தளமுமாகிய அந்த இறைவனின் ஆழ்ந்த அன்பின் வெளிப்பாடாக இந்த பெரிய வெள்ளி நிகழ்வுகள், ஆராதனைகள் இறைவனை உணர்வு பூர்வமாக நாம் அனுபவிக்க எம்மைத் தூண்டுகின்றது.
பெரிய வெள்ளி மாலை 7 மணிக்கு இடம்  பெறும் பாரம்பரிய நிகழ்வான திருப்பாடுகளின் காட்சி இயேசு மக்களோடு இருப்பவர் அவர்களுக்காக உயிர் துறந்தவர் என்பதை மேலும் எமக்கு உணர்த்தி நிக்கின்றது.
மக்களின் இன்பத்திலும் துன்பத்திலும் உயர்விலும் தாழ்விலும் ஏக்கத்திலும் எதிர்ப்பார்ப்பிலும் பங்கேற்ற இயேசுவின் நெருக்கமான உறவையும் தோழமையையும் பாசப்பிணைப்பையும் சிலுவையின் மூலம் உலகிற்கு உணர்த்திய சான்றாக இத் திருப்பாடுகளின் காட்சி அமைந்திருப்பது பக்தர்களின் பக்தியை பல மடங்காக்குகின்றது இத் திருப்பாக்களின் காட்சியினைத்; தொடர்ந்து இடம்பெறும் ஆசந்தி நிகழ்வுகள் பெரிய வெள்ளின் இறுதி நிகழ்வாக அமைகின்றது.
வழிபாடுகள், ஆராதனைகள், அநுபவங்கள் எல்லாமே ஒன்றோடு ஒன்று பின்னிப் பிணைந்த நிகழ்வுகள். “இதை என் நினைவாக செய்யுங்கள்” என்று தம் வாழ்வை  இவ் உலகிற்கு விட்டுச் சென்ற இயேசுவின் நினைவாகவே வழிபாடுகள் அமைந்துள்ளன நினைவுகள் தருகின்ற சுகங்கள் மட்டுமல்ல, நினைவுகள் தருகின்ற சுமைகள், சவால்கள் ஆகிய அனைத்துமே வழிபாட்டில் இறைவன் சந்நதியில் இறையனுபவத்திற்கு இட்டுச் செல்லும் ஊன்று கோல்களாகும் நினைவுகள் அனைத்துமே எமது வாழ்வின் இறந்த காலங்கள் அல்ல மாறாக அவை எம்மோடு பயணிக்கின்ற நண்பர்கள், பாடம் புகட்டுகின்ற ஆசான்கள் ஒப்பற்ற சக்திகள் என்றே கூறலாம். இயேசுவின் நினைவாக நாம் எடுக்கின்ற வழிபாடுகள் அனைத்தும் எம்மை இறையனுபவத்திற்கு வழிநடாத்துகின்ற வழிகாட்டிகள் இயேசுவின் இறப்பு உயிர்ப்பு என்பது எல்லையில்லா இறைவனின் அழைப்பிற்கு முழுமையாக தம்மை கையளித்த அன்பு மகனின் எழிலார்ந்த செயல் வாழ்க்கையின் நிறைவு என்றால் என்ன என்பதற்கு இலக்கணமாக அமைந்தது அந்த செயலை திரும்பவும் தியானிக்க எம்மை அழைப்பதுதான் பெரிய வெள்ளி நிகழ்வுகள் அந்த இறைமகனின் அன்பில் என்றும் வாழ்வோம் நலம் பெறுவோம்  மன்னிப்புப் பெறுவோம்  மகிழ்வுடன் வாழ்வோம்.

(அருட்சகோதரி  என்.சிறியபுஷ்பம் கோலிக்குரோஸ் வித்தியாலய அதிபர்)goodfriday-a church-a